கொரோனா வைரஸ் தொற்றுக்கு முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியின் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு முடிவு நெருங்கி விட்டது என்றும் தற்போதைய மனித அழிவு நிலைமையிலிருந்து உலகம் மீண்டுவிடும் எனவும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மைக்கேல் லெவிட் கணித்துள்ளார்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும், வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் லெவிட், சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமூக விலகல் இந்த நேரத்தில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியமான ஒரு சக்தியை உலகிற்கு அளித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய போது, சீனா குறித்து நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருந்த போதிலும், மைக்கேல் லெவிட் துல்லியமான கணிப்புகளை வெளியிட்டிருந்தார்.

சீனாவில் 80 ஆயிரம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்படுவார்கள் மற்றும் 3,250 உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று மைக்கேல் லெவிட் மதிப்பிட்டார்.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸால் 81,470 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3,304 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் அவரின் கூற்றின் படியே, சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸின் மையமாக இருந்த ஹூபே மாகாணம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் தற்போது இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது. இதைத் தொடர்ந்து மைக்கேல் லெவிட்டின் கருத்து உலக மக்களிடையே மன ஆறுதலையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.