அக்டோபர் 23 : நற்செய்தி வாசகம்
நீ சேர்த்து வைத்தவை யாருடையவை ஆகும்?
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 13-21
கூட்டத்தில் இருந்த ஒருவர் இயேசுவிடம், “போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்” என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, “என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?” என்று கேட்டார். பின்பு அவர் அவர்களை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றார்.
அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: “செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!’ என்று எண்ணினான். ‘ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்’. பின்பு, “என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு எனச் சொல்வேன்” என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————————
லூக்கா 12: 13-21
பொருளாசையே எல்லாத் தீமைகட்கும் ஆணிவேர்
நிகழ்வு
ஒரு சிற்றூரில் இருந்த ஒரு பெரியவரும் அவருடைய பேரனும் ஒருநாள் மாலைவேளையில் காலார நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். இடையிடையே பேரன் பெரியவரிடம் (தாத்தாவிடம்) பல கேள்விகளைக் கேட்டான். எல்லாக் கேள்விகட்கும் அவர் மிகப் பொறுமையாகப் பதிலளித்து வந்தார்.
இடையில் ஒரு மைதானம் வந்தது. அந்த மைதானத்தில் பேரனுடைய வயதை சிறுவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்துவிட்டு அவன், “தாத்தா! இந்த உலகத்தில் பிறந்த எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்குத்தானே பிறந்தார்கள். பிறகு எதற்கு ஒருசிலரைத் தவிர பலரும் கவலையோடு இருக்கின்றார்கள்?” என்று கேட்டான்.
பெரியவர் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைத் தன் பேரனிடம் சுட்டிக்காட்டி அவனிடம், “தம்பி! இவர்கள் இப்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள் அல்லவா! இன்னும் கொஞ்ச நேரத்தில் இவர்களிடம் இருக்கும் மகிழ்ச்சி எப்படிப் பறிபோகின்றது என்று பார்!” என்று சொல்லிவிட்டு, தன்னுடைய சட்டைப் பையில் வைத்திருந்த சில்லறைக் காசுகளை எடுத்து, அவர்கள் முன்னம் வீசினார். அவற்றைப் பார்த்ததும் அதுவரைக்கும் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் தங்கட்கு முன்னம் விழுந்த சில்லறைக் காசுகளைப் எடுக்கவேண்டும் என்ற முனைப்பில் ஒருவரை ஒருவர் பிடித்து இழுத்துக்கொண்டும் தள்ளிவிட்டுக் கொண்டும் சில்லறைக் காசுகளை எடுத்தார்கள். இதனால் கொஞ்ச நேரத்தில் அந்த இடம் போர்க்களமானது.
இதற்குப் பின்பு பெரியவர் தன்னுடைய பேரனிடம் பேசத் தொடங்கினார்; “தம்பி! இவ்வளவு நேரம் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த இவர்கள். இப்பொழுது மிகவும் வருத்தத்தோடும் உம்மென்றும் இருக்கின்றார்களே! இதற்குக் காரணம் என்னவென்று சொல்?” “இவர்கட்கிடையே ஏற்பட்ட சண்டைதான் இவர்கள் இப்படி வருத்தத்தோடு இருப்பதற்குக் காரணம்” என்றான் பேரன். “அதுசரி, இவர்களிடம் சண்டை வருவதற்குக் காரணம் என்ன? அதைச் சொல்” என்றார் பெரியவர். “அதிகமான சில்லறைக் காசுகளை எடுக்கவேண்டும் என்ற பேராசைதான் இவர்கள் இப்படி மகிழ்ச்சியில்லாமல் இருப்பதற்குக் காரணம்” என்றான் பேரன். “மிகச் சரியாகச் சொன்னாய். மகிழ்ச்சியாக இருக்கப் பிறந்த மனிதர்கள் மகிழ்ச்சியில்லாமல் இருக்கக் காரணம், அவர்களிடம் இருக்கும் பேராசைதான்” என்று முடித்தார் பெரியவர்.
