மக்களின் மாண்பை மேம்படுத்தும் அர்ப்பணிப்பை புதுப்பிக்கும் பணி
தகவல்தொடர்பு என்பது பகிர்தல், ஒற்றுமையை உருவாக்குதல், சுவர்களை அல்லாது பாலங்களை உருவாக்குதல் என்றும், மக்களின் மாண்பை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை புதுப்பித்தல், நீதி, உண்மை, சட்டம் மற்றும் கல்வியில் இணை பொறுப்புடன் செயல்படுதல் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 23 வியாழன் அன்று வத்திக்கானின் சாந்தா கிளமெந்தினா அறையில் இத்தாலிய கத்தோலிக்க வார இதழ்களின் பிரதிநிதிகள், இத்தாலிய பத்திரிக்கை ஒன்றியத்தின் உறுப்பினர்கள், “கோரல்லோ” மற்றும் “ஏயார்ட் சங்கங்களின் உறுப்பினர்கள் என ஏறக்குறைய 350 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இளம் தலைமுறைகளை இணைத்தல், இளையோர் மற்றும் முதியோர்க்கு இடையிலான உரையாடலை ஊக்குவித்தல் இக்காலத்தில் அதிகமாகத் தேவைப்படுகின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள் என்று இயேசு வலியுறுத்துவது போல, முன்மதி மற்றும் எளிய மனம் கொண்டவர்களாக இருப்பது மிகவும் முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.
இந்த மனநிலையில் டிஜிட்டல் உலகில் மூழ்கி இருக்கும் மக்களுக்கு அடிப்படை கல்வி அறிவு வழங்கப்பட வேண்டும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இது ஒரு எளிய பணி அல்ல என்றும், சமூகத்தின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு முக்கியமான பிரச்சினை என்றும் குறிப்பிட்டார்.
முன்மதி உடையவர்களாக இருப்பதற்கு கல்வி பெற வேண்டும் என்பதில்லை மாறாக அதனை வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டும் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இதயத்திலிருந்தும் மனதிலிருந்தும் ஒன்றாகப் பிறந்து, உருவாகும் ஒரு அணுகுமுறையே முன்மதி என்றும் ஊடகப் பணியாளர்கள் ஒற்றுமையின் நூல்களை நெசவு செய்பவர்களாக இருக்கவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
Comments are closed.