மருத்துவப் பணியாளர்கள் – அண்டை வீட்டு புனிதர்கள்

இவ்வாண்டை உலக செவிலியர், மற்றும், தாதியர் ஆண்டாக உலக நலவாழ்வு அமைப்பு அறிவித்துள்ள நிலையில், இம்மாதம் 12ம் தேதி இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட செவிலியர், மற்றும், தாதியர் உலக நாளையொட்டியும், செவிலியர்களின் முன்னோடியான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் 200வது பிறந்த நாளையொட்டியும் சிறப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கோவிட்-19 நோயால் எழுந்துள்ள இந்த நெருக்கடியான நேரத்தில், செவிலியர்களும் தாதியர்களும் இந்த சமுதாயத்தில் ஆற்றிவரும் அடிப்படையான முக்கிய பங்களிப்பைக் குறித்து, நாம் மீண்டும் உணர்ந்து வருகிறோம் என்று, தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றையச் சூழல்களில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, பிறர்மீது கொண்ட அன்பாலும், பொறுப்புணர்வுகளாலும் தூண்டப்பட்டு, மருத்துவப்பணியாளர்கள் ஆற்றிவரும் பணிகளை நேரடியாகக் கண்டுவருகிறோம் என மேலும் பாராட்டியுள்ளார்.

தங்களின் தியாகச் சேவையால் இந்த மருத்துவப் பணியாளர்கள் பல்வேறு உயிரிழப்புகளை அடைந்துவருவது மிக வேதனைத் தருவதாக உள்ளது எனவும், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நோயுற்றோரின் வாழ்வில் சிறப்புக் கவனம் செலுத்தி, நல்ல சமாரியராகச் செயல்படும் மருத்துவப் பணியாளர்கள், வாழ்வைப் பாதுகாப்பவர்களாகவும், நோயுற்றோருக்கு மன உறுதியையும், நம்பிக்கையையும் வழங்குபவர்களாகவும் உள்ளனர் என, தன் செய்தியில் பாராட்டுகளை வெளியிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயாளிகளுடன் மனிதாபிமான உறவுகளைக்கொண்டு செயல்படும் இவர்கள், நோயாளிகளுக்குச் செவிமடுத்து, அவர்களைப் புரிந்து செயல்படுபவர்களாக உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

இறக்கும் தருவாயில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆறுதலையும் நிவாரணத்தையும் வழங்கிவரும் மருத்துவப் பணியாளர்களை, பக்கத்து வீட்டு புனிதர்கள் என அழைக்கலாம் என, தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்கள் நடமாடும் மருத்துவமனை எனும் திருஅவையின் அடையாளமாக இருந்து, மனிதகுலத்திற்கு ஆற்றிவரும் சேவைக்கு நன்றியை வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.

Comments are closed.