திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனக்காகவும் செபிக்குமாறு விண்ணப்பித்துள்ளார்

திருப்பீடத்தின் உயர் அதிகாரிகள், ஏற்கனவே திட்டமிட்டபடி, உரோம் நகருக்கருகே அரிச்சா (Ariccia) எனுமிடத்தில் அமைந்துள்ள, தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில், தங்கள் ஆண்டு தியானத்தைத் துவங்கியிருக்க, அதே தியானத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் இருந்தவண்ணம் பங்குபெறுகிறார்.

கடந்த வாரம் வியாழன் முதல், தன் உடல் நலக்குறைவு காரணமாக, பொது சந்திப்புக்களை தவிர்த்துவந்த திருத்தந்தை, வத்திக்கானில், சாந்தா மார்த்தா இல்லத்திலேயே தங்கியிருந்து, இஞ்ஞாயிறு முதல், வெள்ளி முடிய, தன் ஆண்டு தியானத்தை தொடர்ந்து வருகிறார் என்றும், முந்தைய ஆண்டுகளைப் போல், இவ்வாண்டும், தியானம் நடைபெறும் வாரத்தில், திருத்தந்தை, டுவிட்டர் செய்திகளை வெளியிடமாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இயேசு சந்தித்த சோதனைகளைக் குறித்து, இஞ்ஞாயிறு திருப்பலியில் வாசிக்கப்பட்ட நற்செய்தியை மையப்படுத்தியும், இஞ்ஞாயிறு மாலை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு தியானத்தை மையப்படுத்தியும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று, இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டார்.

“தன்னை சிரமங்களுக்கு உள்ளாக்க மும்முறை முயன்ற தீயோனுக்கு, இயேசு எவ்விதம் பதிலளித்தார் என்பதை, இன்றைய நற்செய்தியில் காண்கிறோம். சோதனைகளை எதிர்கொள்ளும்போது, நாம் எவ்விதம் விழிப்புடன் செயல்படவேண்டும் என்பதையும், இவ்வுலகின் போக்குகளுக்கு நம்மையே கையளித்துவிடக் கூடாது என்பதையும் இயேசுவின் சோதனைகளிலிருந்து கற்றுக்கொள்கிறோம்” என்ற சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகவும், இஞ்ஞாயிறு மாலையிலிருந்து ஒரு வார தியானத்தைத் துவக்கும் திருப்பீட அதிகாரிகளுக்காகவும் செபிக்குமாறு விண்ணப்பித்துள்ளார்.

Comments are closed.