இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்04.11.2023 (சனி)

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.

1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,

ஆன்மாக்களின் மாதமான இந்த நவம்பர் மாதம் முழுவதும் நமது இறந்த உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்களின் ஆன்மாக்களுக்காக நாம் விஷேசமாக திருப்பலி ஒப்புக்கொடுத்தல், செபமாலை செபித்தல், ஏழைகளுக்கு உணவு அளித்தல் ஆகியவற்றை அடிக்கடி செய்வதன் மூலம் உத்தரிய நிலையிலிருக்கும் ஆன்மாக்களை ஆண்டவரின் விண்ணக வீட்டிற்கு அனுப்பும் அற்புத பணியினை செய்ய வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,

“கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை.” என திருத்தூதர் பவுல் கூறுகிறார்.

ஆண்டவரின் அழைப்பை உணர்ந்தவர்களாக இருக்கவும், அவர் கொடுத்த கொடைகளை நல்லவிதத்தில் பயன்படுத்தவும் இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தியில், “தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

தற்பெருமையை நாம் விட்டுவிட்டு தாழ்ச்சியைக் கைக்கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,

கர்தினாலும், இன்றைய புனிதருமான புனித சார்லஸ் பொரோமியோ வயிற்றுப் புண், அல்சர் ஆகியவற்றில் இருந்து குணம் பெற பாதுகாவலராவார்.

அல்சர் நோயினால் அவதியுறுவோர் அவற்றிலிருந்து குணம் பெற இப்புனிதரின் பரிந்துரையை நாடி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,

இந்த வாரம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.