மார்ச் 25, பகல் 12 மணிக்கு இயேசு கற்றுக்கொடுத்த செபம்

உலகில் கோவிட்-19 தொற்றுக்கிருமி பரவுவதைத் தடைசெய்யும் நோக்கத்தில், அன்னை மரியாவுக்கு ஆண்டவருடைய பிறப்பு அறிவிக்கப்பட்ட பெருவிழாவாகிய மார்ச் 25, வருகிற புதன்கிழமை பகல் 12 மணிக்கு, உலகிலுள்ள அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒரே குரலாய், நம் இறைத்தந்தையை நோக்கிச் செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று அழைப்பு விடுத்தார்.

மார்ச் 22, இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் மாளிகையிலுள்ள தன் நூலகத்திலிருந்து, கிறிஸ்துவே நம் ஒளி என்ற கருத்தில் மூவேளை செப உரையாற்றியபின், கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடியால், அதிகத் தனிமை, மற்றும், சோதனையை எதிர்கொள்ளும்  மக்களுக்கு நம் அருகாமையைத் தெரிவிப்போம், நாம் செபத்தில் ஒன்றித்திருப்போம் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பரிவன்பு மற்றும், கனிவு நிறைந்த உள்ளத்துடன் செபிப்போம் என்று கூறியத் திருத்தந்தை, கொரோனா தொற்றுக்கிருமி அச்சுறுத்தலால் மனித சமுதாயம் முழுவதும் அச்சத்தால் நடுங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அனைத்து கிறிஸ்தவர்களும் ஒன்றுசேர்ந்து ஒரே குரலாய் விண்ணை நோக்கி எழுப்புமாறு பரிந்துரைக்கிறேன் என்று கூறினார்.

மங்களச்செய்தி பெருவிழா நாள்

மார்ச் 25, வருகிற புதன்கிழமையன்று, நிறைய கிறிஸ்தவர்கள், அன்னை மரியாவுக்கு ஆண்டவருடைய பிறப்பு அறிவிக்கப்பட்ட நிகழ்வை கொண்டாடும்வேளை, அன்று பகல் 12 மணிக்கு, இயேசு கற்றுக்கொடுத்த, நம் வானகத்தந்தையை நோக்கிய உலகளாவிய செபத்தை பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் கிறிஸ்தவர்களுடன் இணைந்து, திருஅவைகளின் தலைவர்கள் மற்றும், அனைத்து கிறிஸ்தவ குழுமங்களின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து செபிக்குமாறு அழைப்பு விடுக்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

கிறிஸ்துவின் உயிர்ப்பின் வெற்றியைக் கொண்டாடுவதற்கு தங்களையே தயாரித்துவரும் அவரின் சீடர்கள் அனைவரின் ஒன்றுசேர்ந்த செபத்திற்கு, ஆண்டவர் செவிசாய்ப்பாராக என்றும் திருத்தந்தை கூறினார்.

Comments are closed.