“மாறிவரும் உலகில், வாசகர்களை நல்வழியில் நெறிப்படுத்துதல்”

“மாறிவரும் உலகில், வாசகர்களை நல்வழியில் நெறிப்படுத்துதல்” என்பதை தன் விருதுவாக்காகக் கொண்டிருக்கும் “Aggiornamenti Sociali” என்ற சமுதாய இதழின் நோக்கத்தையும், பணிகளையும் தான் பாராட்டுவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

1950ம் ஆண்டு, இத்தாலியின் மிலான் நகரில், இயேசு சபையினரால் உருவாக்கப்பட்ட “Aggiornamenti Sociali” என்ற சமுதாய இதழ், தன் 70வது ஆண்டை சிறப்பிக்கவிருக்கும் இவ்வேளையில், இந்த இதழில் பணியாற்றுவோர், மற்றும் இவ்விதழுக்கு உதவிகள் செய்வோர் அடங்கிய ஒரு குழு, டிசம்பர் 6, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்தது.

இச்சந்திப்பில் உரையாற்றிய திருத்தந்தை, சமுதாயத்தில் நிகழும் மாற்றங்களை, அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகவும், அந்த மாற்றங்களுக்கு ஏற்ற முறையில் சமநிலையோடு தங்களையே மாற்றிக்கொள்ளவும் தன் வாசகர்களைத் தூண்டும் இவ்விதழின் பணி போற்றுதற்குரியது என்று கூறினார்.

சமுதாய எதார்த்தங்களை தேர்ந்து தெளிவதும், வறியோரின் சார்பில் விருப்பத்தேர்வு செய்வதும், பிரிக்கமுடியாதவண்ணம், கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரே அழைப்பு என்பதை, தன் உரையில் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறியோருக்காக உழைப்பதற்கு முன், அவர்களோடு இணைந்து, அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதும் முக்கியம் என்பதை எடுத்துரைத்தார்.

மாறிவரும் இன்றையச் சூழலில், அனைத்தையும் ஆய்ந்து அறிவதற்கும் வழிநடத்துவதற்கும் ஆழ்ந்த அறிவுசார்ந்த எண்ணங்களை வெளிப்படுத்தும் இதழ்கள் தேவை என்று கூறிய திருத்தந்தை, “Aggiornamenti Sociali” இதழின் தொடர் பணிகளுக்கு மூன்று வழிமுறைகளை பரிந்துரைத்தார்.

சமுதாயத்தின் ஓரங்களுக்குத் தள்ளப்பட்டு, சிலவேளைகளில் சமுதாயத்திலிருந்து தூக்கியெறியப்படும் மக்களை, சமுதாயத்தின் கவனத்திற்கு கொணர்வது, சமுதாயக் கண்ணோட்டம் கொண்ட இதழின் முதல் பணி என்று திருத்தந்தை கூறினார்.

தலைமுறை இடைவெளிகளைக் குறைக்கும்வண்ணம், பெரியோர் மற்றும் இளையோரிடையே உரையாடல்களை வளர்ப்பது, மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கிடையே உரையாடலையும் சந்திப்பு கலாச்சாரத்தையும் வளர்ப்பது, இதழின் இரண்டாவது மற்றும் மூன்றாவது வழிமுறைகள் என்று திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

“Aggiornamenti Sociali” இதழில் பணியாற்றுவோர், தங்கள் மகிழ்வை மக்களுடன் பகிர்ந்துகொள்ளவும், நமது பொதுவான இல்லமான பூமியைப் பாதுகாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்பதை தன் இறுதி விருப்பமாகக் கூறி, அனைவருக்கும் தன் ஆசீரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்

Comments are closed.