2020ல், 17 மனித உரிமை ஆர்வலர்கள் கொலை
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், 2020ம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் தலைவர்கள் கொலைசெய்யப்படுவது மற்றும், சமுதாயங்கள் அச்சுறுத்தப்படும் செய்திகள் வந்துகொண்டிருப்பது கவலை தருகின்றது என்று அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
வன்முறைகள் மற்றும், அறிவற்று ஆற்றப்படும் கொலைகளால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள், நண்பர்கள் மற்றும், இவற்றில் உயிர் தப்பியவர்கள் ஆகிய அனைவருடனும், ஆயர்கள் தங்களின் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துள்ளனர்.
2020ம் ஆண்டு பிறந்த 17 நாள்களுக்குள் கொலைசெய்யப்பட்டுள்ள, 17 மனித உரிமை ஆர்வலர்கள், கிராம சமுதாயங்களின் தலைவர்கள் மற்றும், பிரதிநிதிகள் என்பதே, இக்கொலைகளுக்குக் காரணம் என்று, கொலம்பிய ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.
கொலம்பியாவில், அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, நகராட்சி மற்றும், மாநிலங்களின் புதிய தலைவர்கள், குடிமக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட, இத்தகைய அச்சுறுத்தல்களை நிறுத்துவதற்கு, தேசிய அளவில் கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு மனிதரின் வாழ்வு புனிதமானது, அது மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஆயர்கள், நம் சகோதரர், சகோதரிகளுக்கு எதிராக ஆற்றப்படும் கொலைகளும், வன்முறை நடவடிக்கைகளும், சனநாயகத்திற்கும், நாட்டின் நிறுவனங்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன என்று எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே, 2020ம் ஆண்டில் 21 கொலைகள் இடம்பெற்றுள்ளன என்று, சனவரி 17, இவ்வெள்ளிக்கிழமையன்று, அந்நாட்டு அரசு-சாரா அமைப்பு ஒன்று வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. 2019ம் ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற 23 கொலைகள் உட்பட, அவ்வாண்டில் 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன
Comments are closed.