டிசம்பர் 14 : சனிக்கிழமை. நற்செய்தி வாசகம்

எலியா ஏற்கெனவே வந்துவிட்டார்; அவரை மக்கள் கண்டுணரவில்லை.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 10-13

இயேசுவும் சீடர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தபோது சீடர்கள் அவரிடம், “எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?” என்று கேட்டார்கள்.

அவர் மறுமொழியாக, “எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிடமகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்” என்றார்.

திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்துகொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரைச் சிந்தனை.

“திருமுழுக்கு யோவானைக் கண்டுணராத மக்கள்”

ஒரு சமயம் கரப்பான்பூச்சி ஒன்று மகிழ்ச்சியாகப் பறந்துசென்றுகொண்டிருந்தது. அப்பொழுது ஓரிடத்தில் வண்ணத்துப் பூச்சி ஒன்று பறக்க முடியாமல், கீழே கிடந்ததைக் கண்டது. அது கரப்பான்பூச்சியிடம், “கரப்பான் பூச்சி அண்ணா! எனக்கோர் உதவி செய்யமுடியுமா…? வண்டியில் வேகமாக வந்த ஒருவன் என்மீது மோதிவிட்டான். அதனால் என்னால் பறக்கமுடியவில்லை. நீ மட்டும் என்னை உன்னுடைய முதுகில் ஏற்றிக்கொண்டு, நான் இருக்கும் இடத்தில் கொண்டுபோய் இறக்கிவிட்டால், உனக்குக் கோடிப் புண்ணியமாகப் போகும்” என்றது. கரப்பான்பூச்சியும் வண்ணத்துப் பூச்சியின்மேல் இரக்கப்பட்டு, அதனைத் தன்னுடைய முதுகில் ஏற்றிக்கொண்டு, வானில் பறந்துசென்றது.

அது பறந்துசென்றுகொண்டிருக்கும்போது, புழு ஒன்று செடியில் ஊர்ந்துபோக முடியாமல் ஊர்ந்துபோனது. அது கரப்பான்பூச்சியைக் கண்டதும் அதனிடம், “கரப்பான் பூச்சி அண்ணா! என்னால் ஊர்ந்துபோக முடியவில்லை. நீங்கள் என்னை உங்களுடைய முதுகில் சுமந்துகொண்டு பக்கத்தில் உள்ள செடியில் என்ன விட்டுவிடுவீரகளா…?” என்றது. அதற்கு கரப்பான் பூச்சி அதனிடம், “ஏய் புழுவே! உன்னைப் பார்ப்பதற்கு மிகவும் அருவருப்பாக இருக்கின்றது. உன்னை எப்படி நான் என்னுடைய முதுகில் சுமந்துகொண்டு செல்வது…? அதெல்லாம் முடியவே முடியாது” என்று உறுதியாய்ச் சொன்னது. இது புழுவிற்குப் பெருத்த அவமானமாய்ப் போய்விட்டது.

இது நடந்து ஒரு மாதம் கழித்து, கரப்பான்பூச்சி மகிழ்ச்சியாக மேலே பறந்து வந்தது. அது வழியில் ஓர் அழகான வண்ணத்துப் பூச்சி செடியில் அமர்ந்து தேன் குடித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும், அந்த வண்ணத்துப் பூச்சியின் அருகே சென்று, “வண்ணத்துப் பூச்சியாரே! நீங்கள் என்னுடைய முதுகில் அமர்ந்துகொள்ளுங்கள். நான் உங்களை நீங்கள் போகவேண்டிய இடத்தில் கொண்டுபோய் இறக்கிவிடுகின்றேன்” என்றது. ‘வண்ணத்துப் பூச்சி தன்னுடைய முதுகில் அமர்ந்து வந்தால், அது தனக்குப் பெருமை’ என்ற எண்ணத்தோடுதான் அது இவ்வாறு கேட்டது. அதற்கு அந்த வண்ணத்துப் பூச்சி கரப்பான் பூச்சியிடம், “கரப்பான் பூச்சியாரே! நான் யாரென்று உங்களுக்குத் தெரியுமா…?” என்றது. “யாரென்று தெரியவில்லை… நீங்களே சொல்லிவிடுங்கள்” என்றது கரப்பான் பூச்சி. உடனே வண்ணத்துப்பூச்சி கரப்பான் பூச்சியிடம், “நான் வேறு யாருமல்ல… ஒரு மாதத்திற்கு முன்பு பார்ப்பதற்கு மிகவும் அருவருப்பாக இருக்கின்றது என்று ஒரு புழுவை உங்களுடைய முதுகில் ஏற்றிக்கொள்ளாமல் போனீர்களே!. அந்தப் புழுதான் நான்” என்றது. இதைக் கேட்ட கரப்பான் பூச்சியால் எதுவும் பேசமுடியவில்லை.

இந்தக் கதையில் வரக்கூடிய கரப்பான்பூச்சியைப் போன்றுதான் பலரும் மனிதர்களுடைய வெளித்தோற்றத்தைப் பார்த்துவிட்டு, அவர்களை புறக்கணிக்கின்ற ஒரு போக்கானது நிலவிக்கொண்டிருக்கின்றது. இன்றைய நற்செய்தியிலும் மக்கள் திருமுழுக்கு யோவானின் வெளித்தோற்றத்தைப் பார்த்துவிட்டு, அவர் யார்? எப்படிப்பட்டவர்கள்? என்பதை அறியாமலும் கண்டுணராமலும் இருப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

திருமுழுக்கு யோவானே இறைவாக்கினர் எலியா

இயேசு தோற்றமாற்றம் அடைந்தபின்பு, மலையை விட்டுக் கீழே இறங்கி வருகின்றபோது, அவருடைய சீடர்கள் அவரிடம், “எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகின்றார்களே, அது எப்படி?” என்று கேட்கின்றார்கள்.

இறைவாக்கினர் எலியா சுழற்காற்றில் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் (2 அர 2:11). இதனால் அவர் மெசியாவின் வருகைக்கு முன்பாக மீண்டும் வருவார் (மலா 5:6) என்ற நம்பிக்கையும், வந்தபின் எல்லாவற்றையும் சீர்படுத்துவார் (சீஞா 48:10) என்ற நம்பிக்கை யூதர்கள் நடுவில் பரவத் தொடங்கியது. இதனாலேயே இயேசுவின் சீடர்கள் அவரிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்கின்றார்கள். அப்பொழுதுதான் இயேசு அவர்களிடம், “எலியா ஏற்கனவே வந்துவிட்டார். மக்கள்தான் அவரை கண்டுணரவில்லை…” என்கின்றார். ஆம், இறைவாக்கினர் எலியா திருமுழுக்கு யோவானின் வடிவில் வந்தார் (லூக் 1:17) மக்களோ அவருடைய வெளித்தோற்றத்தைக் கண்டு அவரைப் புறக்கணித்தார்கள், துன்புறுத்தவும் செய்தார்கள்.

திருமுழுக்கு யோவானுக்கு ஏற்பட்ட இந்த நிலைதான் இன்று பலருக்கும் ஏற்படுகின்றது. இப்படி ஒருவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதை அறிய முற்படாமல், அவருடைய வெளித்தோற்றத்தைக் கொண்டு எடைபோடுவதால், அவருடைய சொல்ல வருகின்ற செய்தியை அறிந்துகொள்ள முடியாத நிலைதான் ஏற்படும். ஆகையால் நாம் ஒருவருடைய வெளித்தோற்றத்தை வைத்து எடைபோடாமல், அவர் சொல்ல வருகின்ற செய்தியை உள்வாங்கிக்கொண்டு, அதற்கேற்ப நம்முடைய வாழ்வைச் சீர்படுத்தினால், அது நிறைந்த பலனைத் தரும் என்பது உறுதி.

சிந்தனை.

‘ஒரு புத்தகத்தை அதனுடைய அட்டைப் படத்தை மட்டும் பார்த்து எடைபோடாதே’ என்பர். ஆகையால், நாம் யாரையும் அவர்களுடைய வெளித்தோற்றத்தை வைத்து எடைபோடாமல், அவர்கள் சொல்ல வருகின்ற செய்தியைக் கருத்தூன்றிக் கேட்டு, அதன்படி நம்முடைய வாழ்வை அமைத்துக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.