உண்மையின் ஒளியாம் இயேசுவுடன் நம்மை இணைக்கும் இறையியல்
கண்ணுக்குத் தெரியாத ஒளி போன்று இறையியலும் மறைவான மற்றும் தாழ்ச்சியான பணியினைச் செய்கின்றது என்றும், இதன்வழியாக உண்மையான ஒளியாகவும் நற்செய்தியாகவும் இவ்வுலகிற்கு வந்த இயேசுவுடன் நம்மை ஒன்றிணைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 9 திங்கள்கிழமை வத்திக்கானில் கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பன்னாட்டு இறையியல் காங்கிரசின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 470 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளின் அருளைக் கண்டறிதல், கிறிஸ்துவுடனான உண்மையான நட்புறவில் நிலைத்திருத்தல், உண்மையின் ஒளியாக இவ்வுலகிற்கு வந்த கிறிஸ்துவிற்கானப் பாதையைக் கண்டறிதல் போன்ற வழிகளில் நம்மை முன்னோக்கிச்செல்ல இறையியல் அழைப்புவிடுக்கின்றது என்றும், கிறிஸ்துவுடனான நட்புறவு, சகோதர சகோதரிகள் மற்றும் உலகத்தாருடன் கொண்டுள்ள அன்பு போன்றவற்றில் இருந்து இறையியல் பிறக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
இறையியலாளர்கள் ஒன்றிணைந்து பயணிக்க அழைக்கப்படுகின்றார்கள் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், எளிமைப்படுத்துதலில் இருந்து குணமடைவதற்காக, சிந்தனையை மறுபரீசீலனை செய்ய இறையியல் அழைப்புவிடுக்கின்றது என்றும், நம் உணர்வுகள், விருப்பம் மற்றும் முடிவுகளை வடிவமைத்து, ஒரு பரந்த இதயம், கற்பனை மற்றும் சிந்தனைக்கு வழிவகுக்கின்றது என்றும் கூறினார்.
Comments are closed.