திருத்தந்தை, இத்தாலிய பிரதமர் சந்திப்பு
இத்தாலிய பிரதமர் ஜூசப்பே கோந்தே (Giuseppe Conte) அவர்கள், மார்ச் 30, இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் தனியே சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் இவ்விரு தலைவர்களும் கலந்துரையாடியது குறித்த விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆயினும், மார்ச் 12ம் தேதி காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில், கோவிட்-19 கிருமி பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நம் அரசுத் தலைவர்களுக்காகச் செபிப்போம் என்று கூறியது கவனிக்கத்தக்கது.
இச்சந்திப்பிற்குமுன், இத்தாலிய பிரதமர் கோந்தே அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, 2018ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி வத்திக்கானில் சந்தித்தார். அச்சமயத்தில் இவ்விருவரும், சமுதாய சமத்துவமின்மை, புலம்பெயர்ந்தோர், சூழலியல் மற்றும் அமைதி குறித்து கலந்துரையாடினர்.
டுவிட்டர் செய்திகள்
இந்த தொற்று நோய் தரும் துயரத்தை தாங்க முடியாமலும், அது குறித்த அச்சத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்காக ஒன்றிணைந்து செபிப்போம் என, இத்திங்கள் தின டுவிட்டரில் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தொற்றுநோய் பாதிப்பிலும், அச்சத்திலும் வாழும் மக்களுக்காக இணைந்து செபிப்போம், அனைத்து சமூகத்திற்காக இவைகளைத் தாங்கும் பலத்தை இறைவன் இவர்களுக்கு வழங்குவாராக, என அதில் எழுதியுள்ளார் திருத்தந்தை.
மேலும், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தையொட்டி மூன்று டுவிட்டர்கள், போர் நிறுத்தத்திற்கு ஒன்று என நான்கு டுவிட்டர் செய்திகளை இஞ்ஞாயிறன்று வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு தன மக்களுக்காக அழுததுபோல் நாமும், அழுதுகொண்டிருக்கும் மக்களோடு, இதயத்தின் ஆழத்திலிருந்து ஒன்றிணைவோம், என தன் முதல் டுவிட்டரில் கூறியுள்ள திருத்தந்தை, மற்றவர் துயர் கண்டு இயேசு அழுததுபோல் நாமும் இன்றைய கொள்ளைநோய் பிரச்சனையால் துன்புறும் மக்களுக்காக வாய்விட்டு அழும் வரத்தை இறைவனிடம் வேண்டுவோம், என தன் இரண்டாவது டுவிட்டரில் விண்ணப்பித்துள்ளார்.
நானே உயிர்ப்பும் உயிரும் என உரைக்கும் இயேசுவில் விசுவாசம் கொள்வோம். எத்தனை துயர்கள் வந்திடினும், மரணம் வெற்றியடைவதாகத் தோன்றும் நேரங்களிலும், விசுவாசத்ததுடன் தொடர்வோம். மரணம் உள்ள இடங்களில், வார்த்தையாம் இறைவன் வாழ்வைக் கொணரட்டும், என உரைக்கிறது, திருத்தந்தையின் மூன்றாவது டுவிட்டர் செய்தி.
நாம் அனைவரும் உடன்பிறப்புகள் என்பதை உணர்ந்து, ஒன்றிணைந்து இந்த கோவிட-19 கொள்ளை நோய்க்கு எதிராக உழைக்கவேண்டியதன் தேவையை அறிந்தவர்களாக, அனைத்து மோதல்களையும் முடிவுக்கு கொணர்வோம், ஏனெனில், நாம் அனைவரும் ஒரே குடும்பம், என உலகில் மோதல்கள் நிறுத்தப்பட அழைப்புவிடுப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நான்காவது டுவிட்டர் இருந்தது.
Comments are closed.