நற்செய்தி வாசக மறையுரை (மே 19)

பாஸ்கா காலம் ஆறாம் வாரம் செவ்வாய்க்கிழமை
யோவான் 16: 5-11
“ஏன் துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள்?”
நிகழ்வு
அசிசி நகர்ப் புனித பிரான்சிசின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு இது. ஒருநாள் இவர் தன்னுடைய சபைச் சகோதரர் ஒருவரைப் பார்க்க நேர்ந்தது. அவர் மிகவும் கவலை தோய்ந்த முகத்தோடு இருப்பதைப் பார்த்துவிட்டுப் பிரான்சிஸ் அந்தச் சகோதரரிடம், “கடவுளின் அடியவர் இப்படிக் கவலை தோய்ந்த முகத்தோடு இருக்கக்கூடாது; ஒருவேளை கவலை தோய்ந்த முகத்தோடு கடவுளின் அடியவர் ஒருவர் இருந்தால், அவர் கடவுளின் அடியவரே கிடையாது” என்றார். இதற்குப் பின்பு அந்தச் சகோதரர் தன்னுடைய கவலையை மறந்து மகிழ்ச்சி கொள்ளத் தொடங்கினார்.
பிரான்சிசின் சபையில் இருந்த சகோதரர், எப்படிக் கடவுளின் அடியவராக இருந்தும் கவலைகொண்டாரோ, அப்படி இயேசுவின் சீடர்கள், அவர்கள் இயேசுவின் சீடர்களாக இருந்தாலும், இயேசு விட்டுப் பிரியப்போகிறார் என்று நினைத்துத் துயரத்தில் மூழ்குகின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு அவர்களுக்குச் சொல்லும் பதிலென்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு சொன்னதைப் புரிந்துகொள்ளாமல் துயரத்தில் மூழ்கிய சீடர்கள்
இயேசு தன்னுடைய சீடர்களிடம், “இப்பொழுது நான் என்னை அனுப்பியவரிடம் போகிறேன்” என்கிறார். இதைக் கேட்டு அவருடைய சீடர்கள் துயரத்தில் மூழ்கத் தொடங்குகின்றார்கள்.
இயேசு தன்னுடைய சீடர்களிடம் என்னை அனுப்பியவரிடம் போகிறேன் என்று சொன்னது, உண்மையில் அவருடைய சீடர்களைத் துயரத்தில் மூழ்கவைக்கும் செய்தியா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், இயேசு தன்னை அனுப்பியவரிடம் செல்வதற்கு முன்பாகப் பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும். இயேசு சிலுவையில் அறையப்பட்டால்தான் இவ்வுலகிற்கு மீட்பளிக்க விரும்பிய தந்தையின் திருவுளம் நிறைவேறும். அப்படியானால், இயேசு தன்னை அனுப்பியவரிடம் போகிறேன் என்று சொன்னதைக் கேட்டு அவருடைய சீடர்கள் மகிழ்ந்திருக்கவேண்டும். அவர்களோ மகிழாமல், துயரத்தில் மூழகியதால்தான், இயேசு அவர்களைப் பார்த்து, “உங்களுள் எவரும், ‘நீர் எங்கே போகிறீர்?’ என்று என்னிடம் கேட்காமலேயே நான் சொன்னவற்றைக் குறித்துத் துயரத்தில் மூழ்கியுள்ளர்கள்” என்று வியக்கின்றார்.
இயேசு போனால்தான் சீடர்கள் பயனடைய முடியும்
“என்னை அனுப்பியவரிடம் போகிறேன்” என்று இயேசு சொல்ல, அவருடைய சீடர்கள் துயரத்தில் மூழ்கத் தொடங்கியதும், இயேசு அவர்களைத் தேற்றும் விதமாக, “நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார்” என்று கூறுகின்றார்.
ஆம். இயேசு அவரை அனுப்பிய தந்தையிடம் சென்ற பிறகே தூய ஆவியார் சீடர்கள்மீது இறங்கி வருகின்றார். தூய ஆவியார் வந்த பின்னரே, அதுவரைக்கும் யூதர்களுக்கு அஞ்சி, அறைக்குள் தங்களை அடைத்துக்கொண்டு வாழ்ந்த சீடர்கள், துணிவோடு மக்களுக்கு முன்பாகப் பேசத் தொடங்குகின்றார்கள். ஆகையால், இயேசு தன்னுடைய சீடர்களை விட்டுப் பிரிந்த பின்பு வரும் தூய ஆவியாரால் பயனடைவார்கள் மிகுந்த பயனடைவார்கள் என்பது உறுதி.
தூய ஆவியாரின் வருகையால் சீடர்கள் பெறும் பயன்கள்
தான் சீடர்களை விட்டு, தந்தையிடம் சென்ற பின், வரும் தூய ஆவியாரால் சீடர்கள் அடைய இருக்கும் நன்மைகளை, இயேசு இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் எடுத்துக் கூறுகின்றார். “அவர் வந்து பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துச் சொல்வார்” என்று இயேசு தூய ஆவியாரைக் குறித்துச் சொல்லும் வார்த்தைகள், தூய ஆவியார் வந்து மக்களுக்குச் சரியானதை எடுத்துச் சொல்வார் என்ற உண்மையை விளக்குவதாக இருக்கின்றன.
மக்கள் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை; அவரிடம் நம்பிக்கை கொள்ளவுமில்லை (யோவா 3:18). இதைப் பாவம் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்களை மனமாற்றத்திற்குத் தூய ஆவியார் இட்டுச் செல்வார் என்று சொல்லும் இயேசு, அவர்களுக்கு நீதி எது என்பதையும் அவர் வெளிப்படுத்துவார் என்று சொல்கின்றார். மட்டுமல்லாமல், இவ்வுலகின் தலைவன் தண்டனை பெற்றுவிட்டான் என்றும் தூய ஆவியார் எடுத்துச் சொல்வார் என்கின்றார் இயேசு.
இவ்வாறு இயேசு தன்னுடைய சீடர்களிடம், அவர்கள் தன்னுடைய பிரிவை நினைத்துத் துயரத்தில் மூழ்கவேண்டாம் என்றும், தூய ஆவியாரின் வருகையால் அவர்கள் மிகுந்த பயனடைவார்கள் என்றும் கூறுகின்றார். நாம்கூட பல நேரங்களில் இயேசுவின் சீடர்களைப் போன்று இறைவன் நம்மோடு இல்லையே என்று கலக்க முறலாம்; ஆனால், இறைவன் நம்மோடு எப்பொழுதும் இருக்கின்றார் என்பதை உண்மை. ஆகையால், நாம் இறைவனின் துணையை நம்பி அவருடைய வழியில் எப்பொழுதும் நடப்போம்.
சிந்தனை
‘அவர்கள் முன் அஞ்சாதே, ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன்’ (எசா 1:8) என்கிறார் ஆண்டவர். ஆகையால், நாம் இறைவன் நம்மோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு நம்முடைய வாழ்க்கையைத் துணிவோடு எதிர்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.