ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு – நள்ளிரவுத் திருப்பலி

நற்செய்தி வாசகம்.
இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 1-10
ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன்மேல் உட்கார்ந்தார்.
அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்.
அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, “நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.
நீங்கள் விரைந்து சென்று, `இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்’ எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்” என்றார்.
அவர்களும் கல்லறையை விட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள்.
திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி, அவர் காலடிகளைப் பற்றிக்கொண்டு, பணிந்து நின்றார்கள்.
அப்பொழுது இயேசு அவர்களிடம், “அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மறையுரைச் சிந்தனை.
“அவர் இங்கே இல்லை”
ஒரு ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில், மறைக்கல்வி மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வந்த ஆசிரியர், இயேசு எல்லா இடத்திலும் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதற்காக, மறைக்கல்வி மாணவர்களிடம், “இயேசு எல்லா இடத்திலும் இருக்கின்றார்; அவர் இல்லாத ஏதும் இவ்வுலகில் உண்டோ?” என்று கேட்டார்.
எல்லா மாணவர்களும் “இல்லை” என்று ஒருமித்த குரலில் சொன்னபொழுது, அந்தக் கூட்டத்தில் இருந்த புனிதா என்ற சிறுமி மட்டும் “ஆம்” என்றாள். புனிதா மிகவும் புத்திசாலி என்பதாலும் அவள் சொல்வதில் ஏதாவது காரணம் இருக்கும் என்பதாலும், மறைக்கல்வி ஆசிரியர் அவளிடம், “இயேசு இல்லாத இடம் எது?” என்று கேட்டார். உடனே புனிதா ஆசிரியரிடம், “இயேசு இல்லாத இடம், அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை” என்றாள்.
இப்படிச் சொல்லிவிட்டு, அவள் தன்னுடைய கையில் இருந்த திருவிவிலியத்தைத் திறந்து, மத்தேயு நற்செய்தி 28: 6 இல் இருந்த, “அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார்…” என்ற இறைவார்த்தையை வாசித்து முடித்தாள். இதைக் கேட்டு வியந்து போன மறைக்கல்வி ஆசிரியர் புனிதாவை வெகுவாகப் பாராட்டினார்.
ஆம். இயேசு அவர் அடக்கம் செய்து வைக்கப்பட்ட கல்லறையில் இல்லை. அவர், தான் சொன்னது போன்றே உயிர்த்தெழுந்தார். அதைத்தான் இன்றைய நாளில் உயிர்ப்புப் பெருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றோம். இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவில் இன்றைய இறைவார்த்தை நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் உயிர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது
இயேசு கிறிஸ்து சொல்வது ஒன்றும் செய்வதும் ஒன்றுமாய் இருந்தவர் அல்லர்; அவர் சொல்லிலும் செயலிலும் வல்லவராக இருந்தார் (லூக் 24:19). அப்படிப்பட்டவர், தான் இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்று மூன்றுமுறை முன்னறிவித்தார் (மத் 16: 21, 17: 22-23, 20: 17-19) அவர் முன்னறித்தது போன்றே மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். ஆகையால், இயேசுவின் உயிர்த்தெழுதலை அவர் சொல்லிலும் செயலிலும் வல்லவர் என்பதற்குச் சான்றாகச் சொல்லலாம்.
இப்படிச் சொல்லிலும் செயலிலும் வல்லவரான இயேசுவின் உயிர்ப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது. இயேசுவின் உயிர்ப்பு பல்வேறு விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தததாக இருந்தாலும், மூன்று விதங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.
முதலாவதாக, இயேசுவின் உயிர்ப்பு, நம்முடைய நம்பிக்கைக்கும் நற்செய்தி அறிவிப்புக்கும் அடிப்படையாக இருக்கின்றது (1கொரி 15: 14). தொடக்கக்காலக் கிறிஸ்தவர்கள் இயேசுவைப் பற்றி மக்களுக்கு அறிவித்தபொழுது, அவருடைய பாடுகள், இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றை முதன்மைப்படுத்தியே நற்செய்தி அறிவித்து வந்தார்கள். அந்த வகையில் இயேசுவின் உயிர்ப்பு நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கைக்கும் நற்செய்தி அறிவிப்புக்கும் அடிப்படையாக இருக்கின்றது.
