இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், “உண்மைக்குக் கீழ்ப்படிந்து உங்கள் ஆன்மா தூய்மை அடைந்துள்ளதால் நீங்கள் வெளிவேடமற்ற முறையில் சகோதர அன்பு காட்ட முடியும். எனவே நீங்கள், தூய உள்ளத்தோடு ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்.” என புனித பேதுரு கூறுகிறார்.

எதையும் எதிர்பார்க்காத தூய அன்பை நாம் பிறரிடம் செலுத்த வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,

262-வது திருத்தந்தையும், இன்றைய புனிதருமான புனித ஆறாம் பவுல் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பாதுகாவலராவார்.

அன்னை மரியாளின் மீது மிகுந்த பக்தி கொண்ட புனித ஆறாம் பவுல் அன்னை மரியாளைப் பற்றி பல சுற்று மடல்களை எழுதியுள்ளார்.

இவ்வுலகில் அன்னை மரியாளின் பக்தி மேலும் பரவ வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,

பப்புவா நியூ கினியாவில் நடந்த நிலச்சரிவில் சிக்கி 2000 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,

மாதாவின் வணக்கம் மாதமாகிய இந்த மே மாதத்தில் நாம், குடும்ப செபம்/ குடும்ப செபமாலை சொல்லும் வழக்கத்தினை தொய்வில்லாமல் நமது இல்லங்களில் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

புனித சூசையப்பருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட புதன் கிழமையான இன்று திருக்குடும்பத்தில் அன்று இருந்தது போல் அன்பு, அமைதி, சமாதானம், விட்டுக் கொடுத்தல், தாழ்ச்சி ஆகியவை இன்று நம் குடும்பங்களிலும் இருக்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை இதற்காக ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.