நற்செய்தி வாசக மறையுரை (மார்ச் 11)

தவக்காலம் இரண்டாம் வாரம் புதன்கிழமை
மத்தேயு 20: 17-28
பதவிக்கு ஆசைப்பட்ட சீடர்கள்
நிகழ்வு
திருக்குறளைப் பரப்பும் பெரும்பணியைச் செய்துவந்த அவினாசிலிங்கமும் காந்தியத்தை முழுமூச்சாகக் கடைப்பிடித்து வந்த சுப்பராமனும் தென்னாட்டுத் திலகர் எனப் போற்றப்பட்ட வேதரத்தினமும் நெருங்கிய நண்பர்கள்.
இந்த மூன்று நண்பர்களில் ஒருவரான சுப்பராமனுக்கு அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் இராமசாமியிடமிருந்து தமது அரசபையில் கல்வி மற்றும் சுகாதாரப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு வந்தது. உடனே அவர், “இந்தப் பொறுப்பிற்கு நான் பொருத்தமானவர் கிடையாது; என்னை விட என் நண்பர் அவினாசிலிங்கமே பொருத்தமானவர்” என்று அவரைக் கைகாட்டினார்.
அவினாசிலிங்கமோ, “என்னை விட வேதரத்தினம்தான் மிகவும் பொருத்தமானவர்” என்று அவரைச் சுட்டிக்காட்டினர். அவர் சுப்பராமனைச் சுட்டிக்காட்டினர். இப்படி இவர்கள் மூவரும் தனக்குப் பதவி வேண்டாம்… அடுத்தவருக்குக் கொடுங்கள் என்று பேசிக்கொண்தைக் கேட்ட, முதல்வர் ஓமந்தூர் இராமசாமி மிகவும் ஆச்சரியப்பட்டார். பிறகு அவர், பதவியை ஒருவருக்குத்தான் கொடுக்கவேண்டும் என்பதால், அந்தப் பதவியை அவினாசிலிங்கத்திற்குப் கொடுத்தார்.
பதவிக்கு ஆசைப்படாத இந்த மூன்று நண்பர்களும் நமது கவனத்திற்கு உரியவர்களாக இருக்கின்றார். நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் உயர் பதிவிகளுக்கு ஆசைப்பட்டு வாக்குவாதம் செய்வதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தம் பாடுகளைக் குறித்து அறிவித்த இயேசு
ஆண்டவர் இயேசு தன் சீடர்களோடு எருசலேமிற்குச் சென்றுகொண்டிருக்கும்பொழுது, அவர்களிடம் அவர் தன் பாடுகளைக் குறித்து எடுத்துக்கூறுகின்றார். ‘இயேசு தன் பாடுகளைக் குறித்துக் கூறுகின்றாரே…! அது குறித்து ஏதாவது கேட்கலாமே…!’ என்று சீடர்கள் நினைக்கவில்லை. மாறாக, தங்களுக்கு என்ன பதவி கிடைக்கும் என்றே நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், இயேசு மறுவுலக வாழ்க்கையைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, அவருடைய சீடர்களோ இவ்வுலக வாழ்க்கையைக் குறித்தும் உயர்பதவிகளை வகிப்பதைக் குறித்தும் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். ‘அவர்களுடைய பிரச்சனை அவர்களுக்கு’ என்று வேடிக்கையாகச் சொல்வார்களே! அதுதான் இயேசுவின் சீடர்களைப் பொருத்தமட்டில் நடக்கின்றது.
பதவிக்கு ஆசைப்பட்ட இயேசுவின் சீடர்கள்
இயேசு தன் பாடுகளைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கையில். யோவான் மற்றும் யாக்கோபின் தாய் இயேசுவிடம், நீர் ஆட்சிபுரியும்பொழுது என் மக்களாகிய இவர்களுள் ஒருவன் உம்முடைய வலப்புறமும் இன்னொருவன் உம்முடைய இடப்புறமும் அமரச் செய்யும் என்று ஒரு வேண்டுகோளை வைக்கின்றார். இயேசு அவரிடத்தில் என்ன மறுமொழி கூறுகினார் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது முன், அவர் யார் எனத் தெரிந்துகொள்வது நல்லது.
யோவான் மற்றும் யாக்கோபின் தாயார், இயேசுவைத் தொடக்கத்திலிருந்து, அவர் கல்வாரி மலையில் சிலுவையில் அறியப்பட்டதுவரை அவரைப் பின்பற்றி வந்தவர் (மத் 27: 56). மேலும் இவர் இயேசுவின் தாய் மரியாவின் சகோதரியாகவும் இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. இப்படியிருக்கையில் இவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அரசராய் வருவார்… அப்பொழுது அவருடைய அரசபையில் தங்களுடைய இரண்டு மகன்களுக்கும் வலப்புறமும் இடப்புறமும் இடம்வேண்டும் என்று கேட்கின்றார். இவர் இவ்வாறு கேட்டதும் இயேசு, நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா…? என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது என்னுடைய செயல் அல்ல… என்று கூறுகின்றார்.
‘நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?’ என்று இயேசு அவர்களைப் பார்த்துக் கேட்டது, அவர் அடையப்போகும் பாடுகளை நினைவுபடுத்துவதாக இருக்கின்றது. இயேசு அடைந்த துன்பத்தை பின்னாளில் யாக்கோபும் (திப 12:2) யோவானும் (திவெ 1:9) அடைந்தார்கள். ஆனால், அவர்கள் இயேசுவின் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருள்வதுதான் இறைவனின் கையில் இருக்கின்றது இயேசு மிகத் தெளிவாகக் கூறுகின்றார்.
அதிகாரம் என்பது அடக்கி ஆள அல்ல, அன்புப்பணி செய்ய
யோவான் மற்றும் யாக்கோபின் தாயார் இயேசுவிடம் ஒரு வேண்டுகோள் வைக்க, அதற்கு இயேசு தக்க மறுமொழிகூறியதைத் தொடர்ந்து, மற்ற சீடர்கள் அந்த இரண்டு சகோதர்களுக்கு எதிராகச் சினம் கொள்கின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகின்றவர் தொண்டராக இருக்கட்டும்; முதன்மையானவராக இருக்க விரும்புகின்றவர் பணியாளராக இருக்கட்டும் என்று கூறுகின்றார். இயேசுவைப் பொறுத்தளவில் அதிகாரம் என்பது அடக்கி ஆள்வதற்கு அல்ல, அன்புப் பணி செய்யவே. அதைத்தான் தன் வாழ்வின் மூலம் இயேசு வெளிப்படுத்தினார். ஆகவே, நாம் இயேசு வாழ்ந்து காட்டிய முன்மாதிரியைப் பின்பற்றி, அதிகாரத்தை அன்பு செலுத்தப் பயன்படுத்துவோம்.
சிந்தனை
‘கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்’ (எபே 5: 21) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் அடுத்தவர்மீது அதிகாரம் செலுத்துபவர்களாக இல்லாமல், ஒருவருக்கொருவர் பணிந்திருப்போம். ஒருவர் மற்றவருக்கு மதிப்பளிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.