கிறிஸ்து பிறப்பு தூதர்களின் நற்செய்தி- இனிய கிறிஸ்து பிறப்பு நல் வாழ்த்துக்கள்
குழந்தை இயேசுவின் பிறப்பைக் காண்பதற்கு, இருவேறு குழுவினருக்கு அழைப்பு விடப்பட்டது. இவர்களில், வானதூதர் வழியே அழைக்கப்பட்ட இடையர் குழுவினருக்கு நாம் விழா எடுப்பதில்லை. ஆனால், விண்மீன் வழியே அழைக்கப்பட்ட ஞானிகளுக்கு விழா எடுக்கிறோம். ஏன் இந்த வேறுபாடு என்பதைச் சிந்திப்பது, புதுமைகள் குறித்த நம் தேடலுக்கு உதவியாக இருக்கும்.
இடையர்களுக்கு, வானதூதர்கள் நேரடியாகத் தோன்றி, கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை, தெளிவானச் சொற்களில் அறிவித்தனர். கவனத்தை ஈர்க்கும் காட்சி வழியே, இயேசுவின் பிறப்புச் செய்தி அவர்களை வந்தடைந்ததால், அதை, புதுமையென்று ஏற்பதற்கு, இடையர்களுக்கு தயக்கம் தோன்றியிருக்காது.
இதற்கு மாறாக, கீழ்த்திசை ஞானிகளுக்கோ, வெகு தூரத்தில், வானில் தோன்றிய ஒரு விண்மீன் வழியே, கிறிஸ்துவின் பிறப்பு அறிவிக்கப்பட்டது. பல்லாயிரம் விண்மீன்கள் நடுவே ஒளிர்ந்த அந்த விண்மீன், ஞானிகளுக்கு, வாய்மொழியாக எந்தச் செய்தியையும் சொல்லவில்லை. அந்த விண்மீன் தோன்றியது, நல்லதொரு செய்தியாகத்தான் இருக்கவேண்டும் என்று நம்பிய ஞானிகள், அந்த விண்மீன் அழைத்துச்சென்ற வழியில், தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். இயேசுவின் பிறப்பு என்ற புதுமையைக் கண்டனர். ஒரு விண்மீனைப் பின்பற்றி, பல நூறு மைல்கள் பயணம் செய்த இம்மூன்று ஞானிகளுக்கு விழா கொண்டாடுவது, பொருத்தமாகத் தெரிகிறது.
இவ்வுலகில், இன்றும், அற்புதமான அடையாளங்கள், சிறிதும், பெரிதுமாக, ஒவ்வொரு நாளும் வந்தவண்ணம் உள்ளன. இவற்றில் சில, இடையர்கள் அனுபவித்ததுபோல, இயல்பு வாழ்விலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன. அவ்வேளைகளில், அவற்றை, அற்புதங்கள், புதுமைகள் என்று எளிதில் ஏற்றுக்கொள்கிறோம். இவற்றிற்கு மாறாக, இன்னும் பல புதுமைகள், மிக, மிக எளிய அடையாளங்கள் வழியே நம்மைச் சுற்றி நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அவற்றை நாம் சரிவரப் புரிந்துகொண்டால், நமது வாழ்வு, அற்புதங்களால், புதுமைகளால் நிறைந்துவிடும். இதையே, கீழ்த்திசை ஞானிகள், நமக்குச் சொல்லித் தருகின்றனர். ஞானிகள் கொண்டிருந்த மனநிலையுடன், ஒத்தமை நற்செய்திகளில் கூறப்பட்டுள்ள புதுமைகளில், நம் தேடல் பயணத்தைத் தொடர்வோம்.
Comments are closed.