தேவமாதாவின் வணக்கமாதம் – மே 18

திருக்குடும்பமாகிய சேசுநாதர், தேவமாதா, சூசையப்பர் இந்த உலகத்தில் சஞ்சரித்ததின் பேரில்!
திருக்குடும்பத்தில் தரித்திரத்தின் நேசம்!
திருக்குடும்பமாகிய சேசுநாதரும், தேவமாதாவும், அர்ச். சூசையப்பரும் உலக சம்பத்துக்களை விரும்பாமல், சர்வேசுரனை மாத்திரமே விரும்பித் தரித்திரத்தையும், தரித்திரத்துக்கடுத்த இக்கட்டுகளையும் துயரங்களையும் அனுபவித்தார்கள் என்பதற்கு சந்தேகமில்லை. ஆகிலும் உலக செல்வங்களைப் பயன்படுத்தாமல் ஞான நன்மைகளை மட்டும் தேடிச் சகல புண்ணியங்களையும் செய்து கொண்டு வந்ததினால், மற்றக் குடும்பங்களைவிட அத்திருக் குடும்பமானது பேரின்ப பாக்கியமுள்ளதுமாய்ச் சர்வேசுரனுக்கு உகந்ததுமாய்ச் சம்மனசுக்களால் வணங்கப்படுவதற்குப் பாத்திரமானதுமாக இருந்தது. ஆதலால் இந்த உலகில் சர்வேசுரனுடைய வரப்பிரசாதமும், புண்ணியமும், சம்பத்து முதலான உலக நன்மைகளால் மெய்யான பாக்கியம் வரமாட்டாதென்று அறியக்கடவீர்களாக.
உலக மகிமையின் வெறுப்பு!
பிறந்த நாள் முதற்கொண்டு சேசுநாதர் அற்புதங்களைச் செய்யும் வல்லபமுள்ளவராய் இருந்த போதிலும், அற்புதங்களைச் செய்யத் தாம் குறித்த காலம் இன்னும் வராததினால், நமக்குத் தாழ்ச்சியென்னும் புண்ணியத்தைக் காண்பிக்கிறதற்காகத் தமது வல்லமையை மறைத்துக்கொண்டு, உலக கீர்த்தியை வெறுத்து, வெளிச் செல்லாமல் மனிதர்களுக்கு அறியாதவர் போல் இருந்தார். திவ்விய சேசு தமது திருமாதாவுடன் வளர்ப்புத் தந்தையாகிய அர்ச். சூசையப்பருடனும் தங்கியிருந்து முப்பது வயது வரையில் அவர்கள் சொற்கேட்டு அவர்களுக்கு உதவியாக அவர்களோடுகூட வேலை செய்து, அவர்கள் வருத்தப்படும் சமயத்தில் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, பணிவான குணமுள்ள மகன் தன்னைப் பெற்ற தாய் தந்தையர்க்கு கீழ்ப்படிவதுபோல் இருவருக்கும் கீழ்ப்படிந்து வந்தார். கன்னிமாமரியும் அர்ச். சூசையப்பருமோவென்றால், மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனுமான சேசுநாதர் தங்களுக்கு மிகுந்த தாழ்ச்சியோடு கீழ்ப்படிவதைக்கண்டு எவ்வளவு அதிசயப்பட்டார்களென்று எடுத்துரைக்க முடியாது. சகல உலகங்களுக்கும் ஆண்டவரான சேசுநாதர் தம்மால் உண்டாக்கப்பட்ட இரண்டு சிருஷ்டிகளின் சொற்கேட்டு அதிசயத்துக்குரிய தாழ்ச்சியோடு கீழ்ப்படிந்தாரென்று நினைத்து நீங்களும் அவருக்குப் பதிலாகச் சர்வேசுரனால் வைக்கப்பட்ட பெரியோர்களுக்குக் கீழ்ப்படியக்கடவீர்களாக.
பிறர் சிநேகம் ஆகிய இம் மூன்று புண்ணிய மாதிரிகையும் காணப்பட்டது.
சேசுநாதர், பரிசுத்த கன்னிமரியாள், அரச்.சூசையப்பர் இம்மூவரும் இருந்த வீட்டில் சமாதானமும், பக்தியும், சிநேகமும் எந்த அளவில் சிறந்திருந்ததென்று யாரால் சொல்லக்கூடும்? அதில் முப்பது ஆண்டளவாக நடந்த புதுமைக்கடுத்த சம்பவங்களை சுலபமாக வெளிப்படுத்த முடியாது. இந்தத் திருக்குடும்பத்தில் சண்டை கோபம் மனஸ்தாபம் முதலான துர்க்குணங்களாவது மரியாதைக் குறைச்சல், ஆசாரக்க குறைச்சல், சிநேகம் பக்தி அன்பு குறைச்சலாவது காணப்பட்டதில்லை. மூவரும் எப்போதும் மலர்ந்த முகத்தோடும், அன்போடும் சந்தோஷத்தோடும் பேசிப் புழங்கி வந்தபடியால் அடுத்த வீட்டுக்காரர் இத்திருக்குடும்பத்தின் வீட்டில் பரலோகத்துக்குச் சரியான பாக்கியம் விளங்குகிறதை அறிந்து, தாங்கள் மனக்கிலேசப்படும் வேளையில் அத்திருக் குடும்பத்தினிடத்தில் வந்து சேரும், அர்ச். சூசையப்பர் கன்னிமாமரியாயைக் கண்டு அவர்களிடம் மகிழ்ச்சியையும் மன ஆறுதலையும் அடைந்தார்கள்.
நீங்கள் கிறிஸ்தவர்களானதால் திருக்குடும்பத்தில் நடந்தது போலவே, சண்டை கோபம் வர்மம் முதலான துர்க்குணங்களை அடக்கித் தகாத வார்த்தைகளை விலக்கி, உங்கள் பொறுமையினால் சமாதானம், பிறர் சிநேகம், ஞானசந்தோஷம் இவை முதலான புண்ணியங்களை விளைவிக்கும்படிக்குப் பிரயாசைப்படக்கடவீர்கள்.
செபம்
என் இரட்சகருடைய தாயாரே! உமது திருக்குமாரனாகிய சேசுநாதரைப் பார்க்கும்பொழுதெல்லாம் நீர் அடைந்த சந்தோஷத்தைக் குறித்து நான் இந்த உலகில் நல்ல ஒழுக்கத்துடன் நடக்கும்படிக்கு எனக்கு உதவிசெய்தருளும். பகை, கோபம் முதலான துர்க்குணங்களை என் ஆத்துமத்தில் நுழையவிடாமலும் எவ்விடத்திலும் எக்காலத்திலும் எவருக்காகிலும் மனஸ்தாபம் வருவியாமலும், எல்லாரோடும் சமாதானமாயிருந்து, நான் கஸ்திப்படும் வேளையில் அதைப் பொறுமையோடு அனுபவித்துச் சமாதானமுள்ளவர்களுக்குச் சர்வேசுரனால் கொடுக்கப்படுகிற சம்பாவனை எனக்கும் கிடைக்கும்படிக்கு மன்றாடுகிறேன்.

Comments are closed.