இரண்டாவதாக, இயேசுவின் உயிர்ப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது எனில், அது, நாமும் ஒரு நாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையை அளிப்பதாக இருக்கின்றது. புனித பவுல் திமொத்தேயுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, “நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்” (2 திமொ 2:11) என்று குறிப்பிடுவார். ஆகையால், இயேசுவின் உயிர்ப்பு, நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையை அளிப்பதால், அதை முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லலாம்.
மூன்றாவதாக, இயேசுவின் உயிர்ப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது எனில், அது, இயேசு இன்றும் நம் நடுவில் வாழ்கின்றார் என்பதை உறுதிபடச் சொல்கின்றது. எத்தனையோ மகான்கள் இப்புவியில் வாழ்ந்து இறந்தார்கள்; ஆனால், அவர் இன்றும் வாழ்கின்றார்கள் என்பதற்கு எந்தவொரு சான்று கிடையாது. இயேசு இன்றும் வாழ்கின்றார் என்பதற்கு அவருடைய உயிர்ப்பே சான்றாக இருக்கின்றது. மத்தேயு நற்செய்தி 28: 20 இல் வருகின்ற, “இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கின்றேன்” என்ற சொற்கள், மேலே உள்ள கூற்றுக்கு இன்னும் வலுச்சேர்ப்பனவாக இருக்கின்றன. இவ்வாறு இயேசு இன்றும் வாழ்கின்றார் என்பதற்கு அவருடைய உயிர்ப்பு ஆதாரமாக இருப்பதால், இயேசுவின் உயிர்ப்பு மிகவும் முக்கியத்துவம் என்று சொல்லலாம்.
இயேசுவினுடைய உயிர்ப்பின் முக்கியத்துவைத் தெரிந்துகொண்ட நாம், உயிர்த்த ஆண்டவர் இயேசு, தம் சீடர்களுக்கும் – நமக்கும் – சொல்லக்கூடிய செய்தியென்ன என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
நறுமணப் பொருள்கள் பூச வந்தவர்களை நற்செய்தி அறிவிக்கச் சொல்லும் இயேசு
இயேசு, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட நாள் ஓய்வுநாள் என்பதால், அவருடைய உடலை உரிய முறையில் அடக்க செய்ய முடியாமல் போனது. இதனால் அவருடைய உடலுக்கு நறுமணப் பொருள்களைப் பூசுவதற்காக (மாற் 16: 1) அவருடைய கல்லறை எங்கிருக்கின்றது என்று தெரிந்த (மத் 27: 56,61) மகதலா மரியாவும் வேறொறு மரியாவும் வருகின்றார்கள். அதே நேரத்தில், ‘இயேசு அடக்கம் செய்துவைக்கப்பட்ட கல்லறையை ஒரு கல் மூடியிருக்குமே…! அதை எப்படித் திறப்பது…?’ என்ற எண்ணத்தோடும் அவர்கள் வந்திருக்கக்கூடும்!
அவர்கள் கல்லறைக்கு வந்தபொழுது, கல்லறையை மூடியிருந்த கல் புரட்டப்பட்டு, அதன்மேல் ஆண்டவரின் தூதர் உட்கார்ந்திருக்கக் காண்கின்றார்கள். மேலும் ஆண்டவரின் தூதர் அவர்களிடம், எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, “… இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் என சீடருக்குக் கூறுங்கள்” என்கின்றார். இதற்குப் பின்னர் இயேசு அவர்களுக்குத் தோன்றுகின்றபொழுதுகூட, “என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள்” என்றே சொல்கின்றார். இயேசு தன் சீடர்களை இங்கு, “சகோதரர்கள்” என்று சொன்னது, அவர்கள் தன்னை மறுதலித்தாலும், தன்னை விட்டு ஓடினாலும், அவற்றை எல்லாம் அவர் மன்னித்துவிட்டதாகவும் நண்பர்கள் (யோவா 15: 15) என்று ஏற்றுக்கொண்டதாகவும் அறிக்கையிடுகின்றது.
