நற்செய்தி வாசக மறையுரை (ஏப்ரல் 02)

தவக்காலம் ஐந்தாம் வாரம்
வியாழக்கிழமை
யோவான் 8: 51-59
இறைவார்த்தையும் நிலைவாழ்வும்
நிகழ்வு
இளைஞன் ஒருவன் பாலைநிலத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தான். போகும் வழியில் அவனுக்குக் கடுமையான தாகம் எடுத்தது. தண்ணீர் எங்காவது கிடைக்குமா என்று அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். அப்பொழுது அவன், சற்றுத் தொலைவில் ஒரு ‘கைப் பம்ப்’ இருக்கக் கண்டான். உடனே அவன் அந்தக் கைப் பம்ப் அருகே சென்றான்.
அதனருகே ஒரு பாத்திரம் இருந்தது. அந்தப் பாத்திரம் நிறையத் தண்ணீர் இருந்தது. பாத்திரத்திற்குப் பக்கத்தில் ஒரு அறிவிப்புப் பலகையும் இருந்தது. அதில், “உங்களுக்குக் குளிர்ந்த நீர் வேண்டுமானால், இங்குள்ள பாத்திரத்தில் இருக்கும் நீரை எடுத்து இந்தக் கைப் பம்பில் ஊற்றி, அடிக்கவும்” என்று எழுதப்பட்டிருந்தது. இளைஞன் யோசித்தான், ‘இந்தப் பாத்திரத்தில் உள்ள நீரைக் குடித்துவிட்டு, அப்படியே போய்விடலாம். எதற்குக் குளிர்ந்த நீருக்கு ஆசைப்பட்டு, இருக்கக்கூடிய தண்ணீரையும் இல்லாமல் செய்து, தாகத்தோடு அலையவேண்டும்.’
இப்படி அவன் யோசித்துக்கொண்டிருக்கும்பொழுதே, அவனுக்கு இன்னொரு யோசனையும் வந்தது. ‘இந்தப் பலகையில் இவ்வாறு எழுதி வைத்திருப்பவர்கள் பொய்யாகவா எழுதி வைத்திருப்பார்கள்…? உண்மையாகத்தானே எழுதி வைத்திருப்பார்கள்! ஒருவேளை இந்தப் பலகையில் உள்ள சொற்கள் பொய்யாக இருந்திருந்தால், இது இத்தனை நாள்களும் இருக்குமா…? அதனால் இந்தப் பலகையில் எழுதப்பட்டிருக்கும் சொற்களை நம்பி, இந்தப் பாத்திரத்தில் உள்ள தண்ணீரை எடுத்து, பம்பிற்கும் ஊற்றி, அடித்துப் பார்ப்போம்.’
இந்த யோசனைக்குப் பின் அவன் பாத்திரத்தில் இருந்த தண்ணீரை எடுத்து, கைப் பம்பில் ஊற்றி அடிக்கத் தொடங்கினான். சிறிதுநேரத்தில் பம்பிலிருந்து குளிர்ந்த நீர் வேகமாக வந்தது. அதைப் பார்த்த அந்த இளைஞனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அவன் அதை தாகம் தீரும் மட்டும் குடித்துவிட்டு, தனக்குப் பின் தாகத்தோடு வரக்கூடியவர்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் அந்தப் பாத்திரத்தில் தண்ணீரை நிறைத்துவைத்துப் விட்டுப் போனான்.
இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞன் எப்படிப் பாத்திரத்தில் உள்ள தண்ணீரைக் குடிக்காமல், அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்தா வார்த்தைகளுக்கு ஏற்ப செயல்பட்டதால் குளிர்ந்த தண்ணீரைப் பெற்றுக்கொண்டானோ, அப்படி நாம் நம்முடைய விருப்பத்தின்படி செயல்படாமல், இறைவார்த்தையின் படி செயல்பட்டால், எல்லாவிதமான ஆசிகளையும் நிலைவாழ்வையும் பெற்றுக்கொள்ளலாம் என்பது உறுதி. இன்றைய நற்செய்தி வாசகம், இறைவார்த்தையைக் கடைப்பிடித்து வாழ்வதால், ஒருவர் நிலைவாழ்வைப் பெறுவார் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம். .
இறைவார்த்தையைக் கடைப்பிடிப்போர் சாகமாட்டார்
நற்செய்தியில் இயேசு யூதர்களிடம், “என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள்” என்கின்றார். இயேசு இவ்வாறு சொன்னது, யூதர்கள் நடுவில் கடுமையான எதிர்வினையை ஆற்றுகின்றது. இதனால் அவர்கள் இயேசுவைப் பேய்பிடித்தவன் என்கின்றார்கள். யூதர்களின் இத்தகைய எதிர்வினைக்கு இயேசு என்ன மறுமொழி கூறினார் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னர், இயேசு யூதர்களிடம் கூற விழைந்தது என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
தன்னுடைய வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்று இயேசு சொன்னது, உடல் இறப்பை அல்ல, ஆன்ம இறப்பு. இயேசுவின் வார்த்தையைக் கேட்டு, அதனைக் கடைப்பிடித்து வாழ்ந்தோர், வாழ்வோர் இந்த மண்ணுலகை விட்டுப் போகலாம்; ஆனால், அவர்களுடைய ஆன்மா அழியாமல் இருக்கும் அல்லது அவர்கள் நிலைவாழ்வைப் பெறுவார்கள். இதுதான் இயேசு சொல்ல வந்தது. இதைப் புரிந்துகொள்ளாத யூதர்கள், ஆபிரகாம் இறந்தார், இறைவாக்கினர்களும் இறந்தார்கள். அப்படியானால் நீ பொய்யன் என்று இயேசுவுக்கு எதிராக எதிர்வினை ஆற்றுகின்றார்கள்.
ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே இருந்த இயேசு
யூதர்கள் ஆபிரகாமைப் பற்றிப் பேசியதும், இயேசு அவர்களிடம், ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காணமுடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார் (தொநூ 22:8) என்றும் ஆபிரகாமிற்கு முன்பே நான் இருக்கின்றேன் என்றும் கூறுகின்றார். இயேசு யூதர்களிடம் இவ்வாறு கூறிய வார்த்தைகள், இயேசு தொடக்கத்திலிருந்தே இருக்கின்றார் (யோவா 1: 1-4) என்பதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. இயேசு தொடக்கத்திலிருந்தே இருந்தார்; அவரிடம் வாழ்வு இருந்தது என்றால், அவருடைய வார்த்தைகளும் வாழ்வளிக்கும் என்பதுதான் உண்மை. இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல், யூதர்கள் இயேசுவோடு வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் அவர்மீது கல்லெறிய முயல்வதும் வியப்பாக இருக்கின்றது.
ஆகையால், நாம் யூதர்களைப் போன்று அல்லாமல், இயேசுவின் வார்த்தைகளைக் கடைப்பிடித்து, அவர் தருகின்ற நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘நிலைவாழ்வளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன’ (யோவா 6:68) என்பார் புனித பேதுரு. ஆகையால், நாம் நிலைவாழ்வு தருகின்ற இயேசுவின் வார்த்தைகளைக் கடைப்பிடித்தது வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.