டிசம்பர் 31 : நற்செய்தி வாசகம்
பாலன் வளர்ந்து ஞானம் நிறைந்தவராய் இருந்தார்.
பாலன் வளர்ந்து ஞானம் நிறைந்தவராய் இருந்தார்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-40
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். “ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை” என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,
“ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” என்றார்.
குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.
ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.
ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————————-
ஆண்டவரில் நம்பிக்கை கொண்ட குடும்பம் அசைவுறாது
திருக்குடும்பத் திருவிழா
I தொடக்க நூல் 15: 1-6; 21: 1-3
II எபிரேயர் 11: 8, 11-12, 17-19
III லூக்கா 2: 22-40
ஆண்டவரில் நம்பிக்கை கொண்ட குடும்பம் அசைவுறாது
நிகழ்வு
நமது இந்தியத் திருநாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் சிறுவனாக இருந்தபொழுது நடந்த நிகழ்வு இது. ஒருநாள் மாலைவேளையில், வேலையை முடித்துக்கொண்டு மிகவும் களைப்போடு வீட்டிற்குத் திரும்பிய கலாமின் தாயார் ஆஷியம்மா, தன்னுடைய கணவர் ஜெய்னுலாய்தீனும் பிள்ளைகளும் மிகவும் பசியோடு இருப்பதைப் பார்த்துவிட்டு, அவரச அவரசமாக அவர்களுக்கு ரொட்டி சுட்டித் தந்தார். தான் சுட்ட ரொட்டிகளை ஆஷியம்மா முதலில் தன் கணவருக்குத் தான் வைத்தார்.
அவர் சுட்ட ரொட்டிகள் மிகவும் கருகிப் போயிருந்தன. ஆனாலும் கலாமின் தந்தை அவற்றைப் பற்றி எதுவும் சொல்லாமல், சுவைத்துச் சாப்பிட்டார். கலாம் இதைப் பார்த்துக்கொண்டே இருந்தார். இதற்கு நடுவில் தான் சுட்டுத் தந்த ரொட்டிகள் கருகிப் போகியிருப்பதை அறிந்த ஆஷியம்மா தன்னுடைய கணவரிடத்தில் வந்து, “தெரியாமல் நடந்துவிட்டது; மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றார். ஜெய்னுலாய்தீன் அதற்கு, “பரவாயில்லை; எனக்குக் கருகிய ரொட்டிகள்தான் மிகவும் பிடிக்கும்” என்றார். அவர் இவ்வாறு சொன்னதைக் சிறுவன் கலாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
பின்னர் கலாமும் அவருடைய உடன்பிறப்புகளும் தங்களது தாயார் சுட்டுத் தந்த ரொட்டிகளைச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கப் போனார்கள். தூங்கும்பொழுது எப்பொழுதும் தன் தந்தையருகே தூங்கும் கலாம் அவரிடம், “அப்பா! உங்களுக்குக் கருகிய ரொட்டி பிடிக்காது என்று எனக்கு நன்றாகத் தெரியும். பிறகு எதற்கு அம்மா கருகிய ரொட்டிகளைச் சுட்டித் தந்தபொழுது, ‘எனக்குக் கருகிய ரொட்டிகள்தான் மிகவும் பிடிக்கும்’ என்று சொன்னீர்கள்” என்றார். “மகனே கலாம்! உன் அம்மா பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு மிகவும் களைப்போடு வந்து உணவு தயாரிக்கின்றார். அப்படியிருக்கும்பொழுது, அவர் தயாரித்துத் தரும் உணவில், எப்போதாவது கருகிப்போய் வரும் ரொட்டியைப் பெரிதுபடுத்துவதா..? மேலும் கருகிப்போய் வரும் ரொட்டி என்னைக் காயப்படுத்தாது; ஆனால் நான் பயன்படுத்தும் கடினமான வார்த்தைகள் உன் அம்மாவைக் காயப்படுத்தும் அல்லவா! அதனால்தான் நான் உன் அம்மாவிடம் அவ்வாறு சொன்னேன்” என்றார் கலாமின் தந்தை.
ஆம், குடும்பமாக வாழும் நாம், குடும்பத்தில் இருக்கின்ற ஒருவர் செய்யும் தவற்றைப் பெரிதுபடுத்தாமல், அவரைப் பொறுத்துக்கொண்டு, மன்னித்து (கொலோ 3: 13) ஏற்றுக்கொண்டு வாழ்கின்றபோது, அதைவிட மகிழ்ச்சியான செயல் வேறெதுவும் இல்லை. இன்று நாம் திருக்குடும்பத் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம். ஆண்டின் இறுதி ஞாயிறான இன்று நாம் கொண்டுகின்ற இத்திருவிழா நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
Comments are closed.