இவ்வாறு நறுமணப் பொருள்கள் பூச வந்த பெண்கள் இருவரும், உயிர்த்த ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் நற்செய்திப் பணியாளர்களான மாறுகின்றார்கள். அந்த இரண்டு பெண்களும் இயேசுவின் உயிர்ப்பை சீடர்களுக்கு எடுத்துச் சொல்லி, நற்செய்திப் பணியாளர்களாக மாறியது போன்று, நாமும் ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் நற்செய்திப் பணியாளர்களான மாறவேண்டும். இது நம்முடைய பொறுப்பு (1 கொரி 9: 17) என்பதை மறந்துவிடக்கூடாது
“அஞ்சாதீர்கள்” என்று திடப்படுத்தும் இயேசு
உயிர்த்த ஆண்டவர் இயேசு, பெண் சீடர்களிடம், உயிர்ப்புச் செய்தியைச் சீடர்களிடம் அறிவிக்கவேண்டும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அவர்களிடம் இன்னொரு முக்கியமான வார்த்தையும் சொல்கின்றார். அதுதான், “அஞ்சாதீர்கள்!” என்பதாகும். இயேசு அவர்களிடம் சொன்ன இவ்வார்த்தை, சாதாரண வார்த்தை கிடையாது; அச்சத்தோடும் நம்பிக்கையின்றியும் இருந்தவர்களுக்கு, அச்சத்தைப் போக்கி நம்பிக்கை அளிக்கக்கூடிய வார்த்தையாக இருக்கின்றன.
அன்று சீடர்கள் யூதர்களுக்கு அஞ்சி அறைக்குள்ளே இருந்தார்கள் (யோவான் 24: 36). அப்படிப்பட்டவரிடம் இயேசு “அஞ்சாதீர்கள்”, “அமைதி உரித்தாகுக” என்று சொல்லி அவர்களைத் திடப்படுத்தினார். இன்று கொரோனா போன்ற கொள்ளை நோயினாலும், பல்வேறு காரணங்களாலும் நாம் அஞ்சி அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இப்படி இருக்கின்ற நம்மிடமும் இயேசு, “அஞ்சாதீர்கள்” என்று வார்த்தையை சொல்லி, இயேசு நமக்கு நம்பிக்கை அளித்து, திடப்படுத்துகின்றார்.
ஆகையால், நாம் இயேசு சொல்லக்கூடிய இந்த நம்பிக்கையூட்டும் வார்த்தையை நம்முடைய உள்ளத்தில் ஏற்று, திடம் கொள்வோம். சீடர்களைப் போன்று நாம் தவறு செய்திருந்தாலும், நம்மையும் உயிர்த்த ஆண்டவர் இயேசு மன்னிக்கத் தயாராக இருக்கின்றார் என்ற உறுதியோடு, சீடர்களைப் போன்று ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை எல்லாருக்கும் அறிவிப்போம். அதன்மூலம் இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சிகளாகத் திகழ்வோம்.
சிந்தனை.
‘வாழ்க்கை மற்றவருக்காக வாழும்பொழுது பொருளுள்ளதாக இருக்கின்றது’ என்பார் கெலன் கெல்லர். இயேசு நமக்காக வாழ்ந்து, இறந்து, மூன்றாம் நாள் உயித்தெழுந்து தன் வாழ்வைப் பொருளுள்ளதாக மாற்றினார். நாமும் மற்றவருக்காக வாழ்ந்து, வாழ்க்கையைப் பொருளுள்ளதாக மாற்றுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.