நற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 14)

பொதுக்காலம் முப்பத்து இரண்டாம் வாரம்
வியாழக்கிழமை
லூக்கா 17: 20-25

இறையாட்சி – அது இயேசுவின் ஆட்சி

நிகழ்வு

முன்பொரு காலத்தில் தமஸ்கு நகரில் ஒரு பெரிய கோயில் இருந்தது. கிறிஸ்தவம் வேகமாகப் பரவிவந்தபோது, அந்தக் கோயிலுக்கு வந்துபோன அனைவரும் கிறிஸ்தவர்களானார்கள். இதனால் கிறிஸ்தவ வழிபாடுகள் அங்கு நடைபெற்றத் தொடங்கின. இதற்கு நடுவில் அந்தக் கோயிலுக்கு அடிக்கடி வந்த சிற்பி ஒருவர் கோயிலின் முகப்பில் ‘கிறிஸ்துவின் ஆட்சி என்றுமுள்ள ஆட்சி; அது தலைமுறை தலைமுறையாக நீடித்திருக்கும் ஆட்சி” என்று எழுதிவைத்தார்.

ஆண்டுகள் மெல்ல உருண்டோடத் தொடங்கின. பல ஆண்டுகட்குப் பிறகு அந்தக் கோயில் இருந்த பகுதியில் இஸ்லாமியர்களின் படையெடுப்பு நடந்தது. அதில் அவர்கள் அந்தக் கோயிலைக் கைப்பற்றினார்கள். இதற்குப் பின்பு அவர்களுடைய வழிபாடு அந்தக் கோயிலில் நடைபெற்றத் தொடங்கியது. கால ஓட்டத்தில் அந்தக் கோயிலை இடி, மின்னல், மழை என்று ஏராளமானவை தாக்கின. கோயிலில் இருந்த மற்ற பகுதிகள் சேதமுற்றாலும், “கிறிஸ்துவின் ஆட்சி என்றுமுள்ள ஆட்சி; அது தலைமுறை தலைமுறையாக நீடித்திருக்கும் ஆட்சி” என்ற வார்த்தைகள் மட்டும் அழியவே இல்லை.

ஆம். கிறிஸ்துவின் ஆட்சி அல்லது இறையாட்சி என்றுமுள்ள ஆட்சி; தலைமுறை தலைமுறையாக நீடித்திருக்கும் ஆட்சி என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த வரலாற்று உண்மை நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. நற்செய்தியில் இறையாட்சியைக் குறித்த கேள்வி வருகின்றது. இயேசு அதற்கு எத்தகைய விளக்கத்தினை அளிக்கின்றார்? இந்த இறையாட்சியில் உட்படுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? என்பவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இறையாட்சி எப்போது வரும்?

நற்செய்தியில் பரிசேயர் இயேசுவிடம், இறையாட்சி எப்போது வரும் என்றொரு கேள்வியைக் கேட்கின்றனர். இயேசு அவர்களிடம் என்ன மறுமொழி கூறினார் என்று சிந்தித்துப் பார்க்கும் முன்னம், யூதர்கள் இறையாட்சியை எப்படிப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.

பல ஆண்டுகளாக யூதர்கள், தங்களுடைய குலத்திலிருந்து மெசியா தோன்றுவார்; அவர் எல்லா நாடுகளையும் வீழ்த்தி ஆட்சி செலுத்துவார் என்று நினைத்தார்கள். திருமுழுக்கு யோவான் வந்தபோது, அவர் வழியாக இறையாட்சி வருமா? என்று எதிர்பார்த்தார்கள். அதன்பின் இயேசு அப்பங்களைப் பலுகச் செய்தபோது (யோவா 6:15) அவர் வழியாக இறையாட்சி வருமா? என்று எதிர்பார்த்தார்கள். இவ்வாறு அவர்கள் இறையாட்சி இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.

இங்கு யூதர்கள் இறையாட்சி என்று எதைப் புரிந்துவைத்திருந்தார்கள், அது இயேசு சொல்கின்ற இறையாட்சியோடு எப்படி வேறுபட்டு இருக்கின்றது என்பதை நுட்பமாகக் கவனிக்கவேண்டும். யூதர்கள் எதிர்பார்த்த இறையாட்சியோ அரசியல் சம்பந்தப்பட்டது; இயேசுவின் இறையாட்சியோ ஆன்மிகம் சம்பந்தப்பட்டது. யூதர்கள் எதிர்பார்த்த இறையாட்சியோ யூதர்களை மட்டும் உள்ளடக்கியது; இயேசுவின் இறையாட்சியோ எல்லா மக்களையும் உள்ளடக்கியது. இப்படி அரசியல் சம்பந்தப்பட்ட, யூதர்களை மட்டுமே உள்ளடக்கிய இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் கேட்கிறபோது இயேசு அதற்குத் தெளிவான விளக்கத்தைத் தருகின்றார். இயேசு அவர்கட்கு அளித்த விளக்கமென்ன என்பதை இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

இறையாட்சி நம் நடுவே செயல்படுகின்றது

பரிசேயர் (குறுகிய எண்ணத்தோடு) இறையாட்சி எப்போது வரும் என்று கேட்டதற்கு, இயேசு அவர்களிடம், “…இறையாட்சி உங்கள் நடுவே செயல்படுகின்றது” என்று குறிப்பிடுகின்றார். இயேசு சொல்வதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், இறையாட்சி எப்போது வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மூடர்களே! அது ஏற்கனவே வந்துவிட்டது என்று சொல்வதாகப் புரிந்துகொள்ளலாம்.

ஆம், இயேசு செய்த அருமடையாளங்கள் வழியாக, போதனையின் வழியாக இறையாட்சி ஏற்கனவே வந்துவிட்டது. அதைப் புரிந்துகொள்ளாமல், பரிசேயர் இயேசுவிடம் இறையாட்சி எப்போது வரும் என்று கேட்பது அறிவில்லாதோருடைய செயலாக இருக்கின்றது. இறைவாக்கினர் எசாயா, இறையாட்சி வருகின்றபோது பார்வையற்றோர் பார்வைபெறுவர்; காதுகேளாதோர் கேட்போர்; கால் ஊனமுற்றோர் எழுந்து நடப்பர் என்று இறைவாக்கு உரைத்திருந்தார். அவர் உரைத்த இறைவாக்கு இயேசுவில் நிறைவேறின. அப்படியிருந்தும் பரிசேயர், இறையாட்சி எப்போது வரும் என்று கேட்பது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருகின்றது.

நாமும்கூட இறைவன் நம் நடுவில் செயல்படுகின்றார்; நாம் அனைவரும் அவருடைய ஆட்சியின் விழுமியங்கட்கு ஏற்ப நடக்கவேண்டும் என்பதை உணராதவர்களாகவே இருக்கின்றோம். ஆகவே, நாம் இயேசுவின் ஆட்சி நம் நடுவில் செயல்படுகின்றது என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், அவருடைய ஆட்சியின் மதிப்பிடுகட்கு ஏற்ப நடக்க முற்படுவோம்.

சிந்தனை

‘இறையாட்சி தூய ஆவியார் அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை’ (உரோ 14:17) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் தூய ஆவியார் அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகிய விழுமியங்களின் படி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.