மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வடையாதக் கடவுள்
தவக்காலமானது புதிய வாழ்வில் நடைபோடுதல் என்பதை ஒப்புரவுப் பாதையின் வழியாக நமக்கு நினைவூட்டுகின்றது என்றும், கடவுள் மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வடையாதவர், மாறாக நாம் தாம் மன்னிப்பதில் சோர்வடைகின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 8 வெள்ளிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை 4.30 மணியளவில் புனித ஐந்தாம் பயஸ் பங்கு ஆலயத்தில் 24 மணி நேர தவக்கால திருநற்கருணை ஆராதனை மற்றும் ஒப்புரவு வழிபாட்டின்போது வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வடையாத கடவுள் எல்லாவற்றையும், எல்லாரையும் மன்னிக்கின்றார் என்றும், “தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்” என்ற இறைவார்த்தைக்கேற்றவாறு பாவமன்னிப்பினால் தூய்மைபெற்று கடவுளைக் காண்பவர்களாக மாற நம்மை அழைக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.
இத்தகைய தூய்மையான நிலையினை நாம் அடைய நமது முயற்சிகள் மட்டும் போதாது ஏனெனில் நாம் பலவீனமானவர்கள், கடவுள் மட்டுமே நமது இதயத்தை அறிந்து அதனைக் குணப்படுத்த வல்லவர், நம்மை விடுவிக்க வல்லவர், என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
“நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்ற இறைவார்த்தைகள் மிகவும் அழகான செபம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், கூடியிருந்த மக்கள் அனைவரும் இதனை மீண்டும் மீண்டும் ஒருமித்து சத்தமாகவும் அதன்பின் மனதிற்குள்ளாகவும் சொல்லப் பணித்தார்.
நான் செய்த பாவம் மிகவும் கொடியது கடவுளால் என்னை மன்னிக்க முடியாது என்று யாரும் நினைக்க வேண்டாம், கடவுள் எல்லாப் பாவங்களையும் மன்னிக்க வல்லவர், அவர் மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை என்றும், மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
Comments are closed.