கடவுள் நம்மீது வைத்துள்ள அன்பை அனுபவித்தல்
கடவுளிடமிருந்து நாம் தொலைவில் இருக்கும்போது, அவர் நமக்காக கண்ணீர் சிந்துகிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலையில், தன் மறையுரையில் கூறினார்.
அரியணையைக் கைப்பற்றுவதற்காக, அரசர் தாவீதின் மகன் அப்சலோம், தன் தந்தை தாவீதுக்கு எதிராகத் தொடுத்த நீண்ட போர், அப்சலோமின் இறப்போடு முடிவுக்கு வந்தது பற்றிச் சொல்லும், சாமுவேல் 2ம் புத்தகத்திலிருந்து வாசிக்கப்பட்ட, திருப்பலியின் முதல் வாசகத்தை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 4, இச்செவ்வாய் காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார்.
அனைத்து மக்களும், அப்சலோமிற்குச் சார்பாக நின்றபோது, தாவீது எவ்வாறு எருசலேமைவிட்டுத் தப்பிச்சென்றார் என்று கூறியத் திருத்தந்தை, தாவீது, வெறுங்காலோடு, தலையை மூடிக்கொண்டு ஓடினார், அச்சமயத்தில் சிலர் அவரை அவமதித்து அவர்மீது கல்லெறிந்தனர், ஆனால், அப்சலோம் இறந்த செய்தி கேட்டபோது, அரசர் தாவீது, மிகவும் வேதனையடைந்து, “என் மகன் அப்சலோமே! உனக்கு பதில் நான் இறந்திருக்கலாமே! என்று கதறி அழுதார் என்று கூறினார்.
எதற்காக கண்ணீர் சிந்துகிறீர், உம் மகன் உமக்கு எதிராக இருந்தான், உம்மை, உமது தந்தைமையை மறுதலித்தான், அவன் உம்மை அவமதித்தான், துன்புறுத்தினான், அவ்வாறிருக்க, அவனது இறப்பைக் கொண்டாடுங்கள், அகமகிழுங்கள் என்று மற்றவர் சொன்னபோது, அரசர் தாவீதோ, என் மகனே, என் மகனே என்றுதான் கதறினார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தாவீதின் மனவேதனை, கடவுளின் இதயத்தை
தாவீது கதறி அழுதது, ஒரு வரலாற்று உண்மை, அதேநேரம் அது ஓர் இறைவாக்கு, அது நம்மை கடவுளின் இதயத்தைப் பார்க்க வைக்கின்றது, நாம் கடவுளைவிட்டு விலகியிருக்கும்போதும், பாவத்தால் நம்மை நாமே அழித்துக்கொண்டிருக்கும்போதும், திசைமாறி இருக்கும்போதும், ஆண்டவர் நமக்கு தந்தையாக இருக்கிறார், அவர் ஒருபோதும் தனது தந்தைமையை மறுதலித்தது கிடையாது, என் மகனே, என் மகனே என்று அவர் சொல்கிறார் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் நம் பாவங்களை அறிக்கையிடுகையில், கதறியழும் கடவுளை நாம் சந்திக்கின்றோம், ஒப்புரவு அருள்சாதனம், கறைகளை அகற்றும் இயந்திரங்கள் போன்றது அல்ல, மாறாக, எனது இறைத்தந்தையாக, எனக்காக அழுகின்ற தந்தையிடம் செல்வதாகும் என்று திருத்தந்தை, தன் மறையுரையில் கூறினார்.
தந்தைக்குரிய அன்பு
“என் மகன் அப்சலோமே! உனக்கு பதில் நான் இறந்திருக்கலாமே! என்ற தாவீதின் வார்த்தைகள், இறைவாக்குகள் என்றும், அவை உண்மையில் கடவுளின் செயலைக் காட்டுகின்றன என்றும் கூறியத் திருத்தந்தை, மூவொரு கடவுளின் இரண்டாம் ஆள், நம் இடத்தில் இறக்கும் அளவுக்கு, கடவுளின் அன்பு, தந்தைக்குரிய அன்பு என்று கூறினார்.
கடவுள் மனிதனாகப் பிறந்து நமக்காக இறந்தார், திருச்சிலுவையை நோக்கும்போது இதை நினைத்துப் பார்ப்போம் என்றுரைத்த திருத்தந்தை, இயேசுவில், கடவுள் நம் இடத்தில் இறந்தார் என்றும், நம் வாழ்வில் துன்ப நேரங்களில், கடவுளைவிட்டு தொலைவில் இருப்பதாக உணரும் வேளைகளில், உன்னையே கொலை செய்யாதே, நான் உனக்காக இறந்துள்ளேன் என்ற கடவுளின் குரலை, நம் இதயங்களில் கேட்போம் என்று கூறினார்.
இயேசு எருசலேம் நகருக்காக கண்ணீர் சிந்தியது பற்றிய, இத்திருப்பலியின் நற்செய்தி வாசகம் பற்றியும் மறையுரையின் இறுதியில் கூறியத் திருத்தந்தை, இயேசு நம்மை அன்புகூர அனுமதிக்காததால், அவர் நமக்காக அழுகிறார் என்று கூறினார்.
Comments are closed.