ஆம், இவ்வுலகில் மனிதரிடம் இருக்கும் மகிழ்ச்சியை எடுத்துக்கொள்ளும் ஒரு திருடன் இருக்கின்றான் என்றால், அவனுக்குப் பெயர்தான் பேராசை. பேராசையோடு வாழ்பவர்கள் எப்படி மகிழ்ச்சியை இழக்கின்றார்கள் என்பதை மேலே உள்ள நிகழ்வு மிக அருமையாக எடுத்துக் கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் பேராசையோடு இருக்கும் மனிதன் எப்படி அழிந்துபோகின்றான் என்பதைக் குறித்துப் பேசுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு என்ன பாகம் பிரிப்பவரா?
நற்செய்தியில் இயேசு மக்கள் கூட்டத்திடம் பேசிக்கொண்டிருக்கையில், கூட்டத்திலிருந்து ஒருவர் அவரிடம், “போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதரர்க்குச் சொல்லும்” என்கின்றார். இவ்வாறு கேட்ட அந்த மனிதரிடம் இயேசு பேசியதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னம், அந்த மனிதர் ஏன் இயேசுவிடம் இதைச் சொல்லவேண்டும் என்று குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.
வழக்கமாக யூத இரபிகள் குடும்பங்களில் ஏற்படும் பல்வேறு விதமான சிக்கல்களைத் தீர்த்து வைப்பது வழக்கம். இயேசு, மக்களால் ஓர் இறைவாக்கினரைப் போன்று, போதகரைப் போன்று கருதப்பட்டதால், அந்த மனிதர் இயேசுவிடம் இப்படியொரு சிக்கலைச் சொல்கின்றார். இயேசு அந்த மனிதரிடம் உடனடியாகச் சொல்லும் வார்த்தைகள், என்னை உங்கட்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவரகவோ அமர்த்தியவர் யார்?” என்பதாகும். இயேசு அவரிடம் அவ்வாறு சொல்லக் காரணம், அவர் பேராசையோடு இருந்தார் என்பதால்தான். பேராசையோடு இருப்பவரிடம் என்ன பேசினாலும் பயனில்லை என்பதால்தான் இயேசு அவரிடம் அவ்வாறு சொல்கின்றார்.
எல்லாத் தீமைகட்கும் ஆணிவேரானா பொருளாசை
இயேசு பேராசையோடு இருந்த மனிதர்க்குப் பதிலளித்துவிட்டு, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள்” என்கின்றார். அதற்கு அவர் ஓர் உவமையையும் சொல்கின்றார். பேராசைக்கு இடங்கொடாதவாறு இருக்கவேண்டும் என்று இயேசு சொல்லக் காரணம், அதுதான் எல்லா வகையான தீமைகட்கும் ஆணிவேர் என்பதால் ஆகும். இதைப் புனித பவுல் திமொத்தேயுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் மிக அழகாகச் சொல்கின்றார். (1 திமொ 6: 10).
இன்றைக்குப் பலர் பணம், பொருள் சேகரிக்கவேண்டும் என்ற முனைப்பில் கடவுளை மறந்து, குடும்பத்தை மறந்து, மாடாய் உழைக்கின்றார்கள். ஆனால், அவர்கள் எதற்காக உழைத்தார்களோ அது கிடைத்தபிறகு அதை அனுபவிக்க முடியாத வேடிக்கை மனிதர்களாய் மாறிப்போய்விடுகின்றார்கள்.
ஆகையால், நாம் உலகச் செல்வத்தின் நிலையாமை உணர்ந்து, நிலையான செல்வமாம் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழ்வது மிகவும் இன்றியமையாதது.
சிந்தனை
‘நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் நம்முடைய இன்பத்திற்காகவே எல்லாவற்றையும் நிறைவாக அளிக்கும் கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்கவேண்டும்’ (1 திமொ 6: 17) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் நிலையற்ற செல்வத்தில் அல்ல, நிலையான செல்வத்தில் நம்பிக்கை வைத்து, இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.