நவம்பர் 17 : நற்செய்தி வாசகம்

மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.

மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 26-37

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நோவாவின் காலத்தில் நடந்தது போலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும். நோவா பேழைக்குள் சென்ற நாள் வரை எல்லாரும் திருமணம் செய்துகொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது. அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள்; வாங்கினார்கள், விற்றார்கள்; நட்டார்கள், கட்டினார்கள்.

லோத்து சோதோமை விட்டுப் போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன. மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.

அந்நாளில் வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம். லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். தம் உயிரைக் காக்க வழி தேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர்.

நான் உங்களுக்குச் சொல்கிறேன்; அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.”

அவர்கள் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, இது எங்கே நிகழும்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

————————————————————————-

“கடவுளை அறியாத மனிதர் அனைவரும் அறிவிலிகள்”

பொதுக்காலம் முப்பத்து இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை

I சாலமோனின் ஞானம் 13: 1-9

II லூக்கா 17: 26-37

“கடவுளை அறியாத மனிதர் அனைவரும் அறிவிலிகள்”

கடவுள் இல்லையென்று மறுத்தவனின் அழிவு:

அவர் ஒரு பெரிய பேச்சாளர் என்பதால், அவருக்கென்று ஒரு இரசிகர் கூட்டம் இருந்தது. கடவுள் நம்பிக்கை இல்லாத அந்தப் பேச்சாளர் ஒருநாள் தன் இரசிகர்களிடம், “கடவுள் என்று ஒருவர் கிடையவே கிடையாது; அவரை நம்புகிறவன் முட்டாள். ஒருவேளை கடவுள் இருப்பது உண்மையானால் அருகே உள்ள மரத்தில் இப்போது நான் மோதுகின்றான். அந்த மரம் என்மேல் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தினால், நான் கடவுள் இருக்கின்றார் என்று நம்புகிறேன்” எனச் சவால்விட்டார்.

இதற்குப் பிறகு அவர் அருகில் இருந்த ஒரு மரத்தில் ஓங்கி மோதினார். அவர் மோதிய வேகத்தில் மரத்தில் இருந்த காய்ந்துபோன கிளை மேலிருந்து கீழே விழுந்ததே அன்றி, அவர் எந்தவொரு பாதிப்பும் இன்றித் திடகாத்திரமாகவே இருந்தார். இதனால் அவர் தன் இரசிகர்களிடம், “கடவுள் என்ற ஒருவர் இல்லை என்பது இப்போது நிரூபணம் ஆகிவிட்டது!” என்று வெற்றிக் களிப்பில் கூறிவிட்டுத் தன் வீட்டிற்குச் சென்றார்.

அவர் வீட்டிற்குச் சென்றதும் தன் தோள்பட்டை லேசாக வலிப்பதை உணர்ந்தார். ‘என்ன ஆயிற்று? என்று அவர் வலி ஏற்பட்ட பகுதியை உற்றுப் பார்த்தபோது, அப்பகுதி நன்றாக வீங்கி இருக்கக் கண்டார். உடனே அவர் சிகிச்சை பெறுவதற்காகத் தனக்குத் தெரிந்த மருத்துவரிடம் சென்றார். அந்தோ பரிதாபம்! அவர் போகும் வழியிலேயே அவருடைய உயிர் பிரிந்தது.

உண்மையில் நடந்தது இதுதான்: கடவுள் இல்லவே இல்லை என்பதை நிரூபிப்பதற்காக அவர் மரத்தில் மோதியபோது, விஷப் பூச்சி ஒன்று அவரைக் கடித்துவிட்டது. அதனாலேயே அவருடைய உயிர் பிரிந்தது.

ஆம், இந்த மனிதர் கடவுள் இல்லவே இல்லை என நிரூபிக்க முயன்றார். ஆனால், கடவுள் ஒரு சிறு பூச்சியின் மூலம் தான் இருக்கின்றேன் என்பதை நிரூபித்தார். சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், கடவுளை அறியாத மனிதர் அனைவரும் இயல்பிலேயே அறிவிலிகள்” என்கிறது. ஏன் அவர்கள் அறிவிலிகள் என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

‘கடவுளை அறியாத மனிதர் அனைவரும் இயல்பிலேயே அறிவிலிகள் ஆனார்கள்” என்ற வரிகளுடன்தான் இன்றைய முதல் வாசகம் தொடங்குகின்றது. கடவுளை அறியாத மனிதர் ஏன் அறிவிலிகள் எனில், அவர்கள் கண்ணுக்குப் புலப்படும் நல்லவற்றினின்று இருப்பவராம் கடவுளைக் கண்டு கொள்ள மறந்தால்தான். இவ்வார்த்தைகளுக்கு அர்த்தம் தருவதாய் இருக்கின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.

நற்செய்தியில் இயேசு கடவுளைப் பற்றிய அறிவோடு இருப்பவர்கள் மேலே எடுத்துக் கொள்ளப்படுவர், கடவுளைப் பற்றிய அறிவில்லாதவர் விட்டுவிடப் படுவர் என்கிறார். இதற்கு அவர் எடுத்துக்காட்டாக நோவாவின் காலத்திலும், லோத்தின் காலத்திலும் நடந்தவற்றைக் குறிப்பிடுகின்றார். கடவுளைப் பற்றிய அறிவோடு இருந்ததால் நோவா வெள்ளப்பெருக்கிலிருந்து காப்பாற்றார். அந்த அறிவில்லாத மற்றவர்களோ அழிந்து போனார்கள். மேலும் லோத்தின் மனைவி சோதோம் நகர்மீது இருந்த பற்றினால், அதைத் திரும்பிப் பார்த்தார். அதனால் அழிந்து போனார்கள். இவ்வாறு கடவுளைப் பற்றி அறிந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். அந்த அறிவில்லாதவர்கள் அழிந்து போனார்கள்.

Comments are closed.