இருள் நீக்கி ஒளிரும் இடமாக திகழ..
ரோமேனா தலத்திருஅவை ஆலயத்தின் மூன்று வளைவுகளில் உள்ள சாளரங்களின் வழியாக ஒளி ஊடுருவி வெளிச்சம் தருவது போல நற்செய்தியின் ஒளியை நம் உள்ளத்தில் ஊடுருவவும், இருளை நீக்கி ஒளிரச் செய்யவும் வரவேற்பு, குணப்படுத்துதல், மற்றும் சகோதரத்துவம் என்னும் மூன்று பண்புகள் நமக்குத் தேவை என்று வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 23 வியாழன் அன்று வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் Arezzo வின் ரோமேனா (Romena) மற்றும் நயீன் (Nain) சகோதர குழுக்களைச் சார்ந்த ஏறக்குறைய 500 பேரைச் சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ரோமேனோ தலத்திரு அவை ஆலயம், திருப்பயணிகள் தங்கி இளைப்பாறவும், ஆறுதல் பெறவும், தங்களைப்பற்றி சிந்தித்துப் பார்க்கவும், கவலைகளைப் பகிர்ந்து கொள்ளும் இடமாகவும் திகழ்கின்றது என்றும் கூறினார்.
திருப்பயணிகளுக்கான இடமாக இருந்த இப்பகுதியானது தூய ஆவியின் ஆற்றலால், சோர்ந்து போனவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகிய அனைவரும், இயற்கையின் அழகு மற்றும் அமைதியின் அழகை சுவாசிக்கக் கூடிய இடமாகவும், சந்திப்பிற்கும் சகோதரத்துவத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய ஓர் இடமாகவும் காட்சியளிப்பதற்காக அச்சகோதரர்களுக்குத் தன் வாழ்த்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை.
கடவுளைத் தேடல், வாழ்க்கைப் பாதைக்கான நல்வழியைக் கண்டுபிடித்தல் போன்றவற்றிற்கு இவ்விடம் உதவுகின்றது என்றும் ஆன்மிக ஆலோசனை, அருகிருப்பு, அன்பு, ஆதரவு போன்றவற்றை வழங்கும் இடமாகவும் திகழ்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.