மார்ச் 10 : நற்செய்தி வாசகம்

தம் மகன் வழியாக உலகை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

தம் மகன் வழியாக உலகை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 14-21

அக்காலத்தில்

இயேசு நிக்கதேமுக்குக் கூறியது: “பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர்.

ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

—————————————————————————–

நம்பிக்கையும் நிலைவாழ்வும்

தவக்காலம் நான்காம் ஞாயிறு

I 2 குறிப்பேடு 36: 14-16, 19-23

II எபேசியர் 2: 4-19

III யோவான் 3: 14-21

நம்பிக்கையும் நிலைவாழ்வும்

நிகழ்வு

அமெரிக்காவைச் சார்ந்த மிகப்பெரிய எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே (1899-1961). இவர் எழுதிய கிழவனும் கடலும் (The Old Man and the Sea) என்ற நாவலுக்காக 1954 ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. இவர் பெரிய பணக்காரர், விளையாட்டிலும் வேட்டையாடுவதிலும் வீரதீரச் செயல்களைச் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர். மட்டுமல்லாமல், இவர் தான் படைத்த கதாப்பாத்திரங்களைக்கூட வீரதீரச் செயல்களை செய்பவர்களாகப் படைத்தவர். இவர் விமானத்தில் பயணம் செய்யும்பொழுது, விமானம் மோதி மூன்றுமுறை உயிர்பிழைத்தவர்.

இப்படிப் பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான இவர் கடவுள் நம்பிக்கையில்லாதவர் என்பதுதான் வியப்புக்குரிய செய்தி. 1961 ஆம் ஆண்டு இவருக்குப் புற்றுநோய் வந்தது. வீரதீரச் செயல்களில் ஈடுபடும் இவர், எப்படியும் புற்றுநோயிலிருந்து மிக எளிதாக மீண்டுவிடுவார் என்றுதான் எல்லாரும் நினைத்தார்கள்; ஆனால், இவர் யாருமே நினைத்துப் பார்த்திராதவகையில், துப்பாக்கியை எடுத்துத் தன்னையே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒருவர் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும், அவர் கடவுள்மீது நம்பிக்கையில்லாமல் இருக்கும்பொழுது, அவரது முடிவு மிகக் கொடியதாகவே இருக்கும் என்பதற்கு எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வேவின் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. தவக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை ஆண்டவர் இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வு பெறுவார் என்ற செய்தியை நமக்கு எடுத்துரைக்கின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

ஆண்டவரிடம் நம்பிக்கைகொள்ளாத இஸ்ரயேல் மக்கள்

“இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்” (மத் 24: 13). இது ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய மிக முக்கியமான வார்த்தைகள். இவ்வார்த்தைகளை இஸ்ரயேல் மக்களோடு அதிலும் குறிப்பாக இன்றைய முதல் வாசகத்தோடு இணைத்துப் பார்க்கின்றபொழுது, அவர்கள் ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையில் இறுதிவரை மனவுறுதியோடு இருக்கவும் இல்லை, மீட்புப் பெறவும் இல்லை என்பது புரிந்துவிடும்.

ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குப் பத்துக்கட்டளைகளைக் கொடுத்தார் (விப 20: 1-7). அந்தப் பத்துக் கட்டளைகளைக் கொடுப்பதற்கு முன்பாக அவர் அவர்களிடம், “நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து, என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால்….. நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள்” (விப 19: 5) என்பார்; ஆனால், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் வார்த்தைக்குச் செவிசாய்க்கவும் இல்லை, அவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கவும் இல்லை. மாறாக வேற்று தெய்வங்களை வழிபட்டு, எருசலேமிலிருந்த திருக்கோயிலை மேலும் தீட்டுப்படுத்தினார்கள். இதனால் ஆண்டவரின் சினம் அவர்கள்மேல் கனன்று எரிந்தது. அதன்பொருட்டே கி.மு. 586 ஆம் ஆண்டு ஆண்டு, ஆகஸ்ட் 14 ஆம் நாள் அவர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார்கள்.

ஒருவேளை இஸ்ரயேல் மக்கள் மட்டும் ஆண்டவர்மீது நம்பிக்கைகொண்டு, அவர் தங்களோடு செய்திருந்த உடன்படிக்கையைக் கடைப்பிடித்திருந்தால் பாபிலோனுக்கு நாடுகடத்தப்படல் என்ற ஒன்று நடந்திருக்கவே நடந்திருக்காது. அவர்கள் அவ்வாறு நடந்துகொள்ளாததாலேயே பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார்கள்.

