சனவரி 1 : நற்செய்தி வாசகம்

மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள். எட்டாம் நாள் அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள். எட்டாம் நாள் அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 16-21

அக்காலத்தில்

இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.

குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

—————————————————————————–

சிந்தித்த மரியா!

கடவுளின் தாய் புனித கன்னி மரியா

I எண்ணிக்கை 6: 22-27

II கலாத்தியர் 4: 4-7

III லூக்கா 2: 16-21

சிந்தித்த மரியா!

அன்னையின் அன்பிற்கு நிகர் இல்லை:

தன்னுடைய தாயை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு ஆரோக்கியம் அப்போதான் வீட்டிற்குள் நுழைந்திருந்தான். அவனுடைய அலைபேசிக்குப் புதிய எண்ணிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. அதை எடுத்து, அவன் தன் காதில் வைத்துப் பேசியபோது, மறுமுனையிலிருந்து அவனுடைய அம்மாவின் குரல் கேட்டதும், அவன் திடுக்கிட்டான்.

“எதற்காக என்னை அழைத்தீர்கள்?” என்று ஆரோக்கியம் கடுமையாக குரலில் பேசியபோது, அவனது தாய், “தம்பி! நீ என்னைக் கொண்டுவந்து விட்டிருக்கின்ற இந்த முதியோர் இல்லத்தில் மின்விசிறி கிடையாது. அதனால் ஒரே புழுக்கமாக இருக்கின்றது. குளிர் சாதனப் பெட்டியும் இல்லை என்பதால், உணவுப் பொருள்கள் சீக்கிரத்தில் கெட்டுவிடுகின்றன. ஆகவே, மின்விசிறியும் குளிர்சாதனப் பெட்டியும் வாங்கி இங்கு அனுப்பிவிட முடியுமா?” என்று கெஞ்சினார்.

“நீ இங்கிருக்கும்போதும் உன்னுடைய அறையில் மின்விசிறி கிடையாது; குளிர்சாதனப் பெட்டியும் கிடையாது. பிறகு எதற்கு அங்கே போன கொஞ்ச நேரத்தில் மின்விசிறி வேண்டும்; குளிர்சாதானப் பெட்டி வேண்டும் என்று கேட்கிறாய்?” என்று ஆரோக்கியம் தன் குரலை உயர்த்திப் பேசினான். அதற்கு அவனுடைய தாய், “மகனே! இன்னும் சில ஆண்டுகள் கழித்து, உன் பிள்ளைகள் உன்னை இங்கு அனுப்பி வைப்பார்கள்! அப்பொழுது, வசதியாய் வாழ்ந்த நீ மின்விசிறியும் குளிர்சாதனப் பெட்டியும் இல்லாமல், இங்கு மிகுந்த துன்பப்படுவாய் அல்லவா! அதனால்தான் கேட்டேன்” என்றான். இதைக் கேட்டு ஆரோக்கியம் அதிர்ந்துபோனான். உடனே அவன் தன் தாய் இருந்த முதியோர் இல்லத்திற்கு விரைந்து சென்று, அவரைத் தன் இல்லத்திற்கு கூட்டிக்கொண்டு வந்து, அன்போடு பார்த்துக்கொண்டான்.

பிள்ளைகள் தன்னை உதாசீனப்படுத்தினாலும், தாயின் அன்பு மாறாவே மாறாது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டுதான் இந்த நிகழ்வு. ஆம், இன்று நாம் நம்மீது மாறாத அன்பு கொண்டிருக்கும் கடவுளின் தாய் புனித கன்னி மரியாவின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்திப்போம்.

கடவுளின் திருவுளத்தைப் பற்றியே சிந்தித்தவர்:

நற்பேறு பெற்றவர் யார்? என்பதற்குத் திருப்பாடல் ஆசிரியர், “ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்” (திபா 1:1-2) என்று விளக்கம் தருவார். மரியா, முதன்மை வானதூதர் கபிரியேலால், “அருள்மிகப் பெற்றவரே” (லூக் 1:28) என வாழ்த்தப்பெற்றவர். அதைவிடவும் அவர் நிகழ்ந்தவற்றை எல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்தவர். அதனால் அவர் பேறுபெற்றவர் ஆகின்றார். இதை, “இதுமுதல் எல்லாத் தலைமுறையும் என்னைப் பேறுபெற்றவர் என்பவர்” (லூக் 1:48) என்ற அவரது வார்த்தைகளிலிருந்து நாம் அறிந்துகொள்கின்றோம்.

“நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே மாறுகின்றாய்” என்றொரு பிரபல சொற்றொடர் உண்டு. இதன்படி பார்த்தால், மரியா கடவுளின் திருவுளத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததால், அவரது திருவுளமே தன்னுடைய திருவுளம் என்று மரியா வாழத் தொடங்கினார். இதனால் கடவுளின் திருவுளமே தன்னுடைய திருவுளம் என்று வாழ்ந்த மரியா இரண்டு விதங்களில் இயேசுவுக்குத் தயாகின்றார். ஒன்று, இயேசுவைப் பெற்றெடுத்ததால், இரண்டு, கடவுளின் திருவுளத்தின்படி வாழ்ந்ததால் (மத் 12:50). இதன்மூலம் நாம் ஒவ்வொருவரும் கடவுளின் திருவுளத்தைப் பற்றியே சிந்தித்து, அதன்படி வாழ்கின்றபோது, நாம் இயேசுவின் தாயாகவும், அவரது சகோதரர் சகோதரியாகவும் ஆகின்றோம்.

நாமெல்லாம் கடவுளின் பிள்ளைகளாகத் தம்மையே தந்தவர்

மரியா கடவுளின் திருவுளத்தைப் பற்றியே சிந்தித்து, அதை வாழ்வாக்கிய வகையில், அவர் நமக்கெல்லாம் முன் மாதிரி. அதே நேரத்தில் அவர் திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நாம் கடவுளின் பிள்ளைகள் ஆவதற்கு தம்மையே தந்தார்.

இது பற்றிப் பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூரும்போது, “காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்” என்று கூறுகின்றார். மனிதர்கள் தாங்கள் செய்த பாவத்தினால் கடவுளோடு உள்ள உறவை இழந்தார்கள். மட்டுமல்லாமல், அவர்கள் கடவுள் மகன் எனவும், மகள் எனவும் அழைக்கப்படத் தகுதியற்றுப் போனார்கள் (லூக் 15:19). இந்நிலையில் ஆண்டவர் தாமே மக்கள்மீது பேரன்பு கொண்டு, அவர்களை மீட்கத் தம் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார். அதுவும் மரியா வழியாக அனுப்பினார். அந்த வகையில் நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் ஆவதற்கு மரியா தன்னையே தந்தவர் என்று சொல்லலாம்.

Comments are closed.