இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

ஒளி நிறை மறையுண்மைகள்

ஒளி நிறை மறையுண்மைகள்.

1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில் “நீங்கள் அரச குருக்கள், தூய மக்கள், உங்கள் அழைப்புக்கேற்ப ஒழுகுங்கள்.” என புனித பேதுரு கூறுகிறார்.

தூயவரான நம் ஆண்டவரின் பிள்ளைகளான நாம் தூய வாழ்வு வாழ வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்,

“உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்.” என நமதாண்டவர் இயேசு கூறியதை நாம் வாசிக்கின்றோம்.

நாம் ஒளிமிக்க ஆண்டவரின் பாதையில் எந்நாளும் நடந்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், “நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று இயேசு கேட்டார். அதற்கு அவர், “ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றார்.” என வாசித்தோம்.

நமது அகப்பார்வை மீண்டும் நமக்குக் கிடைத்திட வேண்டி

இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,

மறைசாட்சியாக மரித்த கன்னியரான இன்றைய புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் நம்பிக்கையினால் நிந்திக்கப்படுவோரின் பாதுகாவலராவார்.

சித்திரவதைக்கு உள்ளாகும் எண்ணற்ற அப்பாவிகள் துன்பங்களிலிருந்து விடுதலை பெற வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,

குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.