நோய் பரவலைத் தடைசெய்வோம், செபத்தை அல்ல…

கோவிட்-19 தொற்றுக்கிருமியின் உலகளாவிய பரவலையொட்டி புனித வார வழிபாடுகளில் மேற்கொள்ளக்கூடிய மாற்றங்களைக் குறித்து, இறைவழிபாட்டு பேராயம் வெளியிட்ட வரையறைகள், செபத்தைத் தடை செய்வதற்கல்ல, மாறாக, இந்நோய் கிருமி பரவாமல் இருப்பதைத் தடை செய்வதற்கே என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இறைவழிபாட்டு பேராயத்தின் செயலர், பேராயர் ஆர்தர் ரோச் அவர்கள், வத்திக்கான் செய்திக்கு வழங்கிய ஒரு பேட்டியில், நாம் தடைசெய்ய விழைவது, நோய்கிருமியைத்தானே ஒழிய, செபத்தை அல்ல என்ற கருத்தை வலியுறுத்திக் கூறினார்.

உயிர்ப்புப் பெருவிழா நிகழும் தேதி, தள்ளிவைக்கப்பட முடியாது என்ற காரணத்தால் புனித வார வழிபாடுகளில் தேவையான மாற்றங்களை இத்திருப்பேராயம் பரிந்துரைத்துள்ளது என்று கூறிய பேராயர் ரோச் அவர்கள், தவக்காலத்தின் முதல் நாள் நாம் சாம்பலைப் பெற்றுக்கொண்ட நேரம் முதல், நாம் அனைவரும் மண்ணாகப் போகும் உண்மை நமக்கு நினைவுறுத்தப்பட்டு வருகிறது என்று எடுத்துரைத்தார்.

விசுவாசிகள் அனைவரும் தனித்தனியே, வீடுகளில் இருந்தவண்ணம் இந்த வழிபாடுகளில் கலந்துகொள்ளும் வேளையில், முன்னெப்போதும் இல்லாத அளவு, தங்கள் செபங்களை அதிகரித்துக்கொள்ள, இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று, பேராயர் ரோச் அவர்கள் இப்பேட்டியில் அழைப்பு விடுத்தார்.

திருவழிபாட்டு பேராயம், மார்ச் 25, இப்புதனன்று வெளியிட்ட புனித வார வழிபாடுகளின் மாற்றங்கள், திருத்தந்தையின் ஒப்புதலோடு வெளியாயின என்பதும், இந்த மாற்றங்கள், 2020ம் ஆண்டுக்கு மட்டும் உரியன என்பதும் குறிப்பிடத்தக்கன.

Comments are closed.