இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
23.10.2023
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய ஞாயிறு திருப்பலி முதல் வாசகத்தில், “நானே ஆண்டவர்; வேறு எவருமில்லை; என்னையன்றி வேறு கடவுள் இல்லை.” என இறைவாக்கினர் எசாயா வழியாக ஆண்டவர் கூறுகிறார்.
கிறித்தவர்கள் பிற தெய்வங்களை வழிபடுவது மட்டும் பாவமல்ல. நல்ல நேரம் பார்ப்பது, ஜோசியம், ஜாதகம் பார்ப்பது, குறி கேட்பது ஆகியவையும் பெரிய பாவங்களாகும். இவற்றை நம் வாழ்வில் செய்த தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பினை நாடி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்
“வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள்.” என பவுலடியார் கூறுகிறார்.
ஆண்டவரின் இறைவாக்கே நமது பாதையின் ஒளிவிளக்கு. அதை இறுக பற்றிக் கொண்டு உலகின் சுடர்களாகத் துலங்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நாம் நமது வாழும் நாட்டின் அரசின் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட வேண்டும். படைத்த ஆண்டவரின் வார்த்தைகளுக்கும் முழுமையாக கட்டுப்பட வேண்டும்.
நாட்டின் நல்ல குடிமகனாகவும், ஆண்டவரின் சிறந்த பிள்ளையாகவும் நாம் வாழ வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த புனிதரான இன்றைய புனிதர் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இருபதாம் நூற்றாண்டில் கிறித்துவத்தை குடும்பங்களில் இருந்து பரஸ்பர அன்பின் மூலம் வளர்த்தெடுப்பதில் மிக்க ஆவல் கொண்டார். புனிதரின் விருப்பம் முழுமையாக நிறைவேற வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.