இறந்தவர்களாயிருந்தவர்களை அன்பினால் உயிர்பெறச் செய்த கடவுள்:

“விடியாமல்தான் ஓர் இரவேது; வடியாமல்தான் வெள்ளம் கிடையாது”. இவை மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் வரிகள். இஸ்ரயேல் மக்கள் தனது வார்த்தைக்குச் செவிசாய்க்காமலும், தன்னோடு செய்துகொண்ட உடன்படிக்கையைக் கடைப்பிடிக்காமலும் இருந்ததால், அவர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டாலும், ஆண்டவர் அவர்களைக் கைநெகிழ்ந்து விடவில்லை. மாறாக, ஆண்டவர் அவர்களைப் பாரசீக மன்னர் சைரசு வழியாக மீட்டு, அவர்களது சொந்த நாட்டில் குடியமர்த்துகின்றார். இது குறித்து இன்றைய முதல் வாசகத்தின் இரண்டாவது பகுதியில் நாம் வாசிக்கின்றோம். இன்றைய இரண்டாம் வாசகத்தில், “குற்றங்களின் காரணமாக இறந்தவர்களாகயிருந்த நாம், அன்பின் மூலம் இணைந்து உயிர்பெறச் செய்தார் கடவுள்” என்கிறார் புனித பவுல்.

திருப்பாடல் ஆசிரியர் சொல்வது போல், கடவுள் நம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால் யாரும் அவர்முன் நிலைத்து நிற்க முடியாது. அவர் மன்னிப்பு அளிப்பவர் (திபா 130: 3-4) என்பதால்தான் இறந்தவர்களாக இருந்த நம்மை உயிர்த்தெழச் செய்தார். கடவுள் நம் குற்றங்களை மன்னிப்பவர் மட்டுமல்ல அல்லது அவர் நம்மீது இரக்கம் கொண்டிருப்பவர் மட்டுமல்ல. மாறாக அவர் நம்மீது பேரன்பு கொண்டிருப்பவர்.. அவர் நம்மீது பேரன்பு கொண்டிருப்பவர் என்பதன் அடையாளம்தான், அவர் தன் ஒரே மகனை இவ்வுலகிற்கு அளித்தது. இது குறித்து இன்றைய நற்செய்தியில், “தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்” என்று வாசிக்கின்றோம்.

அவ்வாறெனில் கடவுள்மீது நம்பிக்கை கொள்வோருக்கு நிலைவாழ்வும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாதவருக்கோ தண்டனைத் தீர்ப்பும் உண்டு என்று உறுதியாகச் சொல்லலாம். நாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு நிலைவாழ்வு பெறவேண்டும் எனில், அதற்கு ஒரு முக்கியமான செயலைச் செய்யவேண்டும். அது என்னவென்று சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செயல்கள் புரிவதற்கென்றே படைக்கப்பட்டிருக்கின்றோம்

தன்னால் இயன்ற மட்டும் ஏதாவதொரு நல்ல செயலை ஒவ்வொரு நாளும் செய்து வந்த ஒரு பெரியவரிடம் இளைஞன் ஒருவன், “உங்களால் மட்டும் எப்படி ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு நல்ல செயலைச் செய்ய முடிகின்றது?” என்று கேட்டதற்குப் பெரியவர், “நான் சிறுவனாக இருக்கும்போது என் தாய் என்னிடம், “என்றைக்கு நீ எந்தவொரு நன்மையையும் செய்யாமல் இருக்கின்றாயோ, அன்றைக்கு உன் இறந்த நாள்’ என்றார். அதனால்தான் நான் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நன்மையைச் செய்துகொண்டிருகின்றேன்” என்றார்.

ஆம், நன்மைகள் செய்யாத நாள், இறந்த நாளுக்குச் சமமே. குற்றங்களின் காரணமாக இறந்தவர்களாகிருந்த நம்மை, கடவுள் தம் பேரன்பினால் உயிர்பெறச் செய்தார் எனில், நாம் ஒவ்வொருவரும் அவர்மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்து வாழவேண்டும். இதற்காகவே நாம் கிறிஸ்து வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கின்றோம் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார். இன்றைக்குப் பலர் தாங்கள் நற்செயல் புரிவதற்கென்றே படைக்கப்பட்டிருக்கின்றோம் என்ற உண்மையை உணராமல், தீச்செயல் புரிந்துகொண்டிருக்கின்றார்கள். இது வேதனையிலும் வேதனையான செயல். இறைவன்மீது நாம் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம் எனில், அந்த நம்பிக்கை நற்செயல் புரிவதில் வெளிப்பட வேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை; அதுவே நமக்கு நிலைவாழ்வினை அளிக்கும். நாம் நற்செயல் புரிகின்றோமா? சிந்திப்போம்.

Comments are closed.