மட்டக்களப்பு மறைமாவட்ட தொண்டன் இதழின் பொன் விழா

மட்டக்களப்பு மறைமாவட்ட இதழாக வெளிவந்துகொண்டிருக்கும் சமய-சமூக இலக்கிய வெளியீடான தொண்டன் இதழானது தனது 50வது வருட பொன்விழா பூர்த்தியை நிறைவு செய்தமையிட்டு, அதன் சிறப்பு நிகழ்வானது கார்த்திகைத் திங்கள் 12ம் நாள் சமூகத் தொடர்பு நிலைய இயக்குனர் அருட்தந்தை.ஆர்.பயஸ் பிரசன்னா அடிகளார் தலைமையில் மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி. ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களும், சிறப்பு அதிதியாக திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி. நோயல் இம்மனுவல் ஆண்டகை அவர்களுக்கும கலந்துகொண்டனர்.

பொன் விழா நினைவாக பொன் விழா சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. முதல் பிரதியினை இதழின் ஆசிரியரும், சமூகத்தொடர்பு நிலைய இயக்குனருமான அருட்தந்தை.ஆர்.பயஸ் பிரசன்னா அவர்கள் ஆயர் அவர்களுக்கு வழங்கினார். அடுத்து ஆயர் அவர்களினால் நிகழ்வில் கலந்துகொண்ட திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி. நோயல் இம்மனுவல் ஆண்டகை அவர்களுக்கும், கௌரவ அதிதிகளாகக் கலந்துகொண்டவர்களுக்கும் சிறப்புப்பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் 32 ஆண்டுகள் தொண்டன் இதழின் இணை ஆசிரியாகப் பணியாற்றிய திரு.எஸ்.எஸ்.யேசுதாஸ் (மலர்வேந்தன்) அவர்களது சிறப்பான பணிக்காக ஆயர் அவர்களால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
பொன் விழா நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி. ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களின் பத்தாவது நூலான ‘விடுதலைப்பயணம் – ஒரு திறனாய்வு” என்னும் நூலானதும் வெளியிடப்பட்டது. இந்நூலின் முதற்பிரதியானது ஆயர் அவர்களால் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அவர்களுக்கும், சிறப்புப்பிரதிகள் வருகைதந்த கௌரவ அதிதிகளுக்கும், நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டன

Comments are closed.