தேவமாதாவின் வணக்கமாதம் 12-ஆம் தேதி

தேவமாதா எலிசபெத்தம்மாளைச் சந்தித்தபோது சேசுக்கிறிஸ்து நாதரால் செய்யப்பட்ட அற்புதங்கள் பேரில்
1வது :தமது திருத்தாயைக் குறித்துச் செய்யப் பட்டவைகள்.
2 வது : அர்ச். ஸ்நாபக அருளப்பரைக் குறித்து நிகழ்ந்தவைகள்
3 வது : அர்ச்.ஸ்நாபக அருளப்பருடைய தாய், தந்தைக்கு நிகழ்ந்தவைகள்.
1-வது, சேசுநாதர் தம் திருத்தாயாரால் செய்யப்பட்ட அற்புதங்கள்
உலக மீட்பர் தமது நேச அன்னையின் வழியாக சென்மப்பாவத்தின் அடிமைத்தனத்தினின்றும் அர்ச்.ஸ்நாபக அருளப்பரை மீட்டு அவரைச் சுகிர்த அற்புதங்களாலும் நன்மைகளாலும் நிரப்பினார். இப்படியே தம்முடைய திருத்தாயைக்கொண்டு, தாம் இவ்வுலகிற்கு கொடுக்கப்போகிற மீட்பினுடைய முந்தின பலனை அளிக்க திருவுளங் கொண்டார். அந்தப் பரமநாயகி மனிதர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களுக்குத் தம்முடைய மன்றாட்டினால் தேவ வரப்பிரசாதங்களைப் பங்கிடும் வேலையை ஆரம்பித்தார்கள். சேசு கிறிஸ்து நாதர் தமது திருத்தாயாய் பாவிகளுக்கு அடைக்கலமும், புண்ணியவான்களுக்கு தாபரமும், எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் தஞ்சமும் தேவ நன்மைகளெல்லாம் வருவிக்கிறவர்களுமாக நமக்கு பிரசித்தமாய்க் காண்பிக்கிறார். இத்தகைய கிருபாகரியின் மேல் உறுதியான நம்பிக்கை வைக்காமல் இருக்கக்கூடுமோ ?
2-வது, அர்ச். ஸ்நாபக அருளப்பரைக் குறித்து நிகழ்ந்தவைகள்
உலக மீட்பர் அர்ச். அருளப்பரிடம் சென்மப்பாவத்தின் தோஷத்தை நீக்கி, அவருக்கு விசேஷமான வரங்களை அளித்து அவருடைய மனதில் பரிசுத்த ஆவியின் ஒளியை உதிக்கும்படி செய்து, அவருடைய இதயத்தில் தேவ சிநேக அக்கினியை எரியப்பண்ணி, அவருடைய ஆத்துமத்தை மனோ வாக்குக்கெட்டாத சந்தோஷத்தினால் பூரிப்பித்தார். அப்போது அர்ச். ஸ்நாபக அருளப்பர் தம்முடைய தாயாரின் உதரத்திலிருந்து தேவமாதாவினுடைய சத்தத்தைக் கேட்டு சர்வேசுரனை அறிந்து, வணங்கி அவர் அண்டையில் சந்தோஷமாக குதித்தார். நாமும் தக்க ஆயத்தத்தோடு திவ்விய நற்கருணை வாங்கி, பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரனுடைய ஏவுதலுக்கு இணங்கி நடப்போமானால் ஆண்டவர் நம்மை வரப்பிரசாதங்களால் நிரப்பி நம்மிடத்தில் திவ்விய ஒளியையும் தேவ சினேக அக்கினியையும் இருக்கச் செய்து, எவ்வித புண்ணியங்களையும் செய்வதற்குத் துணிவும் தைரியமும் அளிப்பார். நாம் திவ்விய நற்கருணையை வாங்கின பின்பு இந்தச் சுகிர்த உணர்ச்சிகளை அடையாமல், புண்ணியத்தைச் செய்ய சுறுசுறுப்பில்லாதவர்களாய் இருப்போமானால், இது நம்முடைய தவறு என்றெண்ணி நாம் திவ்விய நற்கருணை தக்க ஆயத்தத்துடன் வாங்கும்படியாக தேவமாதாவின் அனுக்கிரகத்தை மன்றாடக்கடவோம்
3வது, அர்ச். ஸ்நாபக அருளப்பருடைய தாய், தந்தைக்கு நிகழ்ந்தவைகள்
சேசுக்கிறிஸ்துநாதர் மகாத்மாக்கள் அர்ச். சக்கரியாசுக்கும், அர்ச். எலிசபெத்தம்மாளுக்கும் அளித்த நன்மைகளை சிந்தித்துப் பார்க்ககடவோம். அந்தப் பரம இரட்சகர் அவர்களைச் சந்தித்து அவர்களுடைய வீட்டில் வாசம் செய்ய சித்தமாகித் தமது நேச அன்னை காட்டின மனத்தாழ்ச்சியையும் மனக்கீழ்ப்படிதலையும் தேவ பக்தியையும் பிறர் சிநேகத்தின் சுகிர்த மாதிரிகைகளையும் அவர்கள் கண்களுக்கு முன்பாக வைக்கத் திருவுளங்கொண்டார். சேசுக் கிறிஸ்து நாதருடைய திருத்தாயாருடன் வாசம் செய்கிற குடும்பங்களும் சபைகளும் மிகுந்த பாக்கியமுள்ளவைகளே, அவர்களோடுகூட எல்லா வித நன்மைகள் வரும் என்பது சத்தியமே. அவர்களுக்கு சேசு கிறிஸ்துநாதர் தேவகிருபை தந்து ஞான சந்தோஷத்தைப் பொழிந்து சுகிர்த குணத்தை வருவித்து ஆசீர்வாதங்கள் எல்லாவற்றையும் கொடுக்கிறார். நீங்கள் பாவத்தினால் சேசுகிறிஸ்துநாதரையும் அவரது அன்னையையும் உங்களிடமிருந்து அகற்றாமல், உங்களுடைய ஞான சுறுசுறுப்பினாலும், மாறாத புண்ணிய சாங்கோபாங்க நடத்தையினால் வற்றாத தேவ பக்தியினாலும், உங்களுடைய இதயத்தில் சேசுமாமரிக்கு இருப்பிடத்தை அமைத்துக் கொடுங்கள்.
செபம்
எனது திவ்விய தாயே! எனது நல்ல உபகாரியே ஆண்டவருடைய அன்னையாக இருக்க பாத்திரமானவர்களே, நான் அநேக கனமான பாவங்களைக் கட்டிக் கொண்டதால் உமது அருகில் வர அற்பமும் பேறு பெற்றவன(ள)ல்ல, ஆகிலும் நீர் என்னைப் புறக்கணித்துத் தள்ளினாலும், நான் உமது கிருபையை உறுதியாக நம்பி உம்மிடத்தில் அபயமிட்டு ஒரு நாளாகிலும் உம்மை மன்றாடாமல் போகிறதில்லை. நீர் கரை காணாத தயை சமுத்திரமாய் இருக்க நான் உம்மிடத்தில் தேவசகாயத்தை அடையாதிருந்தால் யாருடைய அடைக்கலத்தில் ஒடுவேன்? அன்புள்ள தாயே! சர்வேசுரன்மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கைக்குப்பிறகு எல்லா நம்பிக்கையும் உம்மிடத்தில் வைக்கிறேன். உம்முடைய ஆதரவு மன்றாடி உம்முடைய அடைக்கலத்தில் சேருவேனாகில் பேரின்ப இராச்சியத்தில் உம்முடைய உதவியைக் கொண்டு மீட்புப் பெற்று மோட்சவாசிகளுடன் நான் உம்மைப் புகழ்ந்து கொண்டிருப்பேன் என்று உறுதியாக நம்புகிறேன்.
அர்ச். பெர்நந்து தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்.
மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஒடி வந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
இப்படி மூன்றுமுறை சொல்லவும் -1,பர. 3,அருள். திரி.
இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :
எங்களுடைய ஆண்டவளே, எங்களுடைய உபகாரியே, எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனிடத்தில் வேண்டிக்கொள்ளும்.
பனிரெண்டாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரிகையாவது :
பரிசுத்த கன்னிகையான தேவமாதாவின் பேரில் சொல்லப்படுகிற தூஷணங்களுக்குப் பரிகாரமாக செபமாலை சொல்கிறது

Comments are closed.