செபிக்கும் மனிதர், அடிப்படை உண்மைகளைப் பாதுகாக்கின்றார்

மனித வாழ்வுக்கு, எச்சூழலிலும் ஆதரவும், பாதுகாப்பும் அளிக்கப்படவேண்டும் என்பதையும், மனிதர் அனைவரும், சகோதரர் சகேதரிகளாக, படைப்பைப் பாதுகாக்க வேண்டுமென்பதையும் வலியுறுத்தி, மே 23, இச்சனிக்கிழமையன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“செபிக்கும் மனிதர், அடிப்படை உண்மைகளைப் பாதுகாக்கின்றனர், இந்நாள்களின் மனத்தளர்வுகள், துன்பங்கள் மற்றும், சோதனைகள் போன்ற அனைத்தின் மத்தியில், மனித வாழ்வு, நாம் வியந்துநோக்கும் இறையருளால் நிறைந்துள்ளது என்பதை, அவர்கள் அனைவருக்கும் மீண்டும், மீண்டும் எடுத்துரைக்கின்றனர், எந்நிலையிலும், வாழ்வு ஆதரவளிக்கப்படவேண்டும் மற்றும், பாதுகாக்கப்படவேண்டும்” என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “படைப்பைப் பாதுகாத்தல், வாழ்வுமுறையின் ஒரு பகுதியாகும். இது, ஆன்மீக ஒன்றிப்புடன், ஒன்றுசேர்ந்து வாழ்வதற்குரிய திறனை உள்ளடக்கியுள்ளது. நம் அனைவருக்கும் பொதுவான ஓர் இறைத்தந்தை இருக்கிறார் என்பதை இயேசு நினைவுபடுத்துகிறார், இதுவே நம்மை, சகோதரர், சகோதரிகளாக (உடன்பிறந்தவர்களாக) வாழ வைக்கின்றது” என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

இறைவேண்டல், அடிப்படை உண்மைகளைப் பாதுகாக்கின்றது என்று பொருள்படும் ஹாஷ்டாக்குடன் (#Prayer) தன் முதல் டுவிட்டர் செய்தியையும், Laudato si’ திருமடல் வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி கடைப்பிடிக்கப்பட்டுவரும் Laudato Sí வாரம் பற்றிய (#LaudatoSi5) ஹாஷ்டாக்குடன், தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியையும் திருத்தந்தை வெளியிட்டுள்ளார்.

திருத்தந்தையின் சந்திப்புக்கள்

மேலும், மே 23, இச்சனிக்கிழமை காலையில், வத்திக்கானில், திருப்பீடத்தின் அர்ஜென்டீனா நாட்டு புதிய தூதர் Maria Fernanda Silva அவர்களிடமிருந்து, நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் லாட்சியோ மாநிலத் தலைவர் Nicola Zingaretti அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இன்னும், இதே நாளில், ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet அவர்களையும், இத்தாலியின் Castellaneta மறைமாவட்ட ஆயர் Claudio Maniago அவர்களையும், திருத்தந்தை சந்தித்தார்.

Comments are closed.