மாதாவின் வல்லமை மற்றும் அருள் நிறை மந்திரத்தின் வல்லமை

புனித ஜெத்ரூத்தம்மாளின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து..

ஆன்மாக்களின் அர்ச்சிப்பில் தேவதாயின் பங்கு என்ன என்பதைப்பற்றி மற்ற அர்ச்சிஷ்ட்டவர்களை விட ஜெத்ரூத் நன்கு அறிந்திருந்தாள். பரிசுத்த தமத்திருத்துவம் தேவதாயை எவ்வளவு உயர்வான இடத்தில் வைத்திருக்கிறதென்றால் தெய்வீகத் திட்டம் அனைத்தையும் செயல்படுத்துவதில் தேவதாயின் பங்கு இன்றியமையாததாகிவிட்டது என்று நமதாண்டவரே ஜெத்ரூத்திற்கு தெறிவித்தார்.

ஒரு நாள் யாமப்புகழ் நேரத்தில் மங்கள் வார்த்தை ஜெபம் பாடப்பட்டது. அப்போது பிதா, சுதன், இஸ்பிரித்துசாந்து (பரிசுத்த ஆவியானவர்) ஆகிய ஆட்களிடமிருந்து மூன்று ஒளிக்கதிர்கள் புறப்பட்டு தேவதாயின் உள்ளத்தை ஊடுறுவிப் பாய்ந்து பின்பு அவை புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தது. அப்போது அவளது உள்ளத்தின் ஆழத்தில் ஒரு குரல் கேட்டது. அது,

“ பிதாவின் வல்லமைக்கு அடுத்தபடி, சுதனின் ஞானத்திற்கு அடுத்தபடி, இஸ்பிரித்துசாந்துவின் இரக்கத்திற்கு அடுத்தபடி தேவதாயின் வல்லமையை, ஞானத்தை, இரக்கத்தைப்போல இன்னொரு வல்லமை, ஞானம், இரக்கம் இல்லை” என்று கூறியது. அப்போது இன்னொரு செய்தி அவளுக்குத் தெறிவிக்கப்பட்டது. பூமியில் ஒரு ஆன்மா மங்கள வார்த்தை ஜெபத்தை ( அருள் நிறை ஜெபம்) பக்தியுடன் சொல்லும் போதெல்லாம் இது போல தமத்திருத்துவத்தின் மூன்று ஆட்களிடமிருந்து ஒளிக்கதிர்கள் புறப்பட்டு மாமரியின் இருதயம் வழியாக மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே போய்ச் சேருகின்றன என்று தெறிவித்தது. அதாவது ஆண்டவர் அனுப்பும் மகிழ்சிகளை தேவதாயின் வழியாகவே சம்மனசுக்களும் மற்ற அர்ச்சிஷ்ட்டவர்களும் பெற்றுக்கொள்கிறார்கள் என்றும், இதனால் மனுவுருவெடுத்ததின் வழியாக ஆண்டவர் உண்டாக்கிய ஞான திரவியங்கள் இன்னும் அதிகமாக உண்டாக்கப்படுகின்றன என்று தெறிவிக்கப்பட்டது.

Comments are closed.