திங்கட்கிழமை. நற்செய்தி வாசகம்

மறுபடியும் பிறந்தாலன்றி, எவரும் இறையாட்சியைக் காண இயலாது.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-8
அக்காலத்தில்
பரிசேயர் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் நிக்கதேம். அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர். அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, “ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதி யாக உமக்குச் சொல்கிறேன்” என்றார்.
நிக்கதேம் அவரை நோக்கி, “வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?” என்று கேட்டார். இயேசு அவரைப் பார்த்து, “ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன். மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை.
“தூய ஆவியாரால் வரும் மறுவாழ்வு”
ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுடைய வாழ்க்கை மிகவும் தாறுமாறாகப் போய்க்கொண்டிருந்தது. இதைப் பார்த்து, அவன்மீது தனிப்பட்ட அக்கறை கொண்ட பெரியவர் ஒருவர் அவனை அழைத்து, “தம்பி! நீ பக்கத்து ஊரில், அருங்கொடை இயக்கத்தினர் நடத்துகின்ற நற்செய்திக்கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு வா; அது உன்னுடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றார். முதலில் யோசித்த அந்த இளைஞன், பிறகு, ‘பெரியவர் எதைச் சொன்னாலும் நம்முடைய நல்லதுக்குத்தான் சொல்வார்’ என்று, அவர் சொன்னது போன்றே, பக்கத்து ஊரில் அருங்கொடை இயக்கத்தார் நடத்தி வந்த, நற்செய்திக்கூட்டத்தில் கலந்துகொண்டான்.
முதலில் ஓரிரு நாள்கள் கூட்டத்தில் இருப்பது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இருந்தாலும், சிரமத்தைப் பார்க்காமல் கூட்டத்தில் கலந்துகொண்டான். கூட்டம் முடியப் போவதற்கு முந்தைய நாள், தூய ஆவியாரின் அருள்பொழிவை வேண்டி எல்லாரும் வேண்டினார்கள். இவனும் அவர்களோடு சேர்ந்து உருக்கமாக வேண்டினான். அப்பொழுது ஏதோவோர் ஆற்றல் அவனுடைய உள்ளத்தைத் தொடுவது போன்று உணர்ந்தான். அப்பொழுது அவன் தன்னுடைய கடந்தகால வாழ்வை எண்ணிப் பார்த்து, அதற்காக மனம்வருந்தி, புதியதொரு வாழ்க்கை வாழவேண்டும் என்று சிந்தனையோடு வீட்டுக்குத் திரும்பி வந்தான்.
அவன் வீட்டுக்கு வந்த பிறகு, அவனுடைய நடவடிக்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்ட அவனுடைய நெருங்கிய நண்பர்கள், “உனக்குக் என்ன ஆயிற்று?” என்று அவனை விசாரிக்கையில் அவன், “தூய ஆவியாரால் புதியதொரு வாழ்வைப் பெற்றுக்கொண்டேன்” என்றான். அப்பொழுது அவனுடைய நண்பர்களில் ஒருவன் அவனிடம், “அப்படியானால், ஏதாவது காட்சி கண்டாயா?” என்றான். அவன், “இல்லை” என்றான். இன்னொரு நண்பன், “தூய ஆவியார் உன்னிடத்தில் பேசினாரா?” என்று கேட்டபொழுதும், அவன் “இல்லை” என்றே பதில் சொன்னான்.
இதனால் பொறுமையிழந்த அவனுடைய நண்பர்கள், “பின் எப்படித்தான் புதுவாழ்வினைப் பெற்றுக் கொண்டதை உணர்ந்தாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த இளைஞன், “குளத்தில் மீன்பிடிக்கச் சொல்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் குளத்தில் போட்ட தூண்டிலை, மீனைப் பார்த்தோ அல்லது அதன் குரலைக் கேட்டோ தூண்டிலை வெளியே எடுப்பதில்லை. மாறாக, மீனானது இரையைப் பிடித்து இழுக்கின்றது என்ற உணர்வு உங்களுக்குத் தோன்றும். அப்பொழுது நீங்கள் குளத்திற்குள் போட்ட தூண்டிலை வெளியே எடுப்பீர்கள். அதுபோன்றுதான் எனக்கும். தூய ஆவியார் எனக்குக் காட்சி கொடுக்கவோ, பேசவோ இல்லை. மாறாக, அவர் என்னுடைய உள்ளத்தைத் தொட்டார். அதனால்தான் எனக்குப் புதியதொரு வாழ்வு கிடைத்துவிட்டது என்று சொல்கின்றேன்” என்றான்.
இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞன் தூய ஆவியாரால் புது வாழ்வினைப் பெற்றுக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியான ஒரு செய்தியாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகம் தூய ஆவியாரால் கிடைக்கும் புது வாழ்வு அல்லது மறுவாழ்வினைக் குறித்துப் பேசுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
யார் இந்த நிக்கதேம்?
நற்செய்தியில், ஓர் இரவு வேளையில் இயேசுவைச் சந்திக்க வருகின்றார் நிக்கதேம். இந்த நிக்கதேம் சாதாரண மனிதர் அல்லர்; மாறாக, பரிசேயர். அதுவும் யூதத் தலைவர்களுள் ஒருவர். பரிசேயர் இயேசுவை மெசியா என்று ஏற்றுக்கொண்டதில்லை. இந்த நிக்கதேம் இயேசுவை மெசியா என ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், இயேசுவைக் கடவுளிடமிருந்து வந்த இரபி என்ற அளவிலாவது ஏற்றுக்கொள்கின்றார். அப்படிப்பட்டவர் பகல் வேளையில் இயேசுவிடம் வந்தால், யூதர் ஏதாவது நினைக்கக்கூடும் என்று இரவு வேளையில் வந்து, “கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது” என்று இயேசுவிடம் உரையாடலைத் தொடங்குகின்றார்..
தூய ஆவியாரால் வரும் மறுவாழ்வு
தம்மிடம் வந்த நிக்கதேம் உரையாடலைத் தொடங்கியதும், இயேசு, “மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காணமுடியாது” என்று சொல்கின்றார். இயேசு இவ்வாறு சொன்னதை நிக்கதேம், மீண்டுமாகத் தாயின் வயிற்றுக்குள் புகுந்து பிறப்பதா என்று நினைத்துக்கொண்டிருக்கையில், இயேசுவோ அவரிடம் தூய ஆவியாரால் பிறக்கவேண்டும் என்றும் அப்படிப் பிறப்பவர் மட்டுமே இறையாட்சியைக் காணமுடியும் என்று உறுதியாகச் சொல்கின்றார்.
திருமுழுக்கின்பொழுது தூய ஆவியார் நம்மீது பொழியப்படுகின்றார். அத்தகைய தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப நாம் வாழ்கின்றபொழுது, நாம் மறுபடியும் பிறப்பவர்கள் ஆவோம்; இறையாட்சியைக் காண்பவர்களாகவும் ஆவோம். நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை.
‘தூய ஆவியாரின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்’ (கலா 5: 16) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்ந்து, மறுபிறப்படைவோம்; அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.