நம் பாவ அறிக்கை, இதயத்தின் ஆழத்திலிருந்து எழவேண்டும்
நம் பாவங்களை ஏற்று, அவற்றை அறிக்கையிட்டால் மட்டும் போதாது, அப்பாவங்களுக்குரிய குற்ற ஒப்புதல் நம் இதயத்தில் எப்போதும் தங்கியிருக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியில் பரவிவரும் கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தையொட்டி, மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் நோக்கத்தில் இத்திங்கள் முதல் திருத்தந்தையின் காலை திருப்பலியில் பங்குபெற மக்கள் அனுமதிக்கப்படாத நிலையில், நேரடியாக ஒளிபரப்பப்படும் இக்காலை திருப்பலியை நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தானியேல் நூலில் பாவங்களை ஏற்று அறிக்கையிடுதல் பற்றி எடுத்துரைக்கும் முதல் வாசகம் குறித்து தன் மறையுரையை வழங்கினார்.
நம் பாவங்களை அறிக்கையிட்டு நாம் ஒப்புரவு அருளடையாளத்தை பெறும்போது, நம் இதயத்தை ஆழமாக ஆய்வுசெய்து, நம் பாவங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறியத் திருத்தந்தை, இத்தகைய அறிக்கை உண்மையானதாக இருக்க வேண்டுமெனில் அது இதயத்திற்குள்ளேயும் தங்கியிருக்க வேண்டும் என்றார்.
பாவங்களை வெறுமனே அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெற்றுச் செல்வதல்ல ஒப்புரவு அருளடையாளம், மாறாக, அந்த அறிக்கை நம் இதயத்தின் ஆழத்திலிருந்து எழுவதாக இருக்கவேண்டும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் பாவங்கள் குறித்து நாம் வெட்கப்படுவது நமக்கு அருளாக மாறுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நம் பாவங்கள் குறித்த நினைவுகள் இருந்தால் மட்டும் போதாது, அது குறித்து வெட்கப்படவும் வேண்டும், இதுவே இறைவனின் இதயத்தைத் தொட்டு நமக்கு இரக்கத்தை பெற்றுத் தருகிறது என்றார்.
ஒப்புரவு அருளடையாளத்தை நாடிச்செல்லும்போது, நம் பாவ பட்டியலை மட்டும் எடுத்துறைத்தால்போதாது, நன்மைத்தனமும் இரக்கமும் நீதியும் நிறைந்த இறைவனிடம், நம் பாவங்கள் குறித்த வெட்க உணர்வுகளையும் தெரிவிக்க வேண்டும் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.