கடவுள் தம் மக்களை வடிவமைக்கிறார், நம் அடிமைத்தனத்தை விட்டுவிட்டு, மரணத்திலிருந்து வாழ்வுக்குக் கடந்து செல்லும் பாஸ்காவை அனுபவிக்க அவர் நமக்கு உதவுகிறார் : திருத்தந்தை

நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்” (காண்க விப 20:2) என்ற கடவுளின் வார்த்தைகளை மனதில் கொண்டு, இத்தவக்காலத்தை அடிமை வாழ்விலிருந்து சுதந்திர வாழ்விற்கு அழைக்கும் பெரியதொரு காலமாக வரவேற்போம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 1, இவ்வியாழனன்று, தான் வழங்கியுள்ள இவ்வாண்டிற்கான தவக்காலச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவக்காலம் என்பது மனமாற்றத்தின் காலம் என்றும் அருளின் காலம் என்றும் உரைத்துள்ளார்.

சுதந்திர வாழ்விற்கான அழைப்பு என்பது மிகவும் தேவையான ஒன்று, அதற்கு உடனடியாக நம்மிடம் பதில் இல்லை என்றாலும், அது நமது பயணத்தின் ஒரு பகுதியாக முதிர்ச்சியடைய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை,  பாலைவனத்தில் இருந்த இஸ்ரயேல் மக்கள் அடிக்கடி எகிப்தை நினைத்து ஏங்கியவர்களாக,  கடவுளுக்கும் மோசேவுக்கும் எதிராக முணுமுணுத்து அடிமைநிலையிலேயே தங்கள் வாழ்வைத் தொடர விரும்பியதுபோல, இன்றும், கடவுளுடைய மக்கள் ஒரு அடக்குமுறை அடிமைத்தனத்தைப் பற்றிக்கொள்ள முடியும், ஆனால் அடிமை வாழ்வுக்கு அழைக்கும் இந்நிலையை நாம் விட்டுவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தவக்காலம் என்பது அருளின் காலமாகும், அதில் பாலைவன அனுபவம் மீண்டும் ஒருமுறை வரும், ஆனால் இறைவாக்கினர் ஓசேயாவின் வார்த்தைகளில் கூறவேண்டுமாயின், அது கடவுளை முழுமையாக அன்புகூரும் இடம்  (காண்க ஒசே 2:16-17) என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

கடவுள் தம் மக்களை வடிவமைக்கிறார், நம் அடிமைத்தனத்தை விட்டுவிட்டு, மரணத்திலிருந்து வாழ்வுக்குக் கடந்து செல்லும் பாஸ்காவை அனுபவிக்க அவர் நமக்கு உதவுகிறார் என்றும், ஒரு மணமகனைப் போல, இறைவன் நம்மை மீண்டும் ஒருமுறை தன்னிடம் கவர்ந்திழுத்து, நம் இதயங்களோடு அன்பாகப் பேசுகிறார் என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை.

அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரமான வாழ்வுக்குக் கடந்து செல்வதென்பது ஒரு பலனாகாதப் (abstract) பயணம் அல்ல என்றும், நமது தவக்கால கொண்டாட்டம் உறுதியானதாக இருக்க வேண்டுமெனில், உண்மைக்கு நம் கண்களைத் திறக்க நாம் ஆசைப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆண்டவராகிய கடவுள் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் மோசேவுக்குத் தோன்றியபோது (காண்க விப 3:7-8), “எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்” என்று கூறி அவர்களை அடிமைத்தளையிலிருந்து விடுதலை வாழ்வுக்கு கொண்டு செல்ல அவருக்கு அழைப்புவிடுகிறார் என்று விளக்கிய திருத்தந்தை, அவ்வாறே, இன்றும், ஒடுக்கப்பட்ட எத்தனையோ சகோதரர் சகோதரிகளின் அழுகுரல்கள் விண்ணைநோக்கி எழுகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.