புது ஒளியை வழங்குகிறார் இறைவன்
தொற்றுநோய் பாதிப்பிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட செபிக்குமாறு அழைப்பு விடுத்தும், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்த தன் சிந்தனைகளைப் பகிர்ந்தும், நான்கு டுவிட்டர் செய்திகளை இஞ்ஞாயிறன்று வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்று உலகை வாட்டிவரும் கொரோனா தொற்று நோயால், உறவினர்களின் அருகாமையின்றி தனிமையில் இறந்துவரும் மக்களுக்காகவும், அவர்களின் குடும்பத்தினருக்காகவும் செபிப்போம் என, ஞாயிறு தின முதல் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, இயேசு நம்மை கடந்து செல்லும்போது என்ன நிகழ்கிறது என்பதை புரிந்துகொள்வோம் என கூறியுள்ளார்.
திருத்தந்தையின் மூன்றாவது டுவிட்டர் செய்தியும், நற்செய்தி வாசகத்தையே மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. நம்மையும் இவ்வுலகையும் தெளிவாகப் பார்ப்பதிலிருந்து நம்மை மறைக்கும் நம் பாவங்களை மன்னித்து, நமக்கு புது ஒளியை வழங்குகிறார் இறைவன் என எழுதியுள்ளார்.
கொரோனா தொற்றுநோய் பாதிப்பு குறித்து தன் நான்காவது டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றிணைந்த செபம், கருணை, மற்றும், அக்கறை வழியாக, இந்த நோய்க்கு நாம் பதிலுரைப்போம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, வரும் புதன் நண்பகலில், இயேசு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்த செபத்தை எடுத்துரைப்போம் என அதில் விண்ணப்பித்துள்ளார்.
Comments are closed.