இளையோர் வழிநடத்திச் செல்வர்

2019ம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு பெருவிழாவன்று, வத்திக்கான் வானொலி குடும்பத்தினருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

முந்தைய ஆண்டுகளைப் போலவே, 2019ம் ஆண்டு, பல சவால்களைச் சந்தித்துள்ளது. அச்சவால்களை எதிர்கொள்ளவும், அவற்றை ஓரளவு வெற்றிகொள்ளவும் இளையோர் விழிப்படைந்திருப்பது, இவ்வாண்டின் முக்கிய மாற்றம் என்று கூறலாம். குறிப்பாக, சுற்றுச்சூழல் மீதும், பூமிக்கோளத்தின் மீதும் இளையோர் காட்டும் அக்கறை அண்மையக் காலங்களில் தெளிவாகத் தெரிகின்றது.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த, 15 வயது நிறைந்த இளம்பெண் கிரேட்டா துன்பர்க் (Greta Thunberg) அவர்கள், 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், Skolstrejk för klimatet ‘காலநிலைக்காக பள்ளி புறக்கணிப்பு’ என்ற சொற்கள் எழுதப்பட்ட அறிவிப்பு பலகையுடன், சுவீடன் பாராளுமன்றத்திற்கு முன் அமர்ந்தார்.

இவரைத் தொடர்ந்து, பல நாடுகளில், இலட்சக்கணக்கான மாணவ, மாணவியர், வெள்ளிக்கிழமைகளில், “Fridays for Future’’, அதாவது, “வருங்காலத்திற்காக வெள்ளிக்கிழமைகள்” என்ற விருதுவாக்குடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாண்டு, ஏப்ரல் 17ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் பொது மறைக்கல்வி உரையில் கலந்துகொள்ள, புனித பேதுரு வளாகத்திற்கு வந்திருந்த இளம்பெண் துன்பர்க் அவர்கள், மறைக்கல்வி உரைக்குப்பின் திருத்தந்தையைச் சந்தித்தபோது, “திருத்தந்தையே, சுற்றுச்சூழல் மீது நீங்கள் காட்டிவரும் அக்கறை, எங்களுக்கு நம்பிக்கை தருகிறது” என்று கூறினார். அவரிடம் திருத்தந்தை, “தொடர்ந்து போராடுங்கள்” என்று கூறினார்.

பூமிக்கோளத்தின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவற்றைக் குறித்து அக்கறையேதும் இல்லாமல் அரசியல் தலைவர்களும், வர்த்தக நிறுவனங்களும் நடந்துகொள்ளும் கேவலத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் இளையோர், பூமிக்கோளத்தைக் காப்பாற்றுவார்கள் என்று நம்புவோம்.

சுற்றுச்சூழல் மீது கத்தோலிக்கத் திருஅவை கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்த, இவ்வாண்டு, அக்டோபர் மாதத்தில், வத்திக்கானில், ஒரு சிறப்பு ஆயர்கள் மாமன்றம் நடைபெற்றது. பூமியின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் காடுகளை மையப்படுத்தி நடந்த அந்த மாமன்றம், இயற்கையின் மீதும், சுற்றுச்சூழல் மீதும் நாம் காட்டவேண்டிய அக்கறை, மதிப்பு ஆகியவற்றை வலியுறுத்தியது.

நாம் அடியெடுத்து வைக்கும் 2020ம் ஆண்டை நம்பிக்கையோடு அணுகிச் செல்வோம். குறிப்பாக, எதிர்காலத்தை வடிவமைக்கும் அறிவுத்திறனும், உறுதியும் கொண்ட இளையோர் நம்மை வழிநடத்திச் செல்வர் என்ற நம்பிக்கையுடன் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையும், புத்தாண்டையும் நாம் கொண்டாடுவோம்.

நாளை, 25-12-2019 என்று தேதியிட்ட வத்திக்கான் வானொலிச் செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் “Urbi et Orbi”, அதாவது, “ஊருக்கும், உலகுக்கும்” என்ற சிறப்புச் செய்தி இடம்பெறும்

Comments are closed.