இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.

1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்

“ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால், சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு செய்துகொள்.” என கூறப்பட்டுள்ளதை நாம் வாசித்தோம்.

இறைப்பணி ஆற்றும் அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்கள் தங்கள் பணி வாழ்வில் சந்திக்கும் சவால்களை தூய ஆவியின் துணை கொண்டு எதிர் கொண்டிட இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்

“இழிவு வரும்போது பொறுமையாய் இரு. நெருப்பில் பொன் புடமிடப்படுகிறது; ஏற்புடைய மனிதர் மானக்கேடு எனும் உலையில் சோதித்துப் பார்க்கப்படுகின்றனர்.” என கூறப்பட்டுள்ளதை நாம் வாசித்தோம்.

நமது வாழ்வில் இறைவன் அனுமதிக்கும் சோதனைகள் நம்மை புடமிடுவதற்காகத்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தியில்

“ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்”. என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

“நான் ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில் பணிவான வேலைக்காரன்.” என்று கூறிய மறைந்த திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பரிடமிருந்து நாம் தாழ்ச்சியைக் கற்றுக் கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நமது திருத்தந்தை பிரான்சிஸ் பரிபூரண நலம் பெற வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,

அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்கவும், காணமல் போன பொருள்கள் திரும்பக் கிடைக்கவும் இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.