ஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்

தம் மகன் வழியாக உலகை மீட்கவே, கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

தம் மகன் வழியாக உலகை மீட்கவே, கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-21

அக்காலத்தில்

இயேசு நிக்கதேமிடம் கூறியது: தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.

ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

—————————————————

கடவுளின் அன்பிற்குப் பதிலன்பு

பாஸ்கா காலத்தின் இரண்டாம் வாரம் புதன்கிழமை

I திருத்தூதர் பணிகள் 5: 17-28

திருப்பாடல் 34: 1-2, 3-4, 5-6, 7-8 (6a)

II யோவான் 3: 16-21

கடவுளின் அன்பிற்குப் பதிலன்பு

அறிவோம்; துணிவுடன் அறிவிப்போம்

இருளில் இருக்கும் ஒருவர் ஒளிக்கு வரவேண்டும். இங்கே இருள் என்பதை அறியாமையோடும், ஒளி என்பதைக் கடவுளோடும் நாம் ஒப்பிடலாம்.

நிக்கதேம் பரிசேயர் தலைவரில் ஒருவர். எனினும் அவர் ஆண்டவரைப் பற்றி முழுமையாய் அறிந்திருக்க வில்லை. அதனுடைய அடையாளம்தான் அவர் இரவு நேரத்தில் இயேசுவிடம் வந்தது. அறியாமை என்ற இருளில் இருந்த அவருக்கு இயேசு கிறிஸ்து ஆண்டவரின் பேரன்பைப் பற்றி எடுத்துரைத்து, அவரை ஆண்டவரைப் பற்றி ஞானத்தில் வளர்த்தெடுக்கின்றார். இதன்பிறகு அவர் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவராய் வாழ்கின்றார்.

முதல் வாசகத்தில் ஆண்டவரின் பேரன்பை ஆழமாய் உணர்ந்து கொண்ட திருத்தூதர்கள் தலைமைச் சங்கத்தாரின் எதிர்ப்பையும் மீறி வாழ்வைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு மிகத் துணிச்சலாக அறிவிக்கின்றார்கள். ஒரு காலத்தில் யூதர்களுக்கு அஞ்சி, அறைக்குள் தங்களை அடைத்துக் கொண்ட திருத்தூதர்கள் உயிர்த்த ஆண்டவரைக் கண்டதும், துணிவோடு வாழ்வைப் பற்றிய நற்செய்தியை, இயேசுவைப் பற்றி அறிவிக்கின்றார்கள்.

இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 34, ஆண்டவர் தன்னை ஆபத்துகளிலிருந்து காத்ததற்கு நன்றியாகப் பாடப்பட்ட பாடலாகும். ஒரு பக்கம் சவுல், இன்னொரு பக்கம் எதிரிகள் இப்படிப் பல இடங்களிலிருந்து வந்த ஆபத்துகளிலிருந்து ஆண்டவர் தாவீதைக் காத்ததால், தாவீது, “ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்” என்று பாடுகின்றார்.

தாவீது, நிக்கேதம், திருத்தூதர்கள் இவர்கள் யாவரும் கடவுளின் பேரன்பை உணர்ந்தார்கள். உணர்ந்தது மட்டுமல்லமல், அதனை மற்றவருக்கு அறிவித்தார்கள். நாமும் கடவுளின் பேரன்பை உணர்ந்து, அதனை மற்றவருக்கு அறிவிப்போம்.

கடவுளின் அன்பை உணர்ந்த மருத்துவர்

ரிச்சர்ட் டியோ என்றொரு மருத்துவர் இருந்தார். பணமும் புகழும் வெற்றியுமே பெரிதென நினைத்த இவர் அவற்றிற்காகக் கடுமையாக உழைத்தார். இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், தன்னிடத்தில் வந்த நோயாளர்களை நோயாளர்களாகப் பார்க்காமல், பணம் காய்க்கும் மரங்களாகப் பார்த்து, அவர்களிடமிருந்து எவ்வளவு பணம் பறிக்க முடியுமோ, அவ்வளவு பணம் பறித்தார்.

ஒரு கட்டத்தில் இவருக்கு நுரையிரலில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குப் பிறகு இவரது வாழ்க்கை முற்றிலுமாக மாறிப் போனது. தன்னிடம் வந்த நோயாளர்களை வெறும் ஜடமாகப் பார்த்து வந்த இவர் அவர்கள் படும் துன்பங்களையும் வேதனைகளையும் அறிந்து, அவர்களுக்கு உரியமுறையில் சிகிச்சை அளித்தார். இவற்றிற்கெல்லாம் காரணமாக அமைந்தது, இவருக்குப் புற்று நோய் இருப்பது தெரிந்ததும் கடவுளின் பேரன்பை உணர்ந்து கொண்டதுதான்.

எப்போது இவர் கடவுளின் பேரன்பை உணர்ந்தாரோ, அப்போதே பணம், புகழ், வெற்றி எல்லாம் ஒன்றுமே இல்லை என்று இவர் அறிந்தார். இதற்குப் பிறகு இவர் சிறிது காலமே வாழ்ந்தாலும் தான் உணர்ந்த கடவுளின் பேரன்பை தன்னுடைய செயல்கள் மூலம் மற்றவருக்கு வெளிப்படுத்தினார்.

கடவுளின் பேரன்புக்கு முன்பாக இவ்வுலகில் எதுவுமே பெரிதில்லை; அந்த அன்பை முதலில் நாம் உணரவேண்டும். உணர்வது மட்டுமல்லாமல், அதனை நமுடைய வாழ்வால் மற்றவருக்கு உணர்த்த வேண்டும்.

Comments are closed.