கோவிட்-19க்குப்பின் நீதி, பிறரன்பு, தோழமைக்கு அழைப்பு
கொரோனா கிருமி கொள்ளை நோயை கிறிஸ்துவின் உயிர்ப்பின் ஒளியில் நோக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 17, இவ்வெள்ளியன்று மீண்டும் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
“மீண்டும் எழ ஒரு திட்டம்” என்ற தலைப்பில், Vida Nueva என்ற இஸ்பானிய இதழில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய கட்டுரை, ஏப்ரல் 17, இவ்வெள்ளியன்று பிரசுரமானது.
அனைத்தையும் புதியனவாக்கும் தூய ஆவியாரின் ஒன்றிப்பில், புதுப்பிக்கப்பட்ட ஒருமைப்பாட்டுணர்வுக்கு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, நற்செய்தியால் மட்டுமே இயலக்கூடிய புதிய கற்பனையை ஊக்குவிப்பதற்கு இதுவே சரியான நேரம் என்றும் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
நீடித்த மற்றும், விரிவான வளர்ச்சியைத் தேடுவதில் முழு மனித குடும்பத்தையும் ஒன்றிணைப்பதன் முக்கியத்துவத்தை மக்கள் உணருவதற்கும், கோவிட்-19 கொள்ளை நோய் உதவியுள்ளது என்றும், பல மக்களின் துன்பங்களுக்குப் புறமுதுகு காட்டி, இக்கால மற்றும், வருங்கால வரலாற்றை நம்மால் எழுத முடியாது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.
நமக்காகக் காத்திருக்கும் மற்ற கொள்ளை நோய்களின் முன்னிலையில்கூட, நாம் ஒரே மக்களாகச் செயல்பட்டால், உண்மையான தாக்கத்தைக் கொண்டிருக்கலாம் என்று கூறியுள்ள திருத்தந்தை, புறக்கணிப்பின் உலகளாவியத்தன்மைக்குத் திரும்பும் சோதனைகளை எதிர்கொள்கையில், நீதி, பிறரன்பு மற்றும், தோழமை ஆகிய நோய் எதிர்ப்பு சக்திகளை மனித சமுதாயம் வளர்க்கும் என்று, தான் நம்புவதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
உலகில் அனைவருக்கும் அளிப்பதற்கு உணவு உள்ளது என்பதை அறிந்திருந்தும், பலர் துன்புறும் பசிக்கு எதிராக நம்மால் பொறுப்புணர்வுடன் செயல்பட முடியுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ள திருத்தந்தை, ஆதிக்க மற்றும் அதிகாரம் கொண்டவர்களின் ஆசைகளினால் தூண்டப்படும் போர்களின் முன்னர் நாம் தொடர்ந்து, மௌனம் காக்க உடந்தையாய் இருக்க முடியுமா? எனவும் கேட்டுள்ளார்.
பலரை ஏழ்மையில் ஆழ்த்தும் வாழ்வுமுறையை மாற்றுவதற்கு நாம் விரும்புகிறோமா, வளங்களைச் சமமாகப் பகிர்ந்துகொள்ளக்கூடிய மிகவும் எளிய மனித வாழ்வு வாழ நம்மையே ஊக்கப்படுத்துவதற்கு விரும்புகிறோமா? உலகளாவிய சமுதாயமாக, சுற்றுச்சூழல் சீரழிவை கட்டுப்படுத்துவதற்கு, தேவையான முயற்சிகளை எடுப்போமா அல்லது தொடர்ந்து அதற்கு மறுப்புச் சொல்லிக்கொண்டே இருப்போமா? என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
நம்பிக்கையின் அடித்தளம்
அச்சம், சோர்வு, செயல்படாதன்மை ஆகியவற்றைப் புறக்கணிக்கும் நம்பிக்கை கலாச்சாரத்திற்கு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, இதற்கு, இயேசுவின் உயிர்ப்பை, நம்பிக்கையின் அடித்தளமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இயேசுவின் கல்லறைக்குச் சென்ற முதல் சீடர்களைப் போல, நாமும், ஒருவித வேதனை மற்றும், நிச்சயமற்ற சூழலால் ஆட்கொள்ளப்பட்டு வாழ்ந்து வருகிறோம், நம் அன்புக்குரியவர்களுக்காக நாம் அனுபவிக்கும் வேதனையும், அழுகையும் நம்மை திசை திருப்புகின்றன, நம்மை முடக்கிப்போடுகின்றன, இவை, நம் வருங்காலத்தின் மீது சுமத்தப்படும் கல்லறைக்கல்லின் பாரங்கள், அனைத்து நம்பிக்கையையும் புதைப்பதற்கான அச்சுறுத்தல்கள் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார்.
கடவுள் தம் மக்களை ஒருபோதும் கைவிடுவதில்லை, அவர் எப்போதும், சிறப்பாக, வேதனை அதிகமாகும்போது அவர்களோடு இருக்கிறார், துன்பத்தில் ஒருவர், ஆண்டவரின் பாடுகளில் பங்குகொள்கின்றார், அது, அவரின் உயிர்ப்பில் அவரோடு ஒன்றிணைவோம் என்ற நம்பிக்கையைத் தருகின்றது, எவரும் தன்னையே காப்பாற்றிக்கொள்ள இயலாது என்பதை, நாம் எல்லா நேரங்களிலும் கற்றுக்கொள்கிறோம் என்று, திருத்தந்தை அக்கட்டுரையில் கூறியுள்ளார்.,
Comments are closed.