டிசம்பர் 29 : நற்செய்தி வாசகம்

பிற இனத்தார்க்கு வெளிப்பாடு அருளும் ஒளி.

பிற இனத்தார்க்கு வெளிப்பாடு அருளும் ஒளி.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-35

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். “ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை” என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.

அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது. சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, “ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில், மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” என்றார்.

குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

————————————————————————

“அன்பு கொள்வோர் ஒளியில் நிலைத்திருக்கின்றனர்”

கிறிஸ்து பிறப்பின் எண்கிழமை புதன்கிழமை

I 1 யோவான் 2: 3-11

II லூக்கா 2: 22-35

“அன்பு கொள்வோர் ஒளியில் நிலைத்திருக்கின்றனர்”

அன்பை மட்டுமே கொடுக்கப் படைக்கப்பட்டிருக்கின்றோம்:

தன்முன்னேற்றப் பேச்சாளர் ஒருவர் ஒரு கல்லூரியில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் தன்னுடைய உரையைத் தொடங்குவதற்கு முன்பாக ஓர் ஆரஞ்சுப் பழத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதை மாணவர்களிடம் காட்டி, “இது என்ன?” என்றார். “ஆரஞ்சுப் பழம்” என்று மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் பதில் சொன்னதும், முன் வரிசையில் இருந்த ஒரு மாணவரிடம் அவர், “இந்த ஆரஞ்சுப் பழத்தைப் பிழிந்தால் என்ன வரும்?” என்றார். “ஆரஞ்சு ஜூஸ்” என்று அந்த மாணவன் சொல்லிவிட்டு அமர்ந்தான்.

“மிகச் சரியாகச் சொன்னாய்” என்று அந்த மாணவனைப் பாராட்டிவிட்டுப் பேச்சைத் தொடந்த பேச்சாளர், “ஆரஞ்சுப் பழத்திலிருந்து ஆரஞ்சு ஜூஸ்தான் வரும். ஆப்பிள் ஜூஸோ, மாதுளை ஜூஸோ வருவதில்லை. அது போன்றுதான், மனிதர்கள் அன்பு செய்வதற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றார்கள். அதனால் அவர்களை மற்றவர்கள் கசக்கிப் பிழிகின்றபோது, காயப்படுத்துகின்றபோது அன்பு மட்டுமே அவர்களிடமிருந்து வரவேண்டும். இதுதான் நான் உங்களுக்குச் சொல்ல வந்த செய்தி. நன்றி வணக்கம்” என்று சொல்லி இருக்கையில் அமர்ந்துகொண்டார்.

ஆம், மனிதர்களாகிய நாம் அன்பு செய்வதற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றோம். அப்படியிருக்கையில் நாம் வெறுப்பையும் சினத்தையும் உமிழ்ந்தோம் எனில், அது நமக்கு அழகில்லை. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ்கின்றபோது, என்னென்ன ஆசிகளைப் பெறுகின்றோம் என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

கடவுளை அன்பு செய்வதற்குப் பல வழிகள் இருந்தாலும், மிகச் சிறந்த வழி, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதுதான் (யோவா 14:15). கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடியாமல், அவரை அன்பு செய்வதாகச் சொல்வது போலித்தனம்.

இது குறித்து யோவான், இன்றைய முதல் வாசகத்தில் கூறும்போது, கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்தால், அவரை நாம் அறிந்துகொண்டோம் என்பது உறுதியாகத் தெரியும் என்றும், அன்பு அவர்களிடம் நிறைவடையும் என்றும், அவர்கள் ஒளியில் நிலைத்திருப்பர் என்றும் கூறுகின்றார்.

நற்செய்தி வாசகத்தில், குழந்தை இயேசுவை அதனுடைய பெற்றோர் கோயிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கின்றபோது, அதனைத் தன் திருகையில் ஏந்திய சிமியோன், “இக்குழந்தை பலரின் எழுச்சிக்குக் காரணமாக இருக்கும்” என்கிறார். பலரின் எழுச்சி என்றால், அவரது நம்பிக்கைகொண்டு, அவரை அன்பு செய்வோருடைய எழுச்சிக்கு அவர் காரணமாக இருப்பார் என்று சொல்லலாம். ஆதலால், நாம் இயேசுவின் அன்புக் கட்டளையைக் கடைப்பிடித்து, அவரை அன்பு செய்து, அவர் தரும் ஆசிகளைப் பெறுவோம்

Comments are closed.