பிரான்ஸ் நாட்டின் தலத்திருஅவை, 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி முதல், 28ம் தேதி முடிய உரோம் நகரில் ஏற்பாடு செய்திருக்கும் பீடப்பணியாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தரவிருக்கும் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியரை வரவேற்று, திருத்தந்தை காணொளிச் செய்தி ஒன்றை வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் திருப்பலியின் இறுதியில், ‘செல்லுங்கள்’ என்ற தொனியில் வழங்கப்படும் இறுதி வாழ்த்துரை, நாம் அனைவரும் ஆலயத்திலிருந்து வெளியே வந்து, நம் சகோதரர், சகோதரிகளில் இறைவனைத் தொடர்ந்து காணவும், அவருக்குப் பணியாற்றவும் விடுக்கப்படும் அழைப்பு என்று திருத்தந்தை இக்காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.
துணிவு மிகுந்த சாட்சிகளாக வாழ…
மறைப்பணியாற்ற இயேசுவால் அனுப்பப்பட்ட புனித பேதுருவும், புனித பவுலும், தங்கள் உயிரை வழங்கிய இந்நகருக்கு நீங்கள் மேற்கொள்ளும் திருப்பயணம், இவ்விரு திருத்தூதர்களைப் போல் நீங்களும் துணிவு மிகுந்த சாட்சிகளாக வாழ உங்களுக்கு உதவும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
உரோம் நகரில் நீங்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தில், உங்களைப்போலவே பீடப்பணியாளர்களாக பணியாற்றும் பலரை சந்திக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை சிறப்பாகச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இத்திருப்பயணத்தில் கலந்துகொள்ளும் அனைவரையும் தானும் சந்திக்கவிருப்பது பெரும் மகிழ்வைத் தருகிறது என்று கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உங்களைச் சந்திக்க ஆவலாகக் காத்திருக்கிறேன் என்று, இக்காணொளிச் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதுவரை, நாம் ஒருவர் ஒருவருக்காகச் செபிப்போம் என்று கூறி இச்செய்தியை நிறைவு செய்துள்ளார்
Comments are closed.