நவம்பர் 19 : நற்செய்தி வாசகம்

இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 1-10

அக்காலத்தில் இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார்.

அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர். இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார்.

அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக்கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்.

இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், “சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார்.

அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்.

இதைக் கண்ட யாவரும், “பாவியிடம் தங்கப் போயிருக்கிறாரே இவர்” என்று முணுமுணுத்தனர்.

சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று அவரிடம் கூறினார்.

இயேசு அவரை நோக்கி, “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்” என்று சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————–
செவ்வாய்க்கிழமை

லூக்கா 19: 1-10

பணமிருந்தும் நிம்மதியில்லாத மனிதர்கள்!

நிகழ்வு

முன்பொரு காலத்தில் பெர்சியாவில், அலி ஹஃபெத் (Ali Hafed) என்றொரு செல்வந்தர் இருந்தார். அவர்க்கு நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பழத்தோட்டமும் வயல்களும் இருந்தன. அவற்றைக்கொண்டு அவர் மனநிறைவாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவருடைய வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வந்தார். அவர் அலி ஹஃபெத்திடம், “உங்களிடம் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பழத்தோட்டமும் வயல்களும் இருப்பதை விடவும், வைரம் இருந்தால் நீங்கள்தான் இந்த உலகத்தில் பெரிய பணக்காரர்” என்றார்.

வந்திருந்த விருந்தினர் சொன்ன வார்த்தைகள் அலி ஹஃபெத்தின் உள்ளத்தில் ஒருவிதமான கலவரத்தை உண்டுபண்ணின. அவர் அங்கிருந்து போனபின்பு, அலி ஹஃபெத் அதைக் குறித்து சிந்திக்கத் தொடங்கினார்: ‘நம்மிடம் வைரம் இருந்தால், இந்த உலகத்தில் நாம் பெரிய பணக்காரராகிவிடுவோமோ…? அப்படியானால் அதற்கு என்ன செய்வது…?’ இவ்வாறு அவர் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, ‘நம்மிடம் இருக்கின்ற நிலத்தை விற்றுவிட்டு, உலகம் முழுவதும் தேடியலைந்தால், எங்காவது வைரம் கிடைக்கும்தானே. அதைக்கொண்டு பெரிய பணக்காரவிடலாம்’ என்ற எண்ணம் அவர்க்குள் உதித்தது.

மறுநாள் அவர் தன்னுடைய நிலத்தைத் தனக்குத் தெரிந்த ஒருவர்க்கு விற்றுவிட்டு, வைரத்தைத் தேடி, பயணத்தைத் தொடங்கினார். பல நாள்களாகக் காடு, மலை, ஆறு, என்று பல இடங்களில் வைரத்தைத் தேடிப்பார்த்தார். எங்கும் அவரால் வைரத்தைக் கண்டுபிடிக்க முடியாது. இதனால் மனம் சோர்ந்து. உடல் மெலிந்து போனார். ஒரு கட்டத்தில் அவர், ‘இனிமேலும் நம்மால் வைரத்தைக் கண்டுபிடிக்க முடியாது’ என்று விரக்தியின் உச்சக்கட்டத்திற்குச் சென்று, தற்கொலை செய்துகொண்டார்.

இன்னொரு பக்கம் அலி ஹஃபெத்தின் நிலத்தை விலைக்கு வாங்கிய மனிதர் ஒரு நண்பகல் வேளையில், தன்னுடைய ஒட்டகத்திற்குத் தண்ணீர் காட்டுவதற்குப் பழத்தோட்டத்தின் நடுவில் ஓடிக்கொண்டிருந்த சிற்றாறுக்கு கூட்டிக்கொண்டு போனார். ஒட்டகம் சிற்றாறின் அருகே சென்றதும், தாகத்தில் தண்ணீரை வேகவேகமாகப் குடிக்கத் தொடங்கியது. அப்பொழுது அந்தச் சிற்றாற்றுக்குள் இருந்து, ஏதொவொன்று மின்னுவதைப் பார்த்த மனிதர், அது என்ன என்று குனிந்து, எடுத்துப் பார்த்தார். அது சாதாரண கல் இல்லை; வைரக்கல் என்று கண்டுபிடிக்க அவர்க்கு வெகுநேரம் பிடிக்கவில்லை. சற்றுத் தொலைவில் அவர் பார்த்தார். அங்கேயும் அதுபோன்ற வைரக்கற்கள் கிடப்பதை கண்டு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். இதற்குப் பின்பு அவர் அந்த வைரக்கற்களையெல்லாம் விற்று உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர் ஆனார்.

மிகப்பெரிய எழுத்தாளரும் மறைப்பணியாளருமான ரசல் கோன்வெல் சொல்லக்கூடிய இந்தக் கதையில் வருகின்ற அலி ஹஃபெத்தைப் போன்றுதான் இன்றைக்குப் பலர், தங்களிடம் ஏராளமான பணமும் சொத்துகளும் இருந்தபோதும், அவற்றைக்கொண்டு வாழ்க்கையை நிம்மதியாக வாழத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். இன்றைய நற்செய்தியிலும் ஏராளமான பணமிருந்தும் மனநிம்மதியின்றி அலைந்த ஒருவரைக் குறித்து வாசிக்கின்றோம். அவர் யார்? அவர் தன்னுடைய வாழ்வில் மனநிம்மதியை, மகிழ்ச்சியை, மீட்பினை எப்படிப் பெற்றுக்கொண்டார்? என்பவற்றைக் குறித்து சிந்துத்துப் பார்ப்போம்.

பணமிருந்தும் நிம்மதியின்றி அலைந்த சக்கேயு

நற்செய்தியில் சக்கேயுவைக் குறித்து வாசிக்கின்றோம். சக்கேயு சாதாரண மனிதர் இல்லை; வரிதண்டுபவர்கட்குத் தலைவர். அப்படியானால் உரோமை அரசாங்கம் மக்கள்மீது விதித்த வரியை விட, அதிகமான வரியை விதித்து, அதன்மூலம் பணத்தை ஏராளமாகக் குவித்திருக்கவேண்டும் என்று சொல்லவேண்டும். இப்படி மக்களை வஞ்சித்தும் ஏமாற்றியும் சம்பாதித்த பணத்தைக்கொண்டு சக்கேயு மகிழ்ச்சியாக இருந்தாரா? என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இயேசு கூறுவார்: “மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் மட்டும் ஒருவர்க்கு வாழ்வு வந்தது.” (லூக் 12:15). சக்கேயுவிடம் மிகுதியாகப் பணம் இருந்தது; மகிழ்ச்சிதான் இல்லை. உண்மையான மகிழ்ச்சி கிடைக்க அவர் என்ன செய்தார் என்று பார்ப்போம்.

தன்னிடமிருந்ததைப் பிறர்க்குக் கொடுக்க முன்வந்ததால் மகிழ்ச்சியடைந்த சக்கேயு

மனநிம்மதியை, மகிழ்ச்சியைத் தேடியலைந்த சக்கேயு, இயேசுவைத் தேடிச்சென்றால் அவை கிடைக்கும் என்று உறுதியாக நம்பியிருக்கக்கூடும். அதனால்தான் அவர் இயேசுவைத் தேடிச் சென்றார். இதற்கிடையில் சக்கேயு தன்னைத் தேடி வந்திருப்பதை அறிந்த இயேசு அவரைக் கீழே வா என்றும் உம்முடைய வீட்டில் தங்கப் போகிறேன் என்றும் சொல்கிறார். மறுநொடி சக்கேயு இயேசுவிடம், “என் உடைமைகளில் பாதியை ஏழைகட்கும் எவர்மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி, எதையாவது கவர்ந்திருந்தால் அதை நான்கு மடங்காகத் திரும்பிக் கொடுத்துவிடுகிறேன்” என்கிறார். அப்பொழுதுதான் இயேசு அவரிடம், “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று” என்கிறார்.

ஆம், சக்கேயு பணத்தைத் தான் மட்டுமே வைத்து அனுபவிக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த வரைக்கும் அவரிடம் மனநிம்மதியோ, மகிழ்ச்சியோ இல்லை. எப்பொழுது அவர் தன்னிடம் இருந்து பணத்தை ஏழைகட்கும் பிறர்க்கும் கொடுக்க முன்வந்தாரோ, அப்பொழுதே அவர்க்கு மனநிம்மதியும் மகிழ்ச்சியும் ஏன், மீட்பும் கிடைக்கின்றன. ஆகையால் நம்முடைய வாழ்க்கையில் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் பிறக்கவேண்டும் என்றால், நம்மிடம் இருப்பதைப் பிறர்க்குக் கொடுக்க முன்வருவது இன்றியமையாததாக இருக்கின்றது.

சிந்தனை

‘நல்லாரின் வீட்டில் நிறைசெல்வம் நிலைத்திருக்கும்; பொல்லாரின் வருவாயால் விளைவது தொல்லையே’ (நீமொ 15:6) என்கிறது நீதிமொழிகள் நூல். நம்மிடம் இருப்பதைப் பிறர்க்குப் பகிர்ந்துகொடுக்கும் நல்லாராக விளங்குவோம். அதன்வழியாக இறைவன் தரும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் இறையருளையும் நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.