ஜூலை 4 : நற்செய்தி வாசகம்

மக்கள் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

மக்கள் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-8

அக்காலத்தில்

இயேசு படகேறி மறு கரைக்குச் சென்று தம் சொந்த நகரை அடைந்தார். அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, துணிவோடிரு, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

அப்பொழுது மறைநூல் அறிஞர்கள் சிலர், “இவன் கடவுளைப் பழிக்கிறான்” என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர். அவர்களுடைய சிந்தனைகளை இயேசு அறிந்து அவர்களை நோக்கி, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன சிந்திப்பதேன்? ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்பதா, ‘எழுந்து நட’ என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ” என்றார். அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார்.

இதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சமுற்றனர். இத்தகைய அதிகாரத்தை மனிதருக்கு அளித்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

—————————————————-

“நம்பிக்கையும் நலமான வாழ்வும்”

பொதுக் காலத்தின் பதிமூன்றாம் வாரம்

வியாழக்கிழமை

I ஆமோஸ் 7: 10-17

II மத்தேயு 9: 1-8

“நம்பிக்கையும் நலமான வாழ்வும்”

ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தவர்:

சீனாவிற்கு நற்செய்தி அறிவிப்பதற்காகக் கிளம்பிக்கொண்டிருந்த இராபர்ட் மோரிசனிடம் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர், “இராபர்ட்! உன்னால் சீனாவில் கடவுளின் வார்த்தையை அறிவித்து, அங்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறாயா?” என்றார். “என்னுடைய சொந்த ஆற்றலை நம்பிக் கடவுளின் வார்த்தையை அங்கு அறிவித்தால், என்னால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது” என்று பேசத் தொடங்கிய இராபர்ட் மோரிசன், “அதே வேளையில், நான் கடவுளை நம்பி, அவரது வார்த்தையை மக்களுக்கு அறிவித்தால், என்னால் சீனாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்” என்று உறுதியாய்ச் சொன்னார்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த இராபர்ட் மோரிசன் தன் நண்பரிடம் சொன்னதுபோன்றே, ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவரது வார்த்தையைச் சீனாவில் உள்ள மக்களுக்கு அறிவித்தார். அதனால் அவர் வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்கள்.

ஆம், மிகப்பெரிய மறைப்பணியாளரான இராபர்ட் மோரிசன் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவரது வார்த்தையை மக்களுக்கு அறிவித்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்கள். இன்றைய இறைவார்த்தை ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு வாழும்போது ஒருவரது வாழ்வு எப்படி வளம் பெறுகின்றது என்பதை எடுத்துக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

Comments are closed.