புனித பவுலுக்கும் இயேசுவுக்கும் நடந்த சம்பவங்கள்

இத்தாலியில் குளிர்காலம் துவங்கிவிட்டபோதிலும், திருப்பயணிகளின் கூட்டத்தை கணக்கில்கொண்டு, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தையின் மறைக்கல்வியுரைகள் கடந்த வாரம்வரை இடம்பெற்று வந்தன. ஆனால், இப்புதனன்று, சூரியன் பிரகாசமாக ஒளி வீசினாலும், குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்ததால், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில்  திருப்பயணிகளைச் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். உக்ரைனிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் குழு ஒன்றை முதலில் புனித பேதுரு பெருங்கோவிலில் சந்தித்த பின், புனித ஆறாம் பவுல் அரங்கிற்கு வந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

முதலில், திருத்தூதர் பணிகள் நூலில் இருந்து ஒரு பகுதி (தி.ப. 26, 22-23) பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது.

(புனித பவுல் அரசர் அகிரிப்பாவை நோக்கி,)  ஆயினும் கடவுளின் உதவிபெற்று, இந்நாள் வரை இறைவாக்கினரும் மோசேயும் நடக்கவிருப்பதாகக் கூறியதையே நானும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சான்றாகக் கூறி வருகிறேன். 23அதாவது, மெசியா துன்பப்படுவார்; எனினும் இறந்த அவர்முதலில் உயிர்த்தெழுந்து நம் மக்களும் பிற இனத்தாரும் ஒளி பெறுவர் என அவர்களுக்கு அறிவிப்பார் என்று அவர்கள் கூறியதையே நானும் கூறி வருகிறேன் (என்றார்) (தி.ப. 26, 22-23).

பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதர் பணிகள் குறித்த தன் மறைக்கல்வியைத் தொடர்ந்தார்.

அன்பு சகோதர சகோதரிகளே, திருத்தூதர் பணிகள் குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று, எவ்வாறு புனித பவுலின் மறைத்தூதுப்பணி, காலம் செல்ல, செல்ல, மிகுந்த துன்பங்கள் நிரம்பியதாக மாறியது என்பது குறித்து நோக்குவோம். அவர் எருசலேம் நகருக்குத் திரும்பி வந்தது, அவரை, பெரும் சித்திரவதைகளுக்கு உள்ளாகும் நிலைக்குத் தள்ளியது. சட்டத்திற்கு எதிராகவும் கோவிலுக்கு எதிராகவும் போதித்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவர் கைது செய்யப்பட்டு விலங்கிடப்பட்டார். நூற்றுவர் படைத்தலைவனால் விசாரிக்கப்பட்டபின், புனித பவுல், செசாரியாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறார். அங்கு, ஆளுநர் ஃபீலிக்சும் அரசர் அகிரிப்பாவும் இவர் குறித்த வழக்கிற்கு செவி மடுக்கின்றனர். இறுதியாக, பேரரசரிடம் தன் விண்ணப்பத்தை முன்வைத்தபின், உரோம் நகருக்குத் திரும்புகிறார், புனித பவுல்.  இவையனைத்திலும், புனித லூக்கா, புனித பவுலுக்கும், இயேசுவுக்கும், நடந்த சம்பவங்களின் ஒற்றுமையைக் காட்டுகிறார். புனித பவுல் அனுபவித்த துன்பங்கள் அனைத்தும், சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசுவைக் குறித்து  வீரத்துடன் பறைசாற்றுவதாக உள்ளன. புனித பவுல், இயேசுவின் மீது கொண்டிருந்த அன்பு, அவர் பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியையும், நற்செய்தியின் விடுதலை சக்தியை எடுத்துரைக்கும் கருவியாக மாற்றியது. பேரிடர்கள், மற்றும், கைது விசாரணைகளின்போது உறுதியுடன் செயல்பட்ட, மற்றும், அனைத்தையும் விசுவாசக் கண்களோடு பார்த்த புனித பவுலின் எடுத்துக்காட்டு, நம்மை விசுவாசத்தில் பலப்படுத்தி, நற்செய்தியின் மகிழ்வுக்கு நம் சான்றிலும், மறைப்பணி சீடத்துவத்திற்கான அழைப்பிலும் உறுதிப்படுத்துவதாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித ஆறாம் பவுல் அரங்கத்தின் மேடையில் வைக்கப்பட்டிருந்த புனித லூசியாவின் திருஉருவச் சிலையை அர்ச்சித்தார். உரோம் நகருக்கு வடகிழக்கே அமைந்துள்ள Fonte Nuova நகரில், 2000 ஆண்டுகள் பழமையுடைய ஒரு மலைக்குகை வாயிலில், புனித லுசியாவின் சிலை, டிசம்பர் 13, இவ்வெள்ளிக்கிழமையன்று, அதாவது, இப்புனிதரின் திருநாளன்று நிறுவப்படவுள்ளது. அத்திருவுருவச் சிலையை அர்ச்சித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் பின், அனைவருக்கும், தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

Comments are closed.