நவம்பர் 15 : நற்செய்தி வாசகம்

கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே

கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19

அக்காலத்தில்

இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.

ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்துத் தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.

அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய் நீங்கிற்று.

அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.

இயேசு அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.

பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

————————————————————————-

அவர் அவருக்கு நன்றி செலுத்தினார்

பொதுக்காலம் முப்பத்து இரண்டாம் வாரம் புதன்கிழமை

I சாலமோனின் ஞானம் 6: 1-11

II லூக்கா 17: 11-19

அவர் அவருக்கு நன்றி செலுத்தினார்

நாய்க்கு நன்றி தெரிவித்த தாய்:

ஓர் ஏரியில் சிலர் படகு சவாரி செய்துகொண்டிருந்தார்கள். அந்தப் படகில் ஒரு தாயும், அவருடைய பத்து வயது மகளும் சவாரி செய்தார்கள். மகள் ஓரிடத்தில் நிற்காமல், துருதுருவென இங்கும் அங்கும் அலைந்துகொண்டிருந்தாள். அவளைப் பிடித்துத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க, அந்தத் தாய் எவ்வளவோ முயற்சி செய்தாள். அப்படியும் முடியாததால், மகளை அவளது விருப்பம்போல் விளையாட விட்டாள் தாய்.

படகு சவாரி நன்றாகச் சென்றுகொண்டிருந்தது. திடீரென்று இங்கும் அங்கும் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஏரிக்குள் தவறி விழுந்துவிட்டாள். அதைப் பார்த்து அதிர்ந்து போன தாய் ஓவென அழத் தொடங்கிவிட்டாள்.

அந்தத் தாயும் மகளும் சவாரி செய்த அதே படகில் பெரியவர் ஒருவர் இருந்தார். அவரிடம் ஓர் உயரக நாய் இருந்தது. அவர் அந்த நாயை நோக்கி வித்தியாசமான ஓர் ஒலி எழுப்பி, குழந்தை தவறி விழுந்த பகுதியைச் சுட்டிக்காட்டினார். உடனே அந்த நாய் ஏரிக்குள் வேகமாகக் குதித்து, குழந்தையை, அது அணிந்திருந்த ஆடையைத் தன் வாயில் கவ்வியவாறு பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தது.

ஏரிக்குள் விழுந்த தன் மகள் உயிரோடு தனக்குத் திரும்பக் கிடைத்ததை எண்ணித் தாய் அவளைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். கூடவே, அவள் தன் மகளைப் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்த பெரியவரின் உயரக நாயையும் கட்டித் தழுவி முத்தமிட்டு, தன் நன்றியுணர்வை வெளிப்படுத்தினார்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற தாய், தன் மகளின் உயிரைக் காப்பாற்றிய நாயைக் கட்டித் தழுவி முத்தமிட்டு, தன் நன்றியுணர்வை வெளிபடுத்தியது பாராட்டிற்குரியது. நற்செய்தியில் இயேசு பத்து பேருக்குக் நலமளித்திருந்தாலும், அதில் ஒருவர் மட்டும் இயேசுவிடம் திரும்பி வந்து அவருக்கு நன்றி செலுத்துகின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

யூதச் சமூகத்தில் தொழுநோயாளர்களின் நிலை மிகவும் பரிதாபமானது. அவர்கள் தீண்டத் தகாதவர்களாகக் கருதப்பட்டதால் ஊருக்கு வெளியே வைக்கப்பட்டார்கள் (லேவி 13:46; எண் 5:2,3).

இப்படி ஊருக்கு வெளியே தீண்டத்தகாதவர்களாக வைக்கப்பட்டிருந்த பத்துத் தொழுநோயாளர்கள் ஆண்டவர் இயேசு அவ்வழியாக வந்ததும், அவரைப் பார்த்து, “ஐயா இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பு வேண்டுகிறார்கள். இயேசு, சாலமோன் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் குறிப்பிடப்படுவது போல, ‘எல்லாரும் ஒன்று என எண்ணிக் காப்பவர்”. அதனால் அவர் ஒரு சமாரியர் உட்பட பத்துத் தொழுநோயாளரையும், “நீங்கள் போய் உங்களைக் குருக்களின் காண்பியுங்கள்” என்கிறார். ஏனெனில், ஒருவருக்குத் தொழுநோய் இல்லை என்பதைக் குருக்கள் சான்றளித்தால் மட்டுமே, அவரை யூதச் சமூகம் ஏற்றுக்கொள்ளும்.

இயேசு சொன்னதுபோல் பத்துப் பேரும் தங்களைக் குருக்களின் காண்பிக்கச் செல்கின்றபோது, ஒருவர் தன்னுடைய நோய் நீங்கியிருப்பதை உணர்ந்து, இயேசுவுக்கு நன்றி செலுத்த வருகின்றார். அவரோ ஒரு சமாரியர். இயேசு தன்னிடம் திரும்பி வந்த சமாரியரிடம், “உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்கிறார். இதன்மூலம் இயேசு உடல் நலம் மட்டுமல்ல, உள நலமும் அளிக்கின்றார். ஆம், நாம் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றியுடையவர்களாய் இருக்கும்போது உடல் நலம் மட்டுமல்ல, உள நலமும் பெறுகின்றோம் என்பதே உண்மை.

Comments are closed.