மே 21 : நற்செய்தி வாசகம்

நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 16-20
அக்காலத்தில்
இயேசு தம் சீடரிடம்: “இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்” என்றார். அப்போது அவருடைய சீடருள் சிலர், “ ‘இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்’ என்றும் ‘நான் தந்தையிடம் செல்கிறேன்’ என்றும் சொல்லுவதன் பொருள் என்ன?” என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். “இந்தச் ‘சிறிது காலம்’ என்பது என்ன? அவர் பேசுவது நமக்குப் புரியவில்லையே” என்றும் பேசிக்கொண்டனர்.
அவர்கள் தம்மிடம் கேள்வி கேட்க விரும்புவதை அறிந்த இயேசு அவர்களிடம் கூறியது: “ ‘இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்’ என்று நான் சொன்னதைப் பற்றி உங்களிடையே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————–
யோவான் 16: 16-20
“துயரம் மகிழ்ச்சியாக மாறும்”
நிகழ்வு
ஆற்றங்கரையோரமாக இருந்த ஆலமரத்தடியில் துறவி ஒருவர் இருந்தார். அவருடைய போதனை பலரையும் கவர்ந்திழுப்பதாக இருந்தது. அவருடைய போதனையால் தொடப்பட்ட அவ்வூரில் இருந்த ஒரு செல்வந்தரின் மகன் அவருடைய சீடராகலாம் என்று முடிவுசெய்து, எல்லாவற்றையும் துறந்துவிட்டு, அவருடைய சீடரானான்.
துறவியின் சீடராகச் சேர்ந்த பிறகு அந்த இளைஞன் மிகவும் பணிவோடு துறவிக்கு ஒத்தாசை புரிவது; அவருக்கு உணவு வாங்கித் தருவது; அவர் களைப்புற்று இருக்கின்ற நேரத்தில், மக்களுக்குப் பதில் போதிப்பது என்று பற்பல பணிகளைச் செய்து வந்தான். இதற்கு நடுவில் அந்த இளைஞனுக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. தொடக்கத்தில் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த அவன், அது தீராதவலியான பின்பு, அது நீங்கவேண்டும் என்று அவன் இறைவனிடம் தொடர்ந்து மன்றாடிவந்தான். அப்படியிருந்தும் இறைவன் அவனுடைய தீராத வயிற்றுவலியை அவனிடமிருந்து நீக்கவில்லை. இதனால் அவனுக்கு இறைவனுக்குச் சிறிது வருத்தமும்கூட.
இப்படி இருக்கையில் ஒருநாள் அவன் தன்னுடைய குருவிற்கும் தனக்கும் சேர்த்து உணவு வாங்குவதற்காக ஊருக்குள் சென்றான். அவன் ஊருக்குள் சென்றபொழுது சிறுமி ஒருத்தி தன்னுடைய தோழிகளோடு மிகவும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தாள். இக்காட்சிக் கண்ட அந்த இளைஞனின் உள்ளத்தில் உற்சாகம் தொற்றிக்கொண்டது. சிறிதுநேரத்திலேயே அவன் கண்ட காட்சி அவனை வியப்படைய வைத்தது. ஆம், உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமியின் ஒரு கால் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
உடனே அந்த இளைஞன் சிந்திக்கத் தொடங்கினான்: “இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தச் சிறுமியே இவ்வளவு உற்சாக இருக்கும்பொழுது, வயிற்றுவலிக்காக இப்படி வருத்ததோடு இருப்பதா…? கூடாது” என்று முடிவுசெய்தவனாய், தனக்கு வந்திருக்கும் வயிற்றுவலியைப் பெரிதாக நினைக்காமல், தனக்குக் கை, கால் நன்றாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைந்தான்.
இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞன், அதாவது சீடன் தனக்கு இருந்த வயிற்றுவலியை மட்டும் நினைத்துக் கொண்டிருந்தபொழுது, துக்கத்தோடும் வருத்தத்தோடும்தான் இருந்தான். எப்பொழுது அவன் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியைப் பார்த்துவிட்டு, தனக்கு கை, கல் நன்றாக இருக்கின்றன என்று நினைத்தானோ அப்பொழுது மகிழ்ச்சியடைந்தான். நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம் “உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்” என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவை பிரிந்திருக்கும் அந்தச் சிறிதுகாலம்தான் துயரம்
நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம், “இன்னும் சிறிதுகாலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிதுகாலத்தில் என்னைக் காண்பீர்கள்” என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல், அவற்றின் பொருள் என்ன என்று சீடர்கள் இயேசுவிடம் கேட்கின்றார்கள்.
இயேசு குறிப்பிடுகின்ற ‘சிறிதுகாலம்’ என்பதை இரண்டு விதங்களில் எடுத்துக் கொள்ளலாம். அவருடைய இறப்புக்கும் உயிர்ப்பும் இடையே உள்ள காலம் சிறிதுகாலம் என்று ஒருவிதத்திலும், அவருடைய உயிர்ப்புக்கும் இரண்டாம் இரண்டாம் வருகைக்கும் இடையே உள்ள காலம் சிறிதுகாலம் என்று இன்னொரு விதத்திலும் எடுத்துக்கொள்ளலாம். எப்படி எடுத்துக்கொண்டாலும், இயேசு கூறுகின்ற இந்தச் ‘சிறிதுகாலத்தில்’ எதிரிகளிடமிருந்தும் பகைவர்களிடமிருந்தும் அவருடைய சீடர்கள் நிறைய எதிர்ப்புகளையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளவேண்டி வரும். அதனால் அவர்கள் அழுது, புலம்பக்கூடிய சூழ்நிலைகூட வரும். அதைதான் இயேசு, “நீங்கள் அழுவீர்கள்; புலம்புவீர்கள்; அப்பொழுது உலகம் மகிழும்” என்கின்றார்.
இயேசுவை மீண்டும் காணும்பொழுது மகிழ்ச்சி உண்டாகும்
புயலுக்குப் பின்னே அமைதி என்பது போல், அழுகைகையும் புலம்பலுக்கும் பின்னால், மகிழ்ச்சி பிறக்கும் என்கின்றார் இயேசு. ஆம், சீடர்கள் எதிரிகளிடமிருந்தும் தங்களை வெறுப்பவர்களிடமிருந்தும் பல்வேறு பிரச்சனைகளையும் இடர்களையும் சந்தித்தாலும், அவையெல்லாம் நிரந்தரமல்ல; மாறாக, அவையெல்லாம் சீடர்கள் தன்னைக் காணுகின்றபொழுது மகிழ்ச்சியாக மாறிவிடும் என்கின்றார் இயேசு. இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகள், ‘இதுவும் கடந்து போய்விடும்’ என்ற வார்த்தைகளை நமக்கு நினைவுபடுபவையாக இருக்கின்றன. சீடர்கள் இயேசுவைப் பிரிந்திருக்கும் காலத்தில் துன்பங்களைச் சந்திக்கலாம்; ஆனால், அந்தத் துன்பங்கள் எல்லாம் அவர்கள் இயேசுவைக் காணுகின்றபொழுது மகிழ்ச்சியாக மாறிவிடும்.
நம்முடைய வாழ்விலும் நாம் சந்திக்கின்ற துக்கம், துயரம், தோல்வி அனைத்தும் நிரந்தரம் கிடையாது; அவையெல்லாம் மகிழ்ச்சியாக மாறும். இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது. அதற்கு நாம் ஆண்டவரில் முழுமையான நம்பிக்கை வைத்து, இறுதிவரை மனவுறுதியோடு இருக்கவேண்டும் (மத் 24: 13)
நாம் ஆண்டவர்மீதுகொண்ட நம்பிக்கையில் இறுதிவரை மன உறுதியோடு இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்’ (பிலி 4: 4) என்பார் பவுல். ஆகையால், நாம் நம்முடைய வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் ஆண்டவரோடு இணைந்திருப்போம். அதன்வழியாக மகிழ்வான வாழ்வையும் இறையருளையும் நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.