பாலஸ்தீனியர்களின் முழு விடுதலைக்கு கர்தினாலின் விண்ணப்பம்

புனித பூமியில் பாலஸ்தீனியர்கள் தங்கள் முழு உரிமைகளையும், மதிப்பையும் பெறும்வரை, அப்பகுதியில் உண்மையான அமைதியை உருவாக்குவது இயலாது என்று, இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், கொழும்புவில் நடைபெற்ற ஒரு கிறிஸ்மஸ் கூட்டத்தில் கூறினார்.

கொழும்புவில் செயலாற்றும் பாலஸ்தீனிய தூதரகத்தில், அண்மையில், கிறிஸ்மஸ் மரத்தின் விளக்குகளை ஏற்றிவைத்துப் பேசிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், பாலஸ்தீனியர்கள், தங்களுக்கு உரிமையான நாட்டில், முழு சுதந்திரத்துடனும், மதிப்புடனும் வாழும் நாள் விரைவில் வரவேண்டும் என்பதே, நல்மனம் கொண்ட அனைவரின் விருப்பம் என்று கூறினார்.

மத்தியக் கிழக்குப் பகுதியில், ஒரே இறைவன் மீது நம்பிக்கை கொண்டுள்ள யூத, கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் கருத்து வேறுபாடுகளை உரையாடல்கள் வழியே தீர்த்துக்கொள்வதற்கு அனைவரும் உதவிகள் செய்யவேண்டும் என்று கர்தினால் இரஞ்சித் அவர்கள் விண்ணப்பித்தார்.

இஸ்ரேல் அரசின் விரிவாக்க முயற்சிகளால் துன்புறும் பாலஸ்தீன் மக்களின் துயரங்களை தான் நேரில் கண்டதாக கூறிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், இவ்விரு நாடுகளும் தங்களையே சுயமாக ஆளக்கூடிய அரசுகள் என்ற எண்ணம், அப்பகுதியில் ஆழமாக வேரூன்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில், இலங்கையில், உயிர்ப்பு ஞாயிறன்று நடைபெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கென, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது என்றும், இத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கு பாலஸ்தீன மக்களின் சார்பில், 10 இலட்சம் ரூபாய் நன்கொடையை, பாலஸ்தீன தூதர் வழங்கினார் என்றும், ஆசிய செய்தி கூறுகிறது

Comments